நமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை.

மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம் பிரபஞ்ச தூரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறது. பூமியில் வேறு எந்த பிராணியும் மனிதனை போல சிந்தித்து இருப்பிடங்களை அமைத்து அதற்கேறப் தன் சூழலை தகவமைத்து கொண்டிருக்க முடியாது.

பரிணாம வரிசை பட்டியலில் உச்சத்தை தொட்டிருக்கும் மனிதன் அதன் எல்லைகளையும் தாண்டி இந்த புவியின் மேற்பரப்பை ஆள்கிறான். அப்படியானால் பரிணமிக்கும் முன்பு மனிதன் என்னவாக இருந்திருப்பான்?

நுண்ணிய பாக்டீரியா முதல் உலகின் மிகப்பெரும் உயிரினமான நீலத்திமிங்கலம் வரை அதனதன் சுழற்சியில் எண்ணற்ற பரிணாமங்களையும் உடல் தகவமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டுதான் தற்போதைய நிலையை அடைந்துள்ளன, இது செடிகள் முதல் சிங்கங்கள் வரை பொருந்தக்கூடிய இயற்கை காரணி.

டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம்(Origin of Species) என்ற புத்தகத்தில் பரிணாம கோட்பாடை விளக்கும் போது ஊர்வன முதல் பாலூட்டிகள் வரை ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்றார். அதாவது எல்லா விலங்கினங்களும் ஒரே மாதிரியான சிறிய உயிரிலிருந்து தான் பரிணமித்திருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாக இருந்தது.

அந்த வகையில் பார்த்தால் மனிதன் மற்றும் மற்ற குரங்கு வகைகள் ஒரே மாதிரியான மூதாதையர்களிடம் இருந்து தான் தற்போதைய நிலைக்கு வளர்ச்சி அடைந்திருக்க முடியும் என்றார். அறிவியலின் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட இந்த கொள்கை, டார்வினை கண்டு உலகை வியக்க வைத்தது.

சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் பிறந்தவர். சிறு வயது முதலே புழுக்கள் பூச்சிகள் மீது ஆர்வம் கொண்டிருந்தவரை அவரது அப்பா தன்னைப் போல மருத்துவர் ஆக்க விரும்பினார்.

டார்வின் அதற்கு உடன்படாததால், சரி இறையியல்(Theology) படிக்க வைப்பது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இறையியல் என்றால் கடவுள் சார்ந்த இறை தத்துவங்கள் பற்றியான ஆய்வு படிப்பு. டார்வினோ அதைவிடுத்து இயற்கையியல் தேடி கற்று தேர்ந்தார்.

Beagle Voyage

மனிதனின் பயணங்கள் எத்துணையோ அரிய பிரம்மிப்புகளை சந்திதுள்ளன. சில பயணங்கள் மனித வரலாற்றையும் உலகை நாம் பார்க்கும் கோணத்தையும் மாற்றுவதாக அமைந்து விடுகிறது. அத்தகையதே டார்வின் மேற்கொண்ட முதற் கடற்பயணம்.

கடல்பயணங்களுக்கு புகழ்பெற்ற இங்கிலாந்து பல நாடுகளில் காலணி ஆதிக்கத்தின் வழியே உலக வரைபடத்தை திருத்தி எழுதியுள்ளது. அதிகாரத்தை செலுத்த நங்கூரம் வீசிய அதே சமயம் சில அறிவார்ந்த பயணங்களும் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதில் ஒன்றுதான் 1831 ல் மேற்கொள்ளப்பட்ட எச்.எம்.எஸ் பீகள்(HMS Beagle) கப்பலின் ஆய்வு பயணம். ஐரோப்பாவின் முக்கிய அறிவியலார்களுடம் இளைஞனாக இருந்த டார்வினுக்கும் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவோனாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கானரி, வெர்தா பல நிலப்பகுதிகளை பயண வழி ஆராய்ந்தது.

அவற்றில் கவனிக்க தக்கது காலபாகோஸ் தீவு(Galapagos). இந்த தீவில் உலகின் வேறு எங்கும் அறியப்படாத அதிசயதக்க தாவர விலங்கினங்கள் வாழ்கின்றன அல்லது அவ்வாறு பரிணமித்திருக் கின்றன.

