பாவை

Seyon
நள்ளிரவு நேரம் வண்ணமயமான வானம்,

 கதிரவனோடு கை கோர்த்து பனியை

போன்ற பெண்ணொருத்தி வந்தாள்,

 
நடக்கும் பாதையில் மண் கரையாமல் இருக்க

மிதக்கும் காற்றை காலணியாக அணிந்திருந்தாலும் ,
 

அருவியாய் அணிந்த கொலுசுகள் உறக்கத்தை திருடின ,
 
வளைவுகள் கொண்ட மேனிக்கு

வளைந்து நிற்கும் வானவில் உடையை இருந்தது ,
 

அவளின் மோதிர நிலவில் நட்சத்திர கற்கள் பொதிந்துருந்தன,
 
மழை துளிகளால் மாலையாக கோர்ந்து

அவள் மணி கழுத்திலே மின்னின ,
 

பூவிலிருந்து வழிந்த தேன் அவள் உதட்டில் சாயமாய் இருந்தது ,
 

சூழ்ந்து நிற்கும் கடல் ஒன்றிணைந்து அவள் கைகளில்

வளையல்களாக சுழன்று விளையாடி கொண்டிருந்தன ,

 
மின்னலை பிடித்து மூக்கில் சிறை வைத்து

இருந்தால் மூச்சாக அல்ல மூக்குத்தியாக,
 

அசையா மலைகள் அவள் காதுகளில்

அங்கும் இங்குமாக ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தன ,
 

பல வண்ண மேகங்கள் அவள் மணம் வீசும்

கூந்தலில் மலர்களாக மலர்ந்திருந்தன ,

இரவு வானத்தை கண் மையாக வரைந்து ,
 

உலகை ஒரு விரலில் இழுத்து தன் நெற்றி

பொட்டில் வைத்திருந்தால், பூமியின் மீது நிலவு

வரைந்த ஓவியமாக அவள் நிழல் கூட ஒளிர்ந்தது ..