இந்தியாவின் தலைசிறந்த புராண இதிகாசமான மகாபாரத கதையை ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அது நாம் வாழ்வியலோடு கலந்தது, அர்ஜுனனும் கர்ணனும் இப்போதும் நமது பேச்சு வழக்கில் எடுத்துகாட்டு உவமைகளாக உள்ளனர்.

மிக சுருக்கமாக சொல்லப்போனால் பாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியோடு கௌரவர்களை எதிர்த்து பாரதப்போரில் வென்று தர்மத்தை நிலை நாட்டுவதே மகாயுத்தத்தின் கதை.

ஆனால் மகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா?

என்னிடம் கேட்டால் நிச்சயம் இல்லை என்றே பதிலளிப்பேன். மகாபாரதம் சர்வ காலத்திற்கும் ஏற்ற ஒரு வாழ்வியல் சூழலை மையமாக கொண்டது.

மனிதனின் சினம், இச்சை, பேராசை, காதல், பற்று, குரோதம், நட்பு, அகந்தை, பாகுபாடு, அன்பு போன்றவை அவனின் கால சூழலுக்கேற்ப எவ்வாறு பரிணமிக்கின்றன, அதனால் அவன் தேசங்களுடனும் தன் உறவுகளுடனும் எவ்வித சந்தர்பங்களை எதிர் கொள்கிறான் என்பதை மகாபாரதத்தை விட வேறு எந்த நூலாலும் உலகத்தில் விளக்க இயலாது.

8428516729_cd92044a60_o-Copy-1050x701-1050x701.jpg

மகாபாரத கதாபாத்திரங்கள் தனக்குள்ளே ஒரு யுத்ததை நித்தமும் நிகழ்த்தி பார்த்துக் கொண்டிருப்பதை நாம் காண முடியும். நீங்கள் யார் பக்கம் சாய்ந்தாலும் அவரிடமும் கண்டிப்பாக ஒரு குறை இருக்கும், ஏனெனில் அதுவே மனித இயல்பு.

பொதுவாக உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்று கேட்டால், கர்ணனை குறிப்பிடுவோம். காரணம் இக்கதையில் அதிகம் அவலப்படுவது கர்ணன் தான்.

அங்கீகாரம் அற்று அடையாளம் தொலைத்து தாழ்ந்த குலத்தவனாக அவமானப்படுவது, வில்வித்தை திறனை நிரூபிக்க அவதனிப்பது, நட்புக்காக தாய், சகோதரர்களையே எதிர்க்க துணிவது என அந்த கதாபாத்திரமாக நடித்த சிவாஜியை கண்டாலே நம் மனம் கலங்கும்.

ஆனால் அந்த நல்லுள்ள கர்ணன் தான், பாஞ்சாலியை வேசி என்று அஸ்தினாபுர அவையில் தூற்றுவான். பீஷ்மரே அமைதியுற்ற போதும் கௌர்வர்களில் விகர்ணன் மட்டுமே பாஞ்சாலிக்கு இழைப்பது அநீதி என்று முழக்கமிடும் போது, அவன் வாயை அடைத்து அமர வைப்பது கர்ணனே. பாஞ்சாலியை அவதூறு பேசியதாலே அர்ஜுனன் அவனை கொல்வேன் என்று சபதமேற்பான்.

அவன் சிறந்த வில்லாளன் தான். ஆனால் கர்ணன் உத்தம் வீரனாக போரில் செயல்படவில்லை, அவனின் இலக்கு எல்லாம் தன்னை ஒரு சிறந்த வில்வீரனாக நிரூபத்திலேயே இருந்தது உண்மை. அவன் தாயிடம் கூட நான் அர்ஜுனனை மட்டும் கொல்வேன் என்றான்,

ஏனெனில் அது மட்டுமே அவனை அர்ஜுனனை விட சிறந்த வீரன் என்ற புகழுக்கு அழைத்துச் செல்லும். இது நட்பை தாண்டிய சுயநலத்தின் வெளிப்பாடல்லவா. தான் அறிந்தும் தடுக்க இயலாது செய்த பாவங்களுக்குக் காகத்தான் தானமளிக்கவே ஆரம்பித்தான் என்றொரு கதையும் இருக்கிறது.