எரிமலை சாம்பல் நிறைந்த காலாபாகோஸ் தீவுகளில் ஊர்வன இனத்தைச் சார்ந்த பல்லிகள் அதன் மற்ற உறவினர்களை போல அல்லாது விந்தையாக கடலில் நீந்தி மீன்களை உண்டு வாழ்கின்றன. எங்கு சிறிய உயிரினங்களை கண்டாலும் படிமங்களை கண்டாலும் ஓடி வந்து அதை சேகரித்து வைப்பார் டார்வின். ஆயிரக்கணக்கில் குறிப்புகளும் எழுதி வைத்தார்.

ஐந்து ஆண்டுகள் நீண்ட இந்த பயணம் டார்வினை பல்வேறு கொள்கைகளை உலகிற்கு அள்ளித்தர உந்தச் செய்தது. வினோத சந்திப்புகளும் சேகரித்து வந்த எலும்புகளையும் வைத்து டார்வின் ஆராய் துவங்கினார். தனது ஆய்வுகளை புத்தகமாக வெளியிட்டார்.

Origin of Species

தன் வாழ்வில் பல சோதனைகளை சந்தித்து வெளியிட வேண்டாம் என்ற நிலையிலிருந்த போது வால்லஸ் என்ற அறிஞரின் உதவியோடு 1859 ஆம் ஆண்டு இயற்கை தேர்வின் உயிரினங்களின் பரிணாம் தோற்றம்(Origin of Species by natural selection) என்ற வரலாற்று சிறப்பு மிக்க நூலை வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் உயிர்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரிணமிக்கின்றன என்பதை பற்றியும் சூழலுக்கும் உயிர் பிழைத்தலுக்காகவும் அவற்றின் உரு இயல் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை பற்றியும் புதிதாக விளக்கம் தந்தன.

அந்த புத்தகம் மறைமுகமாக ஒவ்வொரு உயிரும் ஒற்றை மூதாதையார்களிடம் இருந்து வளர்ச்சி அடைந்து அதன் தக்கன பிழைக்கும் ஆற்றலுக்கு ஏற்றவாறு வெவ்வேறு உருவ அமைப்புகளை பெற்று பரிணமிக்கன்றன எனவும் விளக்கம் தந்தது.

தேவைக்கேற்ப உடல் மாற்றமும் தேவையற்று போன பாகங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றும் சொன்னார். உதாரணமாக மனித குரங்குகளுக்கு நீளமான கைகள் இருப்பதால் வால் தேவைப்படுவதில்லை. ஒரு பறவையின் அலகு பெரிதாக இருந்தால் கொத்துவதற்கு எதுவாகவும் வேகமாகவும் இருக்க அவை தாமாகவே சிறியதாக கூர்மையாக பரிணமித்து விடும் என விவரித்தார்.

விலங்குகளில் திறமை உள்ளதே பிழைக்கும்(Survival of fittest) அதன் வம்சமே வளர்ச்சி பெற்று ஒரு இனத்தை தோற்றுவிக்கும். உயிர்பிழைத்தலின் பண்புக்கூறுகள் அதன் தலைமுறைக்கும் தொன்றுதொட்டு வழங்கப்படும். மற்றவை காலத்தால் அழிந்து போய்விடும் என்பது இயற்கையின் விதி.

Descent of man

பின்னர் 1871 ல் மனிதனின் முன்னோர்கள்(the Descent of man) என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிட்டார். அது மனிதனின் தோற்றம் பற்றியும் இனப்பெருக்க தேர்வுகளை பற்றியும் விரிவாக ஆராய்ந்தது. பாலுட்டிகள் எவ்வாறு தனது இனப்பெருக்க தேர்வுகளை மேற்கொள்கின்றன, மனிதனின் ஒவ்வொரு படிநிலைகளை ஆராய முற்பட்டிருப்பார்.

