தென்னிந்தியா எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மரகத பேழை. வியக்க வைக்கும் திராவிட கோவில்கள், அடர்ந்த காடுகள், அழகிய கடற்கரைகள் என வட இந்தியர்கள் வந்து ரசிக்கும் பண்பாடு கொண்ட தீபகற்பமாக இருக்கின்ற போதும் வாட்டி எடுக்கும் தட்ப வெப்ப நிலை என்றுமே ஒரு குறையாக இருக்கிறது.

அரிய உயிர்கள் கொண்ட பசுந்தேசமான மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் ஊட்டி, கொடைக்காணல், மூணார் போன்ற குளிர்தலங்களை அளித்த போதும் எதுவும் இமயத்தின் டார்ஜிலிங், குல்மார்க், மணாலிக்கு இணையாவதில்லை.

அந்த குறையை போக்க இயற்கை அளித்த அரிய இடமே லம்பாசிங்கி மலைக்கிராமம். ஆந்திரப் பிரதேசத்தின் காஷ்மீராக அறியப்படும் இந்த பகுதி விசாகப்பட்டினத்தின் சிந்தப்பல்லி மண்டலத்தில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கவர்ச்சியான பள்ளத்தாக்குகளும் சிலிர்ப்பை தரும் குளிர்நிலையும் சுற்றுலா பயணிகளை இங்கு அதிகம் கவர்கிறது.

வருடத்தின் எல்லா காலத்திலுமே இந்த குக்கிராமம் காற்றோடு படர்ந்து மெல்ல நகர்ந்து கொண்டு இருக்கும் மூடுபனியால் கவரப்பட்ட வண்ணமே உள்ளது. ஆனால் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் நடுங்க வைக்கும் குளிராக 0 முதல் மைன்ஸ் டிகிரி வரை குளிரோவியம் வானில் படர்கிறது. சில நேரங்களில் இந்த கடுங்குளிர் பனிப்பொழிவாக மாறிய வரலாறும் இங்குள்ளது.

2012 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் லம்பாசிங்கியில் பனிப்பொழிவு ஏற்பட்டது. அறிதெனினும் தென்னிந்தியாவில் பனிப்பொழிவு நிகழ சாத்தியமுள்ள சூழல் இந்த பகுதியில் மட்டுமே உள்ளது. அதிர்ஷம் இருந்தால் நீங்கள் பயணிக்கும் குளிர்க்காலத்தில் பனிப்பொழிவை ரசிக்கும் வரம் கிடைக்கலாம். அதிக குளிர் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கு ஆப்பிள்களும் ஸ்டாபெர்ரி பழங்களும் கூட செழித்து வளர்கின்றன.

ஆரம்பத்தில் சிறியதாகவே அறியப்பட்ட இந்த அடர் மூடுபனி பிரதேசம் கடந்த சில வருடங்களில் ஆந்திராவின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறிவருகிறது. முக்கியமாக கோடை காலங்களில். குளிர் வாசத்தலமாக மட்டுமில்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களும் வாழும் பகுதியாகவும் லம்பாசிங்கி இருக்கிறது.

valley_near_lambasinghi.jpg

அடர் பசுமைக்கு நடுவே முகாம் அமைத்து இரவை குளிரோடு அனைத்துக் கொள்ள லம்பாசிங்கி ஏற்ற இடம். அந்த பகுதி முழுவதும் பனிப்படர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளதால் நட்சத்திரங்களை கண்டறிவது கடினம் தான். ஆனால் கூடாரம் அமைக்க தேவையானவற்றை நாம் தான் கொண்டு செல்ல வேண்டும்.

லம்பாசிங்கியில் இருந்து 6 km தூரத்தில் தஜங்கி நீர்த்தேக்கம் இருக்கிறது. பின்னணியில் பசுந்தோல் போர்த்தியது போல மலைகளும் எப்போதும் சலனமிடும் ஆற்றுப்படுகையும் புகைப்படம் எடுக்கவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் ஏற்ற பகுதி.

லம்பாசிங்கியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஆந்திர சுற்றுலா துறை(APTDC) அந்த பகுதியில் அரசு உல்லாச விடுதி ஒன்றையும் அமைத்து வருகிறது.

கோதபள்ளி அருவி:

சமீப காலத்தில் கிராமத்து சிறுவர்களால் கண்டறியப்பட்ட வியத்தகு அருவியான கோதபள்ளி இயற்கை அழகாற்றல்களின் உதாரணங்களில் ஒன்று. லம்பாசிங்கிலிருந்து 27km தொலைவில் அதிகம் பயனிக்கப்படாத அருவியாக இது மறைந்துள்ளது. பாறைகளை கடந்து சிறிய இயற்கை குளம் போல அமைத்திருக்கிறது.

சென்னையில் இருந்து தொலைவில் இருப்பினும் லம்பாசிங்கி பகுதிக்கு அருகாமை நகரம் விசாகப்பட்டினமே. விமானம் அல்லது ரயில் வழி விசாக் அடைந்து அங்கிருந்து அரசு அல்லது தனியார் பேருந்தில் சென்றடையலாம்.

Leave a Comment