பழமொழிகள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அனுபவ குறிப்புகள்.ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகள் அதன் சமூக பண்பாட்டு பெருமையும் அறிவுத்திறனையும் எடுத்துக் காட்டுகிறது.பொதுவாக பேசும் போது எளிதாக விளங்க, உதாரணம் சொல்ல இவை பயன்படுகின்றன.

நம் செந்தமிழிலும் எத்துணையோ அற்புதமான பழமொழி உள்ளது, அதில் சிலவற்றை வட்டார வழக்கிற்கு மாறி மருவியது என்ற பெயரில் நம்மாளுங்க எப்படி வச்சு செஞ்சிருக்காங்கனு பாக்கலாம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

 • தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து வரும் மனிதன், யாசகன் கேட்பவன் அர்த்த ராத்திரியில வந்தாலும் கொடை கொடுப்பானாம், அவனையே அற்பனாகிடாங்க.

 • புது மொழி : அற்பனுக்கு வைபை கிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் அப்டேட் செய்வான்.(#Twitter)

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.

 • அடி என்பது ஔவையாரின் நாலடி, அதன் தத்துவத்திற்கு இணையாக சகோதரன் கூட உதவ மாட்டான். அதுபோல் அடி என்பது இறைவனின் திருவடி எனவும் சொல்கிறார்கள், எல்லாம் போனதுக்கப்புறம் கடைசியில் இறைவன் தானே.

 • இன்னொரு பார்வை :

  இருப்பினும் ஏற்றுக்கொள்ளமாறு இருப்பது நில அடி தான். அண்ணன் தம்பி கை விட்டாலும் சொந்தமாக சில அடி நிலம் இருந்தால் அது உனக்கு உதவும்.அடிதடி இல்ல.

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.

ஆயிரம் வேரை (மூலிகை வேரை) கொன்றவன் அரை வைத்தியன்.Ayiram Death

 • சித்த வைத்திய முறைகளில் மூலிகைகளை தெரிந்து வைக்கிறது மிக அவசியம்.குறைத்தது ஆயிரம் மூலிகைகளின் தன்மை அறிந்தவனே அரை வைத்தியன். பின்ன ஆயிரம் பேர கொன்ன சும்மாவ விடுவாங்க.

களவும் கற்று மற.

களவும் கத்தும் மற.

 • ஊரில் பலர் தவறு செய்யும் போது சொல்வது அல்லது அவர் நண்பர் சொல்வது.ஆனால் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள். திருடுறதையும் ஏமாற்றுவதையும் மறக்க சொல்லிருக்கு,கத்துகிட்டது அப்புறம் இல்ல.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.

 • சூடு வைக்கிறது இல்லங்க,சுவடு சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக கருதுவார்கள்.

ஆமை புகுந்த வீடு விளங்காது.

 • கல்லாமை, இயலாமை, முயலாமை இல்லாதவங்க வீடு விளங்காதுனு பொதுவாக சொல்வாங்க, அதே நேரம் ஆம்பி(காளான்) பூத்த வீடும் உருப்படாது. ஆன ஆமை வந்தாலும் வராட்டியும் விளங்கறது தான் விளங்கும்.

குரைக்கிற நாய் கடிக்காது.

குழைகிற நாய் கடிக்காது.

 • குரைக்கிற நாய் ஏன் கடிக்காது? ஒரு தடவ நாய்க்கு அன்பா சாப்பாடு போட்டு வருடி விட்டா, அதுக்கப்புறம் குழைஞ்சி கிட்டே உங்கள சுத்தும். அன்பு காட்டறவன யாரும் அடிக்கவும் மாட்டாங்க, நாய் கடிக்கவும் செய்யாது. ʕ•́ᴥ•̀ʔっ

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

 • தனியா இருந்த நடுக்குவோம் சரி, நாலு பேர் இருந்தாலே போட்டு பொதைச்சிடுவொம், இதுல படை வேறயா. இது நாகாஸ்திரம் பற்றி சொல்லறது. மகாபாரத மற்றும் இராயண கதைகள் வரும் மிக சக்தி வாய்ந்த இந்த ஆயுதம் எதிரி படையை தெறிச்சு ஓட செய்யும். இராமரே ஒருமுறை இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தில் சிக்கி பின் கருடனால் காக்கப்படுவார்.