உலகமெங்கும் சர்ச்சைகள் தீயாய் பற்றி எரிந்தன. ஏனென்றால் அதுவரை இறைச்சார்ந்த மனித உருவாக்கத்தை பரப்பிக் கொண்டிருந்த மதவாதிகளுக்கு அது பெரும் இடியாக இருந்தது. எல்லா மதங்களும் மனிதன் கடவுளால் உருவாக்கப்பட்டவன் என்ற ஆதிக் கருத்தைதான் போதித்து வருகின்றன. திடீரென்று அவன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று சொல்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Regional Views

கிறித்தவ மதமும் இஸ்லாமிய மதமும் கடவுளால் தான் மனிதன் உருவாக்கப்பட்டான் என்றும் குறிப்பாக ஆதாம் ஏவால் ஆப்பிள் சாப்பிட்டதால் உணர்வுகள் ஏற்பட்டு உறவு கொண்டதால் தான் மனித இனம் தோன்றியதாகவும் அது பிறப்பு முதலே பாவங்களை சுமந்து கொண்டிருப்பதாகவும் கிறிஸ்தவம் சொல்கிறது.

எகிப்திய, கிரேக்க கதைகளிலும் கடவுள் மனித இனத்தை உருவாக்கியதாகவும் பேரழிவுகளில் அவர் மீண்டும் அவதரித்து காத்தருள்வார் என்றுமே கூறப்படுகிறது. இந்து மதத்தின் முதல் மனிதனான “மாது”வை பிரளயத்தின் போது விஷ்ணு மீனாக அவதாரம் எடுத்து காப்பார். அவனிடமிருந்து யாவரும் தோன்றினார்களாம்.

இந்து மதம் பல்வேறு மரபுகள் கொண்டதால் பல கதைகள் உள்ளது. மனிதன் நான்கு தலை பிரம்மாவால் உருவாக்கப்பட்டவன் என சொல்கிறது. பிரம்மனே முக்கடவுள்களில் படைக்கும் பணியை செய்பவர். சிவன் அழிக்கும் தொழில் கொண்டவர்.

மற்றொரு கதையாக பிரசாஸ்பதி என்ற முனிவரின் உருவாகத்தால் தங்க முட்டையிலிருந்து உலகம் வந்ததாகவும் அங்கு மனிதர்கள் உருவானதாகவும் சொல்கிறது. இது சில கிரேக்க கதைகளுடனும் ஒன்றிப்போகிறது.

அதே இந்து மதம் தான் விஷ்ணுவின் தசவதாரத்தில் உயிர்களின் பரிணாமத்தை மறைமுகமாக விளக்குகிறது. மச்ச(மீன்) அவதாரம் தொடங்கி கூர்ம(ஆமை) அவதாரமாய் பரிணமித்து வராக(பன்றி), நரசிம்ம(சிங்கம்) அவதாரம் கொண்டு மெல்ல வாமனனாகி இறுதியில் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் உயர்குணம் கொண்ட மனிதராகிறார் கண்ணன். ஆனால் தசாவதாரத்தை அறிவியல் கண்ணோட்டத்தோடு யாரும் காண்பதில்லை.

Controversy

18 நூற்றாண்டின் காலத்தின் பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். எனவே டார்வினின் கொள்கை பொது மக்களிடம் இருந்தே பெரும் கேள்விக்கு உட்பட்டது.

மதவாதிகள் இந்த சர்ச்சையை எப்படி எதிர்கொள்வது என்று விதவிதமான சிந்தித்து சர்ச்சை எழுப்பினர். பரிணாமக் கொள்கை நேரடியாக கடவுளை சோதிப்பதாக கண்டனம் செய்தனர். தங்கள் வாழ்வியலை பாதிக்கும் பெரும் அச்சுறுதல்லாக ஐரோப்பிய தேவாலயங்கள் டார்வினை கழுகு கண்ணோடு பார்த்தது.

மதவாதிகளோடு அன்றைய அறிவியலார்களே இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை ஒரு நம்பகமான கோட்பாடாக ஏற்க மறுத்தனர். மேலும் இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையெனவும் டார்வின் வேண்டுமென்றால் குரங்கு வம்சத்தின் வழி வந்திருக்கட்டும் நாங்கள் இல்லை என்றார்கள்.

உலகம் தட்டை அல்ல கோளம் என்றும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றும் உரைத்து விளக்கிய கோபர்நிகாஸ், கலீலியோ போன்றோர் கிறித்தவ தேவாலயத்தால் பல்வேறு மதவாதிகளின் எதிர்ப்பை பெற்றனர், கல்வீச்சு , வீட்டுச்சிறை என சித்திரவதைகளை அனுபவித்தனர்.

