இணைய பேசி

Seyon

பேசுங்க அம்மா என்றான் பையன்
சற்று தயக்கத்தோடு கண்களை சரிசெய்து
மகளின் முகத்தை கண்டாள் தாய்,

எப்படிமா இருக்க , உங்கிட்ட பேசியே
ரொம்ப நாளாச்சு எதாச்சும் சேதியாம்மா
மகள் ஆவலாய் விசாரித்தாள்,

என்னடி பேசுற புள்ள முகத்த பாக்க
காரணம் வேணுமாடி, உன் கல்யாணத்துக்கு
அப்புறம் இந்த அம்மாவயே மறந்துடில்ல,

அம்மா ஏன் இப்படியேல்லாம் பேசுற
என்னைக்கும் நா உன் புள்ள தான
இதுக்காக ஏன் இப்