இரண்டாம் உலகப்போர் சமயம். 1942 மார்ச் மாதம் ஜப்பானிய போர் விமானங்கள் அந்தமானின் வானில் வட்டமிட்டன, போர்க் கப்பல்கள் தீவை சுற்றி வளைத்தன. அடுத்த சில தினங்களில் ஜப்பானிய படைகள் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமான் தீவை கைப்பற்றியது.

பின்னர் அந்தமான் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திடம்(INA) ஒப்படைக்கப்பட்டது. ஜப்பான் அரசுடன் நட்பு கொண்டிருந்த போஸ் 1944 ல் அந்தமான் வந்து மூவர்ண கொடியேற்றி பேசுகையில் “இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டமாக அந்தமான் சிறை கைப்பற்றப் பட்டிருக்கிறது. இது ஒரு புண்ணிய பூமியாகிவிட்டது” என்றார்.

அந்தமான் சிறையை இந்தியாவின் பாஸ்டில்(Bastille) என அவர் வர்ணித்தார். புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசிலுள்ள பாஸ்டில் சிறைச்சாலைதான் முதலில் தகர்க்கப்பட்டது.

எண்ணற்ற விடுதலை வீரர்களின் ரத்த சுவடு பதிந்த இந்த சிறை ஏதோ ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. செல்லுலார் சிறை அல்லது காலா பாணி என்றழைக்கப்படும் இந்த கொடூர ஜெயில் உருவாக 1887 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம்(Sepoy Mutiny) எனப்படும் முதல் இந்திய சுதந்திர போரின் விளைவுகளே வித்திடப்பட்டது.

மக்கள் மத்தியில் புரட்சியை உண்டாக்கியவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த பல அரசியல் தலைவர்கள் பல்லாயிரம் மைல் கடந்திருக்கும் இத்தனிமை சிறைக்கு கடத்தப்பட்டனர். இதன் வழியாக மக்களிடம் சிறை அச்சத்தையும், புரட்சியாளர்களை கட்டுபாட்டிலும் வைக்கலாம் என ஆங்கிலேயா அரசு எண்ணியது.

இருள் பக்கங்களை கொண்ட இந்த சிறையில் சவார்கர் சகோதரர்கள், பரிந்திர குமார் கோஷ், பதுகேஷ்வர் தத் போன்ற முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். தூக்கு மேடையில் எத்துணையோ தியாக உயிர்கள் பலியாகியுள்ளன. ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து போராடியவர்கள் அடித்தே கொல்லப்பட்டனர்.

Penal Settlements

இதுபோன்ற குற்ற குடியிருப்புகள் 1787 ஆம் ஆண்டு காலத்திலேயே இந்தோனேசியா, சிங்கப்பூர் தீவுகளில் ஆங்கிலேயர்களால் கொடூர குற்றவளிகளுக்காக உருவாக்கப்பட்டது. இவ்வகையான குடியிருப்பு 1789 அந்தமான் தீவின் கார்ன்வாலிஸ் துறைமுகப் பகுதியில் கூட கட்டமைக்கப்பட்டது, பின்னர் கைதிகள் நோய்வய்பட்டத்தல் தண்டனைகுடியிருப்புகள் அத்தோடு கைவிடப்பட்டது.

இருப்பினும் சிப்பாய் கலகம், வங்க பிரிவினையின் போது கிளர்த்தெழுந்த புரட்சியாளர்கள் மற்றும் தீவிரவாத பற்றாளர்கள் ஆங்கிலேயரிடம் அச்சத்தை தோற்றுவித்தனர். இவர்களை பொது சமூகத்திலிருந்து விலக்கி நாடு கடத்துதலே ஒரே தீர்வு என பிரிட்டிஷ் அரசுக்கு பட்டது.