டார்வின் வரலாற்றிலும் அவர் பல்வேறு வித சர்ச்சைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அவரது தலையை குரங்கு உடலுடன் பொருத்தி கார்டூன் வெளியிட்டன அன்றைய பத்திரிக்கைகள். அவர்கள் கெட்ட முக்கிய கேள்வி மனிதன் குரங்கிலிருந்து வந்திருந்தால் ஏன் மனித குரங்குகள் ஏன் இன்னும் குரங்காகவே உள்ளது என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கான பதில் எளிது.

ஒற்றை வகையான மூதாதை உயிரிலிருந்து வெவ்வேறு வகையான குரங்கினங்கள் உருவானது. நியண்டர்தால், ஹோமோ எரக்டஸ், மனித குரங்குகள் மற்றும் ஹோமோ செபியன்ஸ் எனும் மனிதனும் பரிணமித்தது இன்றைய நவீன அறிவியலில் நிருபணம் ஆகியுள்ளது. மனிதன் இன்னும் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறான். மனிதன் உண்டாக்கிய சுழலால் மனித குரங்குகளும் வேறுவகையான மாற்றத்தை எதிர்கொள்கிறது.

அன்று மட்டுமல்ல அதன் பின்னரும் டார்வின் கோட்பாடுகளை பாடதிட்டமாக அமைக்க பல்வேறு நாடுகளில் தடைவிதிக்க பட்டிருந்தன. அது இறை நம்பிக்கையை சோதிப்பதாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

அமெரிக்காவில் ஒருமுறை இறைவனின் கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி டார்வின் பாடத்திட்டத்தை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு கொண்டு செல்லபட்டது. ஆனால் இறுதியில் டார்வின் கோட்பாடே அறிவியல் ரீதியானது என்று கோர்ட் ஆணையிட்டது.

2017 செப்டம்பரில் துருக்கி நாட்டின் உயர்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பாடம் முழுவதுமாக அகற்றப்பட்டது. அது மாணவர்களுக்கு ஏற்பில்லாத அதிகப்படியான அறிவியல் விளக்கங்களை கொண்டிருப்பதாக காரணம் சொன்னார்கள்.

இந்தியாவிலும் சார்லஸ் டார்வின் கொள்கை அறிவியல் ரீதியாகவே தவறானது. குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் சொல்லவில்லை. மனிதன் மனிதனாக மட்டுமே இருந்தான் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சத்யபால் சிங் கூறினார்.

இவருக்கு கீழ் தான் கல்வித்துறை வருகிறது. நல்லவேளை பல்வேறு அறிவார்ந்த எதிர்ப்புகளால் இந்த சர்ச்சை அப்படியே காணமல் போய்விட்டது.

இருப்பினும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நேரடியாக அவர் குறிப்பிடும் அளவிற்கு டார்வினிடமும் ஆதாரம் இல்லை. அவரும் எந்த இடத்திலும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நேரடியாக சொல்லவில்லை. மூதாதையர்கள் ஒன்றை போன்றவர்கள் என்றே சொன்னார்.

ஹோமோ செபியண்ஸ் என்ற மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் கண்டறிதலுக்கு அவர் வெளிச்சம் மட்டுமே போட்டுக் கொடுத்தார். அவர் இறந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த பல்வேறு படிமங்களும் எலும்புகளும் அவரது கூற்றை ஏற்றுக் கொள்ள வைத்தன. இருப்பினும் சில வகை மனித இனங்களின் படிமங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

முக்கியமாக டிஎன்ஏ வின் கண்டுபிடுப்பு மனிதர்களின் மரபணுக்கள் நூற்றாண்டுகளாக எவ்வகையாக மாறுதல்களை சந்தித்து வந்தன என்பதை வெளிபடுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்கள் டார்வின் கொள்கைகளை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றன. ஆனாலும் அவருக்கான எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்துதான் வருகிறது.

மனித இனத்தை பற்றியான அறிவு தற்போது மேம்பட்டு இருப்பது டார்வினின் தயவால் தான். இன்னும் தெளிவான உயர் ஆராய்ச்சிகளுக்கு பின்னே இதை விட துல்லியமான விதி ஒன்று கண்டுபிடிக்கப் படும் வரை டார்வின் கொள்கை விலக்க இயலாத அறிவியல் ஆதாரமே.

Leave a Comment