Krishna.jpg

அதேபோல் உங்களுக்கு பிடிக்காத கதாபாத்திரம் துரியோதனாக இருக்கலாம். வில்லதனத்தை காட்டிலும் ஒரு பரிதாபமான குணப்பாத்திரத்தை இவர் கொண்டிருப்பதை பலரும் கவனிப்பதில்லை.

பிறப்பு முதலே இராஜ வம்சத்தின் இளவரசனாக வளரும் ஒரு சிறுவனிடம் பட்டம் சூட்டப்படும் தருவாயில் உன் அண்ணன் வந்துவிட்டான், உனக்கு முன்னாள் தர்மன் பிறந்து விட்டான், இனி உனக்கு அரச தகுதி இல்லை என சொல்லப்பட்டால், அந்த இளைஞனின் மனநிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தமயனை கொன்று அரியணையை கைப்பற்றும் ராஜதந்திரம் உலக வரலாற்றில் பல உண்டே. மாய அரண்மனையில் பாஞ்சாலி அவன் ஆயுதத்தை பறித்தது மட்டுமன்றி தண்ணீர் போன்று இருக்கும் கானல் தரையினில் அவன் தொடை தெரிய தனது ஆடையை தூக்கி நடக்க,

அடுத்த நொடியிலேயே தரை என எண்ணி தண்ணீரில் விழ ‘குருடன் மகனும் குருடன் தானே’ என பாஞ்சாலி உள்ளிட்ட அவையோர் அனைவரும் எள்ளி நகையாடியது எவ்வாறான அவமானம்.

நட்புக்கு உருவகம் துரியோதனன் என்று நாம் அறிவோம். மகாபாரதத்தின் ஈடு இணையில்லாத வீரரான பீஷ்மரை தன் நண்பனுக்காக இழக்க துணிந்தவன் அவன்.

எல்லோரையும் இழந்த தருணத்தில் கூட கர்ணனின் மீது அசர நம்பிக்கை வைத்திருந்தவனுக்கு அவன் குந்தி மகன் என்ற செய்தியறிந்து போரில் தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சென்றுவிடுவான்.

துரியோதனை தன் உயிரை ஒரு முறை காப்பாற்றியதற்காக அர்ஜுனனுக்கு வரமளித்த கதை ஒன்றும் உண்டு.

கர்ணனை தீயவர் எனவோ துரியனை சிறந்தவன் எனவோ நிரூபிப்பது என் எண்ணமல்ல. அவர்களின் சூழல் அவர்களை எவ்வாறான சிக்கலான முடிவுகளை எடுக்க தூண்டியது என்பதே இதன் சுவாரசியம்.

மகாபாரதம் மனிதனின் யதார்த்த வாழ்க்கை முறையை பற்றியது. அவனின் வாழ்வில் இன்ப துன்பங்கள் தன் செயலால் எவ்வாறெல்லாம் அவனை சுற்றி இருப்பவரின் வாழ்வியலையும் சேர்த்து பாதிக்கிறது அல்லது காக்கிறது என்பதை பல வித்தியாசமான பரிணாமத்தில் நமக்கு பகிர்ந்தளிக்கிறது.

tumblr_n1zx972NIJ1r0bnkao1_500.jpg

ராமாயணம் அதுபோல் அல்லாது நன்னெறி போதிக்கும் வகையில் தற்போது கவனிக்கப்படுகிறது, ஏனெனில் அதன் ஆக்க உருவாக்கம் எப்படியான கதை அம்சத்தை கொண்டிருந்தது என நமக்கு தெரியாது.

ராமர் இந்தியாவின் நாயகனுக்கு ஏற்ற குணாதியசங்களை கொண்டவர். சிறந்த மகன், அண்ணன், காதலன், வீரன், தலைவன் என எல்லா கட்டத்தில் பிரகாசமாக ஜொலிப்பார். ஆனால் மகாபாரதத்தில் கதை தான் நாயகன், இங்கு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தன்மை உள்ளது.

தர்ம யுத்தம் என இதனை சொல்லிக் கொள்பவர்கள் இது ஒரு வம்சத்திற்கிடையான போர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் தன்னுடைய தர்மத்தை காத்துக் கொள்ள அதர்மம் செய்வார்கள். எது தேவையோ அதுவே தர்மம் என்ற சாணக்கியன் சொல்லே இங்கு தாரக மந்திரமாக இருக்கும்.

தனது அஸ்திரத்தை பறித்ததற்காக பாஞ்சாலியின் வஸ்திரத்தை பறிக்க எண்ணியது கொச்சை செயலென்றால் தனது மனைவியை பந்தயம் வைத்து சூது ஆடியவரின் செயல் எவ்வாறான தர்மம்.

சபையினில் பாஞ்சாலி துயிலுறிக்கப்பட்ட போது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தனது தர்மத்தை தான் பின்பற்றினார்கள். பீஷ்மர் ராஜ தர்மத்தை பின்பற்றி அரசன் வாக்குக்கு அடிபணிந்து நின்றார்.

தன் மகனின் தர்மத்தை காக்க தன் மகளுக்கு ஒப்பானவளை தவிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் துரோணச்சாரியார். தன் அண்ணன் பணயம் வைத்து விட்டான் இனி நாம் எதிர்க்கக் கூடாது என தன் அண்ணன் தர்மத்தை காத்தார்கள் பாண்டவர்கள்.

தவறு என அறிந்தும் அதை செய்து தன் நட்பின் தர்மத்தை மரணிக்கும் வரை காப்பாறினான் கர்ணன். அதே ராஜ தர்மத்தை கூறி பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார் பீஷ்மர்.

16_Shakuni.jpg

சகுனியை பற்றி சொல்ல வில்லையே என்று நினைப்பீர்கள். கணவன் ஆகப்போகிறான் பார்வையற்றவர் என்ற செய்தியை சொல்லாமல் காந்தாரிக்கு திருமணம் நிறைவேறியது, அன்று முதல் அவள் கண்களை கட்டிக் கொண்டு உலக ஒளியை மறுத்தாள்.

தன் சகோதரியின் வாழ்வை இருளாக்கிய குரு வம்சத்தை அழிப்பேன் என சூளுரத்தார் சகுனி, தன் மருமகன் அரசனாக தந்திரியாக அவர் செயல்பட்டார். இதில் குரோதம் உண்டு, அவர் மனதிற்கு தேவையான காரணமும் உண்டு.

இது தர்மத்திற்கான போர் என்றால் பாண்வர்கள் சார்பில் யுத்தம் செய்தவர்களூக்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதே முக்கிய குறிக்கோளாக அமைந்திருக்கும், ஆனால் இயல்பு கதாம்சமே வேறு.

பாண்டவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாக கருதினாலும் இராஜ தர்மத்திற்காகவே பீஷ்மர் போரிடுவார். பாண்டவர்களால் மீது கொண்ட வெறுப்பால் அஸ்வத்தமனும், தனது மகனின் பாதுகாப்பிற்காக துரோணச்சாரியாரியாரும், அர்ஜுனனை எதிர்க்க கர்ணனும்,

தவறுதலாக புகலிடம் அடைந்ததற்காக சல்லியனும், சகோதரிக்காக பழிதீர்க்க சகுனினியும் என கௌரவர்கள் பக்கம் நின்றவர்களுக்கெல்லாம் அவர்கள் தர்மம் என கருதிய ஒரு காரணம் இருந்தது. அரசனாயிருந்தும் தன் மகனுக்காக போரை அனுமதித்து கண்களை திறந்து வைத்திருந்த திருதிராஷ்டிரனருக்கும், காந்தாரிக்கும் இது பொருந்தும்.

Abhimanyu-and-the-Chakravyuha-Padmavyuha-Mahabharta.jpg

சரி பாண்டவர்கள் மட்டும் தர்மத்திற்காகவே போரிட்டார்களா.. தனது மகளுக்கு நடந்த அநீதிக்காக துருபதனும், தந்தை சொல்லை காத்து துரோணரை கொல்ல போர்த்தளபதியாக திருஷ்டத்யும்னும், அம்பையின் பகையை தீர்த்து பீஷ்மரை கொல்ல சிகந்தியும் போரிடுவர்.

தன் தந்தைகளுக்காக வந்து தலைசிறந்த வீரனான அபிமன்யுவும் ராட்ச கடோத்கஜனும் கௌரவர் படையை கலங்கடித்து மடிவார்கள். தன் சிகையை முடிய துச்சாதனன் குருதி வேண்டி காத்திருந்தாளே திரௌபதி.

பாண்டவரும் கிருஷ்ணனும் தர்மத்தை தான் பின்பற்றினார்கள் என சொல்ல முடியுமா..

பாஞ்சாலி துயிலிறிக்கப்பட்ட சபையில் துரியோதனன் தொடையை பிளப்பேன் என சூளுரைப்பான் பீமன், கதா யுத்தத்தில் இடுப்புக்கு கீழ் தாக்கக் கூடாது என்பதே தர்ம விதி. துவக்கத்திலே தவறான சபதத்தை நிறுவி அதனை இறுதியில் நிறைவேற்றுகிறார் பீமன்.

இதில் தர்மம் எங்கே சென்றது, என் தொடையில் வந்ததமரு என்று அவன் கூறிய தீய சொல்லும் சூழலும் தானே துரியனின் இறப்பை தீர்மானித்தது. சக்கரத்தை மீட்டுக்கொண்டிருந்த கர்ணனை நிராயுதபாணியாக கொன்றவர்களில் அர்ஜுனனும் ஒருவம் தானே.

ஆயுதம் ஏந்த மாட்டேன் என வாக்களித்த கிருஷ்ணன் பீஷ்மரால் அதனை மீறி தனது சக்கராயுதத்தை கையில் ஏந்தி கொல்ல துணிந்தாரே. கடவுள் நிலையிலிருந்த ஒருவரால் கூட தனது தர்மத்தை நிலை நாட்ட இயலவில்லை அல்லவா.

புராண விதிகளை உடைத்து எறிந்து பிரபஞ்ச தேவைக்கு சரியானதை செய்ய வேண்டும் எனபதை கிருஷ்ணன் பீஷ்மருக்கு உரைப்பார். துரியோதனுக்கு ஆலோசனை அளித்து சூழ்ச்சி செய்வது கிருஷ்ணனே,விதிமுறை மீறிய பீமனை கொல்ல வந்த பலராமனை தடுப்பதும் அவரே.

விதிமுறைகளை வகுத்து வாழ்க்கை நடத்துவது சரியான செயலே, ஆனால் அதே விதிமுறைகள் நாம் வசிக்கும் சூழலையும் நம்மை சேர்ந்தவரையும் பாதித்து அழிக்குமெனில் அதனை விதிவிலக்காக்குவது தவறல்ல.

அப்படியானல் மகாபாரதம் என்ன சொல்கிறது நம்மிடம், எதை நாம் கற்க வேண்டும்?!

மகாபாரதம் நம் எல்லோர் வாழ்வோடு கலந்தது. தன்னலத்தால், ஒரு தவறான முடிவால் எதிர்வரும் சூழல்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மீண்டு வந்து நம்மை எப்படி சந்தர்பவாதியாக மாற்றும் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்.

தற்கால இந்தியாவில் கூட நீங்கள் எதை சரியென்று எண்ணுகிறீர்களோ அதற்கு ஒரு எதிரான கருத்தும் இருக்கும். இது பாரததத்திற்கு மட்டுமே பொருந்தும் ஒரு சிறப்புயல்பு.

பட்டிமன்றங்களை கவனித்து பாருங்கள் பிறந்த வீடா புகுந்த வீடா, தனியார் வேலையா அரசு வேலையா என தலைப்பு வைத்தால் ராஜா சொல்வதை கேட்டாலும் நல்லாத்தான் இருக்கும், பாரதி சொல்வதை கேட்டாலும் சரியென தான் தோன்றும்.

இறுதியில் இருபக்கம் இருக்கும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர முடிவுக்கு வர இயலாது, இந்த கட்டுரையை போல..

 

1 Comment

Leave a Comment