1858 மார்ச் மாதம் கொடுந்தண்டனை அளிக்கப்பட்ட 200 கைதிகள், கடற்படைப் பாதுகாப்புப் படையினர், கண்காணிப்பாளர் டேவிட் பேர்ரி(David Barry) ஆகியோர் ஆக்ரா சிறையின் வார்டனாக இருந்த டாக்டர் ஜே.பி.வாக்கர்(James Pattison Walker) தலைமையில் தெற்கு அந்தமானின் சாத்தம் தீவுக்கு அனுப்பபட்டனர்.

பிறகு கராச்சியிலிருந்து மற்றொரு குழு அந்தமானுக்கு அனுப்பபட்டது. 1874 க்குள் 9000 க்கும் மேற்பட்டவர்கள் அந்தமானின் தண்டனை குடியிருப்புகளுக்கு தீவாந்திர கைதிகளாக வந்தடைந்தனர். அந்தமானின் அடிமை வாழ்கையும் வேலை பளுவும் தாங்க முடியாமல் பல குற்றவாளிகள் அவ்வப்போது தப்பிக்க முயன்றனர்.

Tribe War

பாரக்பூரின் பதினான்காவது சுதேசி காலாட் படையைச் சேர்ந்த தத்தநாத் திவாரி என்பவர் தனது 130 சிப்பாய்களுடன் தப்பிச் சென்று விட்டார். பெருங்கடலை கடக்க இயலாததால் காட்டில் நுழைந்து ஓடினார்கள். ஆனால் அந்தமானின் கொடூரமான ஆதிவாசிகளிடம் சிக்கி எல்லோரும் கொல்லப்பட்டனர்.

அதிசயமாக திவாரியை மட்டும் ஆதிவாசிகள் கொல்லாமல் அவர்களுடன் ஒருவராய் சேர்த்துக் கொண்டனர். பழங்குடியின பெண்கள் இருவரை அவருக்கு திருமணம் கூட செய்து வைத்திருந்தனர்.

ஏற்கனவே தீவிற்கு வருபவர்களை விரட்டி அடிப்பது, கப்பல்களை தாக்குவது என பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சவாலாக அவர்கள் இருந்தனர். ஒருநாள் ஈட்டி உள்ளிட்ட கூர் ஆயுதங்களோடு தாக்குதல் தொடங்க தயாராவதை கண்டு திவாரி தப்பித்து மீண்டும் சிறையை அடைந்து நடந்ததை சொன்னார். Battle of Aberdeen என்ற அந்த போரில் ஏராளமான பழங்குடியினர் கொல்லப்பட்டனர், மற்றவர் காட்டில் பதுங்கினர்.

இது பழங்குடியினரை கட்டுபடுத்த ஒரு துவக்கமாக இருந்தது. ஆனால் கைதிகளில் பலர் குற்றவாளிகள் என்பதால் அவர்கள் தப்பிக்க முயல்வதை நிறுத்தவில்லை. 1000 கிமீ க்கும் மேல் கடந்து கடல் மார்க்கமாக தாய் நாட்டை அடைவது சாதாரண செயலல்ல. பிடிபட்டவர்கள் உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். கடலில் குதித்து தப்பிக்க முயன்றவர்கள் அக்கணமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தண்டனை குடியிருப்புகள் என்பது சிறையிலிருந்து வேறுபட்டது. இங்கு கைதிகள் ஒன்றாக பாதுகாவலர்கள் மத்தியில் அடைக்கப்பட்டு இருப்பார்கள். குறிபிட்ட காலத்திற்கு பிறகு இவர்கள் சுதந்திர சீட்டு வாங்கிக்கொண்டு அந்தமானில் தனியாக விவசாயம் செய்து வாழ கூட அனுமதி உண்டு. ஆனால் இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை, உண்மையில் பிடிக்கவில்லை என சொல்லலாம்.

இதற்கு ஒரு தீர்வு காண பிரிட்டிஷ் மேலிடம் விரும்பியது. 1890 காலகட்டத்தில் தாமஸ் கேடல் என்பவரால் 600 போர் கைதிகளுக்கான தனித்தனி சிறைகள் அமைக்க திட்டம் ஒன்றை வரையறை செய்யப்பட்டது. இதற்காக அட்லாண்டா முனையில் ஓரிடம் தேர்வு செய்யப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற கட்டுமான பணி முடிவுற்று 1906ல் சிறை பயன்பாட்டுக்கு வந்தது.

