விவாகம்

Seyon

விவாகம்

 
உறவுகள் இணைய உள்ளங்கள் கலக்கும் உற்சவ

திருவிழாவில் இரு மனம் இணைய இல்லங்கள்

இணைந்து நடத்தும் இன்னிசை விருந்தில்

உன்னத காதல் மலரும் திருமண பருவம்,

 
சின்ன சின்ன கண்களில் எண்ணிலா கனவுகளுடன்

வண்ண வண்ண பட்டாடை அணிந்து பளிங்கு

போன்ற பெண் மணவறையை அலங்கரிப்பாள்,

 
மாலை அணிந்து மனைவியாக போகின்ற

மகிழ்ச்சியில் மஞ்சம் கொண்ட மணப்பெண்

மஞ்சள் பூச கூட மறந்திருப்பாள்,சேலை

அணிந்த சின்ன பெண்ணை தோழிகள் கிண்டல்

செய்ய மருதாணி பூசிய மலர்கைகளால் வெக்கம்

தாங்காமல் முகத்தை மூடிக்கொள்வாள் .,

 
மிளிரும் பார்வையுடன் மீசையை முறுக்கியபடி

மிராசு நடையிட்டு மன்னவன் வருவான்,

எதிர்பார்த்து கொண்டிருந்த எதிர்கால உறவு

எதிரே நிற்க கண்களாலே பல கவிதைகள்

சொல்வான், பிள்ளை குணம் மறந்து வெள்ளை

வேட்டி அணிந்து வீரதிருமகனாக நளினம்

கொண்ட நங்கை அருகே வீற்றிருப்பான்,

 
பானையில் விழுந்த மோதிரத்தை பக்குவமாக

விட்டுக்கொடுத்து பார்வை வலை வீசுவான் அவன்,

கையிலிருக்கும் பூப்பந்தை செல்லமாக தூக்கி

எறிந்து ஓரப் புன்னகை சிந்துவாள் அவள்,

 
தலையில் மல்லிகையும் தலைவன் இட்ட

குங்குமமும் கொண்டு பாவாடை அணிந்திருந்த

சின்னப் பெண் பட்டாடை உடுத்தி அமர்ந்திருக்கும்

மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் அமிர்தமாய்

வழியும் பெண் வீட்டாரும், மகளாக போகும்

மருமகள் வருகிறாளே என்ற மகிழ்வில்

மாப்பிள்ளை வீட்டாரும் மகிழ கோடையில் பெய்த

ஆலங்கட்டியாய் சுற்றமும் நட்பும் சூழ்ந்து

அர்ச்சனை தூவ அன்பான ஆர்பரிப்புடன்

விடை பெற்றனர் கணவனும் மனைவியும் …