காகித கப்பல்கள்

Seyon


சில இரவுகள் சில தனிமைகள்

ஒவ்வொரு தினமும் வெவ்வேறு மனிதர்கள்

எண்ணத்தில் அறியா வண்ணத்தில் முகங்கள்

இன்பத்தில் மட்டுமே இணைசேரும் உறவுகள்

நட்பென்ற பெயரில் நயமான நாடகங்கள்

மெய்யில்லா சொல்லிற் பொய்யோடு புன்னகைகள்

சலனமான மனதோடு சகஜமான பகிர்வுகள்

அறியாமை ஒளியில் மறைகின்ற விண்மீன்கள்

புறம் கடந்த பின் முதுகில் ஏளனங்கள்

எதிர்கால இச்சையுடன் ஏவப்படும் அறங்கள்

தேவை தீரும்வரை தேவைப்படும் தோழமைகள்

நல்லவர்கள் உடுப்பில் என்னவர்கள் நடிப்பில்

செல்வம் சிறக்கையில் சேற்றில் தாமரைகள்

சிற்றின்ப வெள்ளத்தில் சேர்ந்தோடும் பருவங்கள்

மோகத்தின் கண்களில் காதலின் கைகள்

காரணம் அறியாமல் கரைந்தோடும் காலங்கள்

கண்களை கட்டிக்கொண்டு கடவுளிடம் பூஜைகள்

காகிதம் கிழிந்துவிட்டால் காந்தியும் காலடிகளில்

எத்தனை இருந்தும் இத்தனை இனியெதற்க்கு

யாவும் பொய்யாக யதார்த்த பொம்மையாகிறேன் ..