அருகிலிருந்த தீவுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கைதிகளையும் சேர்த்து எண்ணற்ற அடிமை கரங்களாலே இந்த பிரமாண்டம் பிணைக் கைதிகளுக்காக உருவானது. ஒரு கண்காணிப்பு மைய கோபுரத்தோடு  ஏழு நீல்வகை சிறைப்பிரிவுகள் கட்டப்பட்டது. மொத்தம் 696 தனிச்சிறைகள். 4 அடி அகல தாழ்வரத்தோடு ஒவ்வொரு சிறைக்கூண்டும் ஒற்றை ஜன்னல் கொண்டது.

சிறையின் ஏழு பிரிவுகளையும் இரவு, பகல் கண்காணிக்க காவலர்கள் அமர்த்தப்பட்டனர். சிறைச்சாலையில் மருத்துவமனை, ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிட வசதியான தூக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தன. இந்து, முஸ்லீம் கைதிகளுக்கு உணவு சமைக்க தனித்தனி சமையலறை அமைக்கப்பட்டிருந்தன.

Black terror

சூழலை சாதகமாக பயன்படுத்தி கைதிகளை சித்திரவதை படுத்த துவங்கினர் பிரிட்டிஷ் அதிகாரிகள். தேங்காய் நார்கள் உரிக்க வேண்டும், அதை கொண்டு கயிறு திரிக்க வேண்டும். எண்ணெய் பிழிய செக்குகளை அமைத்து கைதிகளை மாட்டுக்கு பதிலாக இழுக்க வைத்தனர். சோர்வடைந்து நிற்பவர்களை மாட்டை போல அடித்தனர்.

மாடுகள் எவ்வளவு முயன்றாலும் நான்கு பவுண்ட் அளவில் தான் எண்ணெய் எடுக்க முடியும், ஆனால் அந்தமான் கைதிகள் ஒரு நாளைக்கு 30 பவுண்ட் எடுத்தே ஆக வேண்டும். உடலை கசக்கி பிழியும் இச்செயலை முடிக்கவில்லை என்றால் அடி, உதை மரணமாக கிடைக்கும். கைதிகளுக்கு பிரம்பு/சவுக்கடி கொடுக்கவே முக்கோண வடிவ ஸ்டாண்ட் உள்ளே இருந்தது.

மிகக் குறைந்த உணவு அளித்து மலையைத் தகர்த்து சாலை அமைப்பது, சதுப்பு நிலங்களை நிரப்புவது, காடுகளை அழித்து சமபடுத்துவது, கட்டிட வேலை போன்ற கடுமையான வேலை கொடுக்கப்பட்டது. கொடூரமாக சித்திரவதை படுத்துவது மற்றும் கீழ்தரமாக நடத்தி அவமனபடுத்துவதன் மூலம் புரட்சியாளர்களின் மன வலிமையை குலைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

சிறையில் சாப்பாடும் மிக கேவலமாக இருந்தது. மழை நீர் மட்டும் தான் குடிப்பதற்கு. படுக்க எந்த தரைவிரிப்பும் கிடையாது. சிறைக் கைதிகள் ஒருவரோடு மற்றவர் பேச அனுமதியில்லை. சும்மாவே மற்ற சிறையை பார்க்க இயலாது, இதில் மாலை ஆனால் எவ்வித வெளிச்சமும் இருக்காது. ஒற்றை ஜன்னல் கொண்ட சிறையில் உணவு, சித்திரவதை தாண்டி தனிமையும் பெரும் தண்டனையாக அமைந்தது.

ஏற்கனவே தனிமைபடுத்திருந்த கைதிகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்தது. சுதந்திர எழுச்சி கொழுந்துவிடும் போதெல்லாம் அந்தமான் சிறையின் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. 1930-38 ல் விடுதலை போராட்டம் வலுபெற்ற போதெல்லாம் 379 தண்டனை கைதிகள் செல்லுலார் சிறைக்கு வந்தடைந்தனர்.

லாகூர் சதித்திட்டகாரர்கள், வாஹாபி புரட்சியாளர்கள், மலபார் கரையின் மோப்ளா கிளர்ச்சியாளர்கள், ஆந்திராவின் தம்பா போராட்டக்காரர்கள், மணிப்பூர் சுதந்திரப் போராளிகள், பர்மாவின் கைதிகள் என பலர் இங்கு அடைக்கப்பட்டனர். சிறைக் கைதிகள் தங்கள் கௌரவத்தை இழந்து அதிகாரிகளுக்குத் தலைவணங்க அடியோடு மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கைதிகளை பயங்கரமாக தாக்கினர்.

கதர் கட்சியை சார்ந்த சிலர் அதிகாரிகளுக்கு அடிபணிய மறுத்து எதிர்ப்பை கட்டினர். அன்று இரவே அவர்கள் ஏழு பேரை கூண்டிலே வைத்து கொடூரமான முறையில் அடித்துக் கொன்றனர். இந்து பூஷன்ராய் என்ற இளைஞன் அவமதிப்பையும் சித்ரவதையையும் சகிக்க முடியவில்லை என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

ஜெயிலர் டேவிட் பேர்ரி கைதிகளிடம் “நீ இங்கிருக்கும் வரை நான் தான் உனக்கு கடவுள்” என சொல்வதுண்டு. அதிகம் அறியப்படாத இவரின் தண்டனை முறைகள் மிகவும் கொடுமையானவை.

பிரபல அலிப்பூர் குண்டுவெடிப்பில் கைதான உல்லாஸ்கர் தத்தா ஒரு வெடிகுண்டு நிபுணர். வங்காளத்தை சேர்ந்த இவருக்கு ஆரம்பத்தில் இவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் செல்லுலார் சிறைக்கு மாற்ற முடிவு செய்யபட்டது. மிகக் கடுமையான வேலைகள் இவருக்கு கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்திற்கு மேல் அவர் எதிர்ப்பை காட்டி விட்டார்.

உடனே அவரை சிறைக் கூண்டின் உள்ளே கையை உயர்த்தி ஒரு சங்கிலியால் பூட்டி நிற்க வைத்தனர். மூன்று நாட்கள் அசையாமல் இருந்த அவரை இறக்கி விடப்பட்ட போது சுயநினைவு இழந்து போய் பைத்தியம் பிடுத்து விட்டது. பின்னர் 1920 ஒரு மன நோயாளியாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இத்தனைக்கும் இங்கு சிறை அதிகாரிகளாக இருந்தவர்கள் பலர் இந்தியர்கள் தாம், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரிந்த இவர்கள் பெட்டி ஆபிசர், டிண்டால், ஜமதார், முன்ஷி என பல்வேறு பதவிகள் வகித்தனர். எல்லோரும் ஒருவகையில் முன்னால் கைதிகளாக இருந்தவர்கள், முன்ஷிக்கள் மட்டும் எழுத படிக்க அறிந்தவர்கள்.

19 நூற்றாண்டின் துவக்கத்தில் காலா பாணிக்கு வந்த அரசியல் கைதிகளில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர். பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் 50 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கபட்டவர் வேறு யாருமில்லை. அந்தளவிற்கு அவரது எழுத்தாலும், இந்தியா ஹவுஸ் இயக்கத்தின் பெயராலும் சுதந்திர எழுச்சியை ஆங்கிலேயருக்கு எதிராக உண்டாக்கினர்.

ஆங்கிலேயர்கள் சிப்பாய் கலகம் என ஒதுக்கியதை விவரித்து ஆராய்ந்து முதல் இந்திய சுதந்திர போராட்டம்-1857 என்ற புத்தகத்தை எழுதினார். பிரிட்டிஷ் அரசால் அப்புத்தகம் தடை செய்யப்பட்டது. அதன் பின் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அவர் சுதந்திர இயக்கங்களை உருவாக்கினார். 1909 ல் அவரது சீடர்கள் இரு முக்கிய ஆங்கிலேயே அதிகாரிகளை லண்டனில் சுட்டுக்கொல்ல சாவர்க்கர் கைது செய்யப்பட்டு கப்பல் வழியே இந்தியா கொண்டுவரப்பட்டார்.

கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் துறைமுகத்தை அடைந்தார். துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி இவரை அந்தமான் சிறைக்கு அனுப்பினர்.

ஒரே சிறையில் இருந்தும் இவரது சகோதரர் இங்கிருக்கிறார் என தெரியாத வண்ணம் சிறை வாசம் இருந்தது. இந்துத்துவா பற்றாளரான சாவர்கர் சிறையில் இந்து முஸ்லிம் பகைமை வைத்து பிரிட்டிஷ் நடுத்தும் நாடகத்தை எதிர்த்தார். சிறை சுவர்களில் சுதந்திர எழுச்சி வாசகங்களை எழுதி வைத்தார். தொடர்ந்து கைதியின் அறையை’ மாற்றும் பழக்கம் அந்தமானில் இருந்ததால் அந்த சிறைக்கு வரும் மற்ற கைதிகள் அதன் தாக்கத்தை அனுபவித்தனர்.

Hunger Strike

ஒரு கட்டத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் அந்தமான் சிறையில் நடக்கும் மனித தன்மையற்ற செயல்களுக்கு எதிர்ப்பு வந்தது. 1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட இந்திய சிறைகள் கமிட்டி அந்தமான் சிறையில் கைதிகள் நடத்தப்படும் விதத்தை பற்றி மறுபரிசிலினை செய்ய வலியிறுத்தியது.

ஆனால் சிறையில் இருப்பவர்கள் கொலை, தண்டனை குற்றவாளிகள் என சொல்லி அந்தமான் அரசு அதனை தட்டி கழித்தது. இதனால் சாவர்கர் உள்ளிட பல அரசியல் கைதிகளிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி இந்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இதுவும் சில வருடம் கூட நீடிக்கவில்லை, மீண்டும் புரட்சி வெடிக்கும் போது வெவேறு காரணங்கள் சொல்லி முக்கிய விடுதலை போராளிகள் அந்தமான் அனுப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

கீழ்படிந்து உரிமை இழ்ந்து வாழ்வை காட்டிலும் மடிவதே மேல் என்ற எண்ணம் விடுதலை வீரர்களிடம் மேலோங்கியது. மனித தன்மையற்று நடத்தும் செயலை எதிர்த்து 1933 ஆம் ஆண்டு 33 சிறைப் போராளிகள் உண்ண விரதத்தை தொடங்கினர். 45 நாட்கள் போராட்டம் தொடர்ந்தது.

ஓரளவிற்கு மேல் சமாளிக்க முடியாமல் காவலர்கள் அவர்களுக்கு கட்டாயமாக உணவளிக்க முயன்றனர். பஞ்சாபின் மகாவீர் சிங் கட்டாயமாக இழுத்து சென்று தரையில் வீழ்த்தி வாய்வழியாக பாலை ஊற்ற பார்த்தனர், மகாவீர் மூச்சை பிடுத்து கொள்ள மூக்கின் வழியே பால் சென்று சுவாச பையை நிறுத்தி மயக்கமடைய செய்தது, உடனே மருத்துவ உதவி செய்தும் சில மணியில் அவர் உயிர் நீத்தார்.

அவரது சடலத்தை காணகூட யாருக்கும் அனுமதி தரபடவில்லை. சில தினங்களில் மொகித் மைத்ரா மற்றும் மோகன் கிஷோர் நபாதாஸ் ஆகியோரும் உண்ணா விரதத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். கைதிகளின் இறப்பு அதிகாரிகளிடம் அச்சத்தை உண்டாக்கியது. அவர்கள் மெல்ல போராட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஏற்க ஒப்புக் கொண்டனர்.

அதன்படி சிறைவாசிகளுக்கு குளிக்க சோப்பு, சமைத்த உணவு, படுக்கைகள், பலரும் அரசியல் கைதிகள் என்பதால் படிப்பதற்கான நாளிதழ் புத்தகம் மற்றும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச அனுமதி தரப்பட்டது. சிறையில் கல்வி அளிக்கப்பட்டது, பல தலைவர்கள் முதன்முதலாக மார்க்சிசம் பற்றி இங்கு பயின்றனர், சொற்பொழிவுகள் நடைபெற்றன. ஆனாலும் மறைமுகமாக சிறையதிகாரம் அரங்கேறியபடி தான் இருந்தது.

1936 மீண்டும் பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. தங்களது தாய்மண்ணிற்கு சென்று சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் போராளிகள். இந்தியாவெங்கும் அந்தமான் கைதிகளுக்காக போராட்டம் நடந்தது. இம்முறை காந்தி, ஜனாப் ஜின்னாசவுகத் அலி மற்றும் தாகூர் ஆகியோரின் முறையீடும் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்தது. 

1938 ஆரம்பத்தில் பெரும்பாலான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு திரும்பினர். 1943 ஆம் ஆண்டு ஜப்பானிய படை அந்தமானை ஆக்கிரமித்த போது அந்தமானில் கைதிகள் யாரும் மில்லை,

ஆனாலும் அந்தமான் வாசிகள் பலர் ஜப்பான் அரசாளும் செல்லுலார் சிறையில் கொடுமைகள் நடந்ததாக சொல்கிறார்கள், எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லாததால் இது அதிகம் வெளியே தெரியவில்லை. அத்தோடு ஏழு கிளைகளில் இரண்டு கட்டடம் முழுவழுதுமாக இடித்து தகர்க்கப்பட்டது.

1945 இரண்டாம் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் அந்தமானை மீண்டும் கைப்பற்றியது. சுதந்திர இந்தியாவில் 1957 ல் போர்ட்பிளேயரில் தியாகிகளுக்கு தூண் வைக்கப்பட்டது. பிரிட்டஷ் ஆங்கிலேய ஆட்சியின் அவமான அடிமை சின்னமாக இந்த சிறையை கருதியவர்கள் அதன் மற்ற இரண்டு கிளைக் கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

தங்கள் தியாகத்தின் அடையாளம் எதிர்கால தலைமுறையினருக்கு அறிய விடாமல் அழிப்பதா என சுதந்திர போராட்ட முழக்கமிட்டனர். பல குழுக்கள் அந்தமான் சிறையை பாதுகாக்க அன்றைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டது. தற்போது மிதமுள்ள மூன்று கிளைகளோடு அந்தமான் சிறைச்சாலை 1979 பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது சுற்றுலா தளமாக இருக்கும் இந்த சிறையின் சுவர்கள் ஒன்றிலும் தனது தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் அதன் பாரம்பரித்தையும் கௌரவத்தையும் உயிரினும் மேலாக போற்றி பேணி காத்த வீரம் பதிந்திருக்கிறது. சுதந்திர எழுச்சி தாகத்தால் கடுந்துயரிலும் கர்வத்தோடு வாழ்ந்த உதிரக்கதையை ஒலிஒளிக் காட்சிகளோடு உரைத்துக் கொண்டிருக்கிறது அந்த ஆலமரம்.

References :

http://www.independent.co.uk/news/long_reads/cellular-jail-india-integral-country-fight-freedom-independence-british-colony-andaman-and-nicobar-a7883691.html

https://www.theguardian.com/lifeandstyle/2001/jun/23/weekend.adrianlevy

என்.சொக்கன் எழுதிய அந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம் புத்தகம்

http://andamantamizhosai.blogspot.in/2009/12/blog-post_06.html

https://tamil.yourstory.com/read/4b8acb5c4f/andaman-cellular-priso

http://jayadevdas.blogspot.com/2012/12/corbyns-cove-beach-2.html

Leave a Comment