கல்ல கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டா கல்லை காணும்.

கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.

 • இங்க நாயகன் என்பது திருமாலை குறிக்கும் , மருவி வருவதற்கும் ஒரு அளவில்லையா. நாயகன் நாயாவதா. இத சொன்னவன காணும்.

சிவ பூஜையில் கரடி

 • முக்கியமான வேலை செய்யும் போது எவனாவது குண்டா வந்துட்ட போதும் கரடியாக்கிடுவோம்.ஆனால் மன்னர் காலத்தில் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். அதான் சிவ பூசையில் கரடி. இசைக்காக சொன்னது,இப்ப தொந்தரவுக்காக பயன்படுது.

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

 • குதிர் என்றால் ஆற்றில் இருக்கும் மண் திட்டுகள், அது இருக்குதுனு நம்பி எறங்குனா ஆபத்து.

 • இன்னொரு பார்வை :

  மங்குதிரை– வானம் மங்கியிருக்கிறது என்றால் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், அதனால் ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் எனவே இறங்கக்கூடாது. மங்கு திரை என்றால் கானல் நீர் என்றும் அர்த்தம் வரும்.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

 • ஆனை = ஆ + நெய் = பசுவின்(ஆவின்) நெய். பூனை = பூ +நெய் = பூவின் நெய் (தேன்) அதாவது சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது.அதே நெய் வயதான காலத்தில் சாப்பிட உடல் ஒத்துக் கொள்ளாது.ஆனால் தேன் சாப்பிடலாம்.

 • ஆனாலும் ரொம்ப ஆடக்கூடாது, எல்லாருக்கும் ஒரு காலம் வரும் என்கிற அர்த்தமே நல்லருக்கிறது.

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.

கழுதையின் தோல் கெட்டால் குட்டிச் சுவர்.

 • பொதி சுமக்கும் கழுதை தோல் அரிப்பால் அவதிப்பட்டால் தன் உடலை போய் சுவத்தில தேய்க்கும். அது தான் குட்டி சுவர், மற்றபடி இளைஞர்கள் ஓய்வு எடுக்கும் இடமல்ல(!!)

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்.

கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்.

 • கழு என்பது ஒரு வகையான கோரைப்புல். அதுல பாய்  தைக்கும் போது கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப் போட்டால் பூச்சிகள் கிட்டே வராது. பாவம்டா கழுதை.

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்.

 • கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறும்.அதுபோல ..உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனா பாவம்டா அந்த கழுதை,உங்களலாம் புளு கிராஸ் சும்மாவா விட்டுச்சு.

மாமியார் உடைத்தால் மண் குடம்,மருமகள் உடைத்தால் பொன் குடம்மா.

மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்.

 • பழமொழி காலத்திற்கு ஏற்றது போல மாறுவதற்கு இது உதாரணம். உண்மை பொருள் மாமியார் வயலில் உழைத்தால் அது மண்ணுக்கு உறமாக மாறி விளைச்சலை பெருக்கும்,அதுவே மருமகளும் இணைந்து உழைத்தால் நிலத்தில் பொன்னாகும்

 • ஆனா இப்ப இருக்குற பழமொழியும் அர்த்தம் நிறைந்த தாகவே உள்ளது.மருமகள் செய்றதெல்லாம் பெரிதாக்கும் மாமியார் இருக்காதன் செய்ராங்க.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.

 • ஊரான் பிள்ளை என்பது மனைவி. அவள் கருவுற்றிருக்கும் போது அவளை நன்றாக கவனித்து கொண்டு ஊட்டி வளர்த்தால் அவள் அவற்றில் வளரும் உன் பிள்ளை தானாக வளரும்.

 • இத யாரவது சொல்லும் போது கவுண்டர்மணி அண்ணன் போல ஊரான் பிள்ளை ஊட்டில வளரும் உன் பிள்ள கொடைக்கானல வளரும் ..அட போடி..’ என கோவம் தான் வருது.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

கல்லான் ஆனாலும் கணவன் , புல்லான் ஆனாலும் புருஷன்.

 • சொல்றதுக்கு நல்லாருந்தா என்ன வேணுமா சொல்வாங்க நம்ம ஊர்காரங்க. கல்லான்னாக படிக்காதவனாக இருந்தாலும் சரி , புல்லானாக அன்பற்றவனாக இருந்தாலும் சரி அவன் உன் கணவன் (அதனால அடிக்காம பாத்துகணும்) அப்படிங்கறது தானே சரி.

புது மொழி : கல்லடிச்சாலும் கணவன் ஃபுல்லடிச்சாலும் புருஷன்.

அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.

 • அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்.அரச மர காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன.குழந்தைப் பேறுக்கும் நல்லது.

 • இப்படி அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிக்க மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்.இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள்.

 • இப்போ புரியுதா ஏன் அரச மர பிள்ளையாருக்கு இவளவு மதிப்பு என்று.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

 • சிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி.தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம் தான் வந்து நின்று கொல்கிறது என அர்த்தம்.

அரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும்.

He who passes the sentence should swing the sword.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.

 • 1.ஆடம்பரமாய் வாழும் தாய், 2.பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3.ஒழுக்கமற்ற மனைவி, 4.ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர், 5.சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.

 • இவை எல்லாம் கொண்டவன் அரசனா இருந்தாலும் காலி தான்.

கோத்திரம் அறிந்து பெண் கொடு,பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

கோத்திறம் அறிந்து பெண் கொடு,பாத்திறம் அறிந்து பிச்சை இடு.

 • ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள இன்னொரு அரசனுக்கு ஆராய்ந்து பார்த்து மணமுடித்து தர வேண்டும். அதேபோல் புலவனுக்கு அவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை அளிக்க வேண்டும்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.

ஆயிரம் தடவ போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.

 • முன்பெல்லாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்ல. எப்படியாவது பொண்ண குறிப்பிட்ட வயதுக்குள் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என பெண் வீட்டுக்காரங்க தீவிரமாக இருப்பாங்க. பொண்ணு பாக்க வந்த மாப்ள கிட்ட எல்லாரும் போய் சொல்லி ஒத்துக்க வைப்பாங்க.மாப்ள சரினு சொல்றது அவளவு கடினம்.

 • இன்னொரு பார்வை : ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.

  download

சேலை கட்டும் பெண்ணை நம்பாதே

 • சேலை கட்டும் பெண்ணை நம்பாதே. ( சேல் + ஐ, சேல் என்பது கண் விழியை குறிக்கிறது. எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே.

 • இந்த பழமொழி பல சமயங்களில் பெண்களுக்கு எதிராகவே சொல்லப்படுகிறது.ஆனால் இது பெண்மையை புகழ்வது.யாவும் உலகில் பிறப்பது பெண்ணில் தான்.நம்மை சுற்றி நடக்கும் எல்லா நல்ல விசயங்களிலும் ஒரு பெண்ணின் நற்செயல் இருக்கும்.

 • பொன்னுங்கனாலே பிரச்சினை என சொல்ல எல்லாரும் யோசிச்சி பாருங்க, அந்த பிரச்சினை முடிவுக்கு வரதுக்கும் ஒரு பெண் தான் காரணமாய் இருந்திருப்பாள்.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்.

 • அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்கள் பறந்து விடுமாம்.

 • குறித்து வைங்க. காதல்,குலம்,மானம்.

ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்.

அயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால்.

 • அயம்னா புத்தி, அதாவது புத்தியில் ஒன்றை வைத்துக்கொண்டு சம்பந்தம் இல்லாத வேறு செயலில் ஈடுபடுவது இரண்டையுமே பாதிக்கும்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.

 • ஆத்துல இப்பெல்லாம் குப்பையை மட்டும் தான் போடுறாங்க, அதெலாம் அளந்தா போட முடியும். அகத்துலனு சொன்னது ஆத்துலனு மாறிவிட்டது. அகத்தில் (aka) மனதில் போகிற வருகிறவர் போகிறவர் சொன்னதையெல்லாம் போட்டு குழம்பாம, தேவையானத மட்டும் சேர்த்து வச்சா போதும்.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்.

 • எறும்பு ஊற கல்லும் தேயும் பழமொழியோட தங்கச்சி மாதிரி இருந்தாலும் இது அது இல்ல. அம்மி ஆனது அத செதுக்குனவன் ஆராம்பிச்சி வீட்டு பெண்களிடம் தினமும் அடியோ அடி வாங்குது.

 • எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒருகட்டதுல உடைங்சிருவார் என்பது போல இவளவு அடிவாங்குர அம்மியும் ஒருகட்டதுல தகர்ந்து விடும்.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

 • முக்கியமான பழமொழி. நல்ல சாப்புடறவங்களுக்கு புடிச்ச வரி. இது விடுமொழி போல. விடுமொழினா விடுகதையா இருந்து பழமொழியா மறியிருக்கும். இதுக்கு பதில் கையாம், அதாவது சாப்புடும் போது  முன்னாடி போகும், போர் சமயங்களில் வில்லை இழுக்க பின்னாடி போகும். பந்திக்க முந்தும் படைக்கப் பிந்தும்.

பந்திக்க முந்து படைக்கப் பிந்து.

 • ஆனா இதுல ஒரு உலக தத்துவமே அடங்கி இருக்கு. பந்திக்க என்றால் கல்யாணம் பண்றது, அதை காலாகாலத்துல  செய்யனும், படைப்பது என்றால் குழந்த பெற்றுக் கொள்ளல்,  அத பொறுமையா செய்யனும்.

Pazamozhi memes
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.

பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல.

 • அழகான பொண்ணு பக்கதுல உக்காந்தா பழம் நழுவி பாலில் விழந்திருச்சு நினப்போம், அதுவே எலுமிச்ச பழமா இருந்தா, பால் செத்துடும்.

 • அதுவே பழம் நழுவி சக்கரைப் பாகில் விழுந்தா, ச்ச் நாக்கு ஊறும்.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

 • சஷ்டியில் நாம் விரதம் இருந்தால், கண்டிப்பாக அகப்பையான கருப்பையில் கர்ப்பம் நிலைக்கும்.

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.

வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை.

 • கலகலப்பு படத்தில் சொல்வது போல நாம அடிச்சவன்லாம் யாரு, ஸ்கூல் வாத்தியார்,கோயில் பூசாரி,etc. வக்கிலாமலாயா வாத்தியார் வேலைக்கு வாராங்க, போக்கதவனுக்கு போலீஸ் வேலைனு வெளிய சொல்லிபாருங்க( இரண்டும் அரசாங்க வேலை).

 • வாக்கு( கற்றல் அறிவு) உள்ளவருக்கு வாத்தியார் வேலை, போக்கு கற்றறிந்தவருக்கு போலீஸ் வேலை உகந்தது என்று தான் சொன்னார்கள். என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா..

கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.

கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான் .

 • ரோட்டில கீழ கடந்ததை எடுத்து படக்கிறவனலாம் பண்டிதன் இல்லை. நல்ல நூல்களை தேடி கண்டுபிடித்து படிக்கிறவனே பண்டிதன்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.

 • மரணத்திற்கு கால நேரம் கிடையாது.அது சிம்பு படம் மாதிரி ஆறிலும் வரும் அறுபதிலும் வரும்.ஆனா இப்பழமொழி கர்ணனுக்காக எழுதியது போல இருக்கு.

 • போருக்கு முன் குந்தி தேவி தன் மகனை அழைக்கிறார்.அதற்கு கர்ணன்,தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி. ஆகவே,ஆறிலும் சாவுதா‌ன்,இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன் என்றாராம்.

 • அதுபோல தர்மம் தலை காக்கும் என்பதும் இவருக்கே பொருந்தும் பழமொழி.

சோழியன் குடுமி சும்மா ஆடாது.

 • சோழியன் என்பது ஒரு சமூக பிரிவாகும்.முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள். பாரம் தூக்கும்போது பெண்கள் சேலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள்.இதற்கு சும்மாடுனு பெயர்.

 • ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழியன் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது. ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.

 • சோழ நாட்டவர் குடுமி எனவும் சொல்வதுண்டு.

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே.

 • அக்காலத்தில் கப்பலில் சென்று பணம் சம்பாதிப்பார்கள். வணிகம் செய்து சேர்த்த அந்த கப்பல் கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே என்பார்கள். கன்னக்கோல் என்பது கள்வர்கள் திருட செல்லும் போது சுவரை துளையிட்டு செல்ல பயன்படுத்தும் கருவி. அரவான் படத்தில் கூட காட்டிருப்பார்கள்.என்ன ஆனாலும் திருட கூடாது என்பதே இதன் பொருள்.

பகையாளி குடியை உறவாடி கெடு.

பகையாளி பகையை உறவாடி கெடு.

 • பகையாளி கூட அன்பாய் உறவாடி அவனுக்கும் நமக்கும் இருக்கும் பகையை கெடுத்து நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும். நம்மாளுக்கு ஒத்து வரமாதிரி மாதிடாங்க அவ்வளவுதான்.

காத்து உள்ளபோதே தூத்திக்கொள்.

 • உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [உயிர்] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.
  பெரியார் செத்துட்டாரேனு சொல்லக்கூடாது,அது பெரியோர்.ஆமா இப்ப யார் விட்லதான் காத்து இருக்கு.

 • வாய்ப்பு அமையும்போதே பயன்படுத்திக் கொள்ளல்.

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி.

 • (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

 • மனித உடலையும் ஒன்பது துவாரங்களையும் குறிக்கிறது. இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது.

தை பிறந்தால் வழி பிறக்கும்

 • பழங்காலத்தில் சாலைகளெல்லாம் மண் சாலைகளே. சாலை மின்விளக்கும் கிடையாது. இரவில் நல்லா தெரியவேண்டும் என்று வெள்ளை நிற மண் சாலைகள் அமைப்பார்கள்.சாலைகளும் மார்கழி மாத பனியினால் காணமல் போகும். அதனால் நடைசாரிகள் சாலைகள் கடக்க மிகவும் துன்பப்பட்டனர்.

 • தை மாதத்தில் பனி குறைய தொடங்கும்.எனவே தான் தை மாதம் பிறந்தால் பனியினால் மூடப்பட்ட வழி பிறக்கும்.

 • இதனையே உழவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில், தை மாதம் – அறுவடைக்கு ஏற்ற காலம் எனவே தை பிறந்தால் பொருள் ஈட்ட வழி பிறக்கும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.

 • பொன் என்பது வியாழன்((ஜுபிட்டர்) கிரகத்தை குறிக்கும். வியாழன் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோள்.செவ்வாய்க்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. அளவில் பெரிதாய் இருப்பதாலும் சூரியனிலிருந்து தொலைவில் இருப்பாதாலும் பூமியிலிருந்து சில சமயங்களில் காணக் கிடக்கும்.

 • அதே சமயம் புதன்(மெர்குரி) கோள் அளவில் சிறியது மேலும் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அதன் ஒளியின் முன் தெரியவே தெரியாது.அதனால் பூமியிலிருந்து காணும் வாய்ப்பு அரிது.

 • பொன் தரிசனம் கிடைத்தாலும் கிடைக்கும்.புதன் தரிசனம் கிடைக்காது.

 

இவற்றில் எல்லாமே சரி என சொல்ல முடியாது, அதனால..,

பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது. (>‿◠)✌ 

 

Ref –

http://www.riyadhtamilsangam.com/EK/arinthathu_1.htm

http://tamilvizhumiyangal.blogspot.in/2014/09/blog-post_5.html

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=32619.0

1 Comment

Leave a Comment