இன்று இருந்த அடையாளமே அற்று புதைந்து கிடைக்கும் கோலார் தங்க வயல் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக விளங்கியது. கிட்டதட்ட அந்த காலத்தில் மொத்த இந்தியாவின் தங்க உற்பத்தியும் இங்கிருந்து தான் கிடைக்கப்பெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் கடன் கேட்டார் அன்றைய பிரதமர் நேரு. அது மறுக்கப்பட்ட போது எங்களிடம் கே.ஜி.எப் இருக்கிறது என சுட்டிக் காட்டிய பின்னரே கடன் கிடைத்தது என்றால் அதன் முக்கியதுவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

இன்று KGF(Kolar Gold Mines) என அழைப்படும் நகரம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,196 அடி உயரத்தில் உள்ள “தங்க சுரங்கம்” மற்றும் அதை சார்ந்த ஊரையும் உள்ளடக்கிய பகுதியாகும். ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாய்வில் கிடைத்த தங்க புதையல்கள் கோலார் தங்கத்தை ஒத்திருப்பது சங்க தமிழ் நாகரிகம் சிந்து வரை பரவியிருந்ததிற்கு சான்றாக இருக்கிறது.

கிமு முதலே பெரும்பாலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கோலார், கிபி இரண்டாம் நூற்றாண்டின் காலத்தில் கர்நாடகாவை ஆண்ட மேலைக் கங்கர் அரசாட்சியில் தலைநகரமாகவும் விளங்கியது. கிபி 1000 முதல் உத்தம சோழன், ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் என பல நூற்றாண்டு தென்னாட்சிக்கு உட்பட்டு இருந்தது.

Kolaramma_Temple_kolar.jpg

பல சிவன் கோவில்களும், கல்வெட்டுகளும் சோழரின் ஆதிக்கத்தை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. மாரிகுப்பம் சோமநாதர் கோவில் மிகவும் பழமையானது. மேலும் ராஜேந்திர சோழன் காலத்தில் நிறுவப்பட்ட கோலரம்மா கோயில் தமிழர் கல்வெட்டுகளையும் சோழ போர் சித்திரங்களையும் உள்ளடகியிருக்கிறது. பின்வந்த காலத்தில் இவற்றில் பெரும்பாலும் கன்னட ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டது வேறு கதை.

கிபி 1117-ல் மைசூர் ஹோய்சலர்கள் அரசுக்கு ஆட்சிக்கு உட்பட்ட கோலார் பின்னர் விஜயநகரம், மாராத்தியர்கள், முகலாயர்கள் என இறுதியாக திப்பு சுல்தான் கைக்கு வந்தது. சுல்தான் காலத்தில் தங்க சுரங்கம் தோண்டும் பணி முடுக்கிவிடப்பட்டது. கோலார் தங்க வயலாக மாற சுல்தான் ஒரு காரணமாக இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சியில் தங்க புதையல் சுரங்கமாக மாறியது.

1800 ஆங்கிலேயர் கோலாரை கைப்பற்றிய போது தங்கம் தோண்டும் மிக தீவிரமாக துவங்கியது. வேலைக்கான ஆட்கள் அதிகளவு தேவைப்பட தமிழ்நாட்டின் வடாற்காடு மாவட்டமான தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரியில் இருந்தும், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் பெருவாரியான மக்கள் வரவழைக்கபட்டனர். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகட்டித் தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் உருவாகியது.

Kolar mine fileds (1)

ஆங்கிலேய ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் நிறுவனம்தான் இங்கே சுரங்கம் தோண்டத் தொடங்கியது. தங்கம் தோண்டும் பணி மிக விறுவிறுப்பாக நடக்க கிட்டதட்ட 300000 மக்கள் இந்த தங்க பூமியில் குடியேறினர். சுரங்கத்தின் மையத்தில் பிரிட்டிஷ், இந்திய பொறியாளர்கள், புவியியலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் களுக்கென தனியே பல்வேறு வசதிகளுடன் காலனி கட்டமைக்கப்பட்டது.

ராபர்ட்சன்பேட், ஆண்டர்சன்பேட் என்ற ஆங்கிலேய அதிகாரிகளின் பெயரால் வழங்கப்பட்ட இந்த மைய காலனி கோல்ஃப் கோர்ஸ், டென்னிஸ் மன்றம், நடன அரங்குகள் பார்கள் மற்றும் குடிசை பங்களாக்கள் கொண்ட தோட்டம், தேவாலயங்களும் நிறுவப்பட்டது. சிதிலமடைந்த அதன் மிச்சங்கள் இன்றும் அங்காங்கே தென்படுகின்றன.

அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நவீன சுரங்கம் தோண்டும் உபகரணங்கள், வாகனங்கள் இங்கிலாந்தில் இருந்து பிரத்தியேமாக கொண்டு வரப்பட்டன. இந்தியாவின் முதல் மற்றும் பழமையான மின் தயாரிப்பு மையமும் இங்கே தான் உருவானது.

காவேரி மின்சார சக்தி ஆலை என வழங்கப்பட்ட இந்த தயாரிப்பு காவிரி கரையில் அமைக்கப்பட்டது. அங்கே மின்விளக்குகள் எரிந்த காலத்தில் பெரும்பான்மையான இந்தியாவில் மின்சாரமே இல்லாமல் இருந்தது.

Kolar mine fileds (4)

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கே.ஜி.எப் மைசூர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. சில காலத்தில் நாட்டுடமையாக்கப்பட்டது. 1972 பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (Bharat Gold Mines Limited (BGML) and BEML). இருந்தாலும் 2000 காலக்கட்டத்தில் இதன் தயாரிப்பு மெல்ல குறுக ஆரம்பித்தது.

காலப்போக்கில் தங்க இருப்பு இருந்தும் தயாரிப்பு செலவினங்கள் அதிகமான காரணத்தாலும் 2001ல் சுரங்கத்தில் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. 140 ஆண்டுகால பணி கண்டுக் கொள்ளாமல் விடப்பட்டது.

அங்கிருந்த தொழிலாளர்கள், பெருவாரியான தமிழர்களும் பிழைப்பை தேடி பெங்களுருக்கு குடிபெயர ஆரம்பித்தனர். தற்போது 100000 மக்கள் மட்டுமே அங்கே வசிக்கின்றனர். இன்றைய பல பெங்களுர் வாசிகளின் சொந்த ஊர் KGF ஆக இருப்பதற்கு இதுவே காரணம்.

Kolar mine fileds (2)

கன்னட மொழி மாவட்டமாக இருப்பினும் கேஜிஎப் பகுதியில் மட்டும் பெருவாரியான தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என முறையாக வாழ்கிறார்கள்.

2004 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தங்க வயலை திறந்து சுரங்கத்தில் செல்வம் எடுக்க வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது. அங்கு இன்றும் வாழும் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பை தரும் என்றும் முன்மொழியப்பட்டது.

நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும். இதுவரை குறிப்பிடதக்க வகையில் அறிக்கை எதுவும் வரவில்லை. 2016 ஆம் ஆண்டு மோடி அரசு கோலார் சுரங்கத்தை திறப்போம் என்று கூறியது. அதுபற்றி உங்களுக்கே தெரியும்.

மின்னும் செல்வத்தை அள்ளிக் கொடுத்து மின் விளக்கை முதலில் கண்ட பூமிக்கு மீண்டும் வெளிச்சம் வரும் என்ற எதிர்பார்போடு..

Leave a Comment