Nature Science

புயல் எப்படி உருவாகிறது?

SuryaPrasath
Written by SuryaPrasath

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை இருக்கும்..இப்படியெல்லாம் செய்திகள் பல கேட்டு இருப்போம்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்? புயல் எப்படி உருவாகுது? காரணம் என்ன, புயல் எச்சரிக்கை கூண்டின் நோக்கம் என்ன, காற்றுக்கும் மழைக்கும் என்ன சம்மந்தம்? இதல்லாம் எப்படி நடக்குது தெரியுமா..வாங்க பார்க்கலாம்.

நம்ம எல்லோருக்கும் பொதுவா தெரிஞ்ச ஒரு விஷயம் பூமி சூரியனை நீள்வட்ட பாதையில சுத்தி வருவதும் இரவும் பகலும் சூரியனால் ஏற்படுதுன்னும் தெரியும், ஆனா இதனால பல இயற்கை சம்பவங்கள் காலம் காலமா தொடர்ந்து நடக்குது. அதுல ஒண்ணுதான் இந்த புயல்,சூறாவளி எல்லாமே!

புயல் எப்படி உருவாகுது?

புவியானது சூரியனின் அருகில் செல்லும் காலங்களில் வெப்பம் அதிகமாகவும் தொலைவில் செல்கையில் குளிர் காலமாகவும் மாற்றமடைகிறது.
புயல் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைவது புவியின் சாய்ந்த கோணமும் சுற்றி வரும் நிலையும் மட்டுமே.

seasons_earth.jpg

ஒரு பந்து போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிரானது பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும்.

இந்த வெப்பநிலை மாற்றமானது காற்றில் அழுத்த மாறுபாட்டை உருவாக்கும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் காற்றானது வெப்பமடையும் பொழுது விரிவடைகிறது, அங்கு வெற்றிடம் உருவாகும். குளிர்வடையும் பொழுது சுருங்கி அழுத்தம் உருவாகும். அழுத்தமாக இருக்கும் காற்றானது வெற்றிடத்தை நோக்கி நகரும். இதுவே வெப்ப சலனம் என்கிறோம்.

இதனால் குளிர்ந்த காற்று நகர்கையில் மழை பொழிவு ஏற்படுகிறது. காற்று அலைக்கழிக்கப்பட்டு இந்த காலநிலை மாற்றமே புயல் உருவாக காரணம். எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் புகைபிடிப்பவரின் அருகில் இருந்தோம் என்றால் அங்கு ஆக்சிஜன் குறைவாகவே இருக்கும். புகை அதிகமானால் மூச்ச திணறல் உருவகும்.

இது வெப்பமயமாதலால் ஏற்படும் வெற்றிடம். நுரையீரல்களில் ஆக்சிஜனை இது குறைய வைக்கும். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஓன்று என்னவென்றால் துருவங்களுக்கு ஏற்ப சுழற்சியும் மாறுகிறது. வலஞ்சுழி இடஞ்சுழி என இரண்டு திசைகளில் சுற்றுகிறது. வடதுருவங்களில் இடதுபக்கமாகவும் தென் துருவத்தில் வலதுபக்கமாகவும் சுழன்று காற்று வீசுகிறது.

வானிலை நிலவரம்

புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ள ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.

640px-Cyclone_Catarina_from_the_ISS_on_March_26_2004

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தென்படும் வலிமையான புயல் தோற்றம்

இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ முதல் 350 கீமீ வேகத்துக்கு அதிகமாக காற்று வீசும்.

நீரானது காற்றை போல இல்லாமல் வெப்பத்தில் ஆவியாதல் மற்றும் குளிர்ச்சியில் நீராகும் தன்மையை பெற்றுள்ளது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.

ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.

புயலின் வகைகள்

காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic storm). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).

cyclone names

Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை. புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typhoon(சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம்.

Cyclone

ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம்.

புயல் பெயர்கள்

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது.

ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

Cyclone-Gaja.jpg

புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்(Storm Warning Signs).

புயல் கூண்டுகள்

இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு. இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன.

நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க… எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.

cyclone sea.jpg

  • ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
  • இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
  • மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
  • நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.
  • 5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
  • 6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

pampan_10288.jpg

  • 7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
  • 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
  • 9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
  • 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
  • 11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

Leave a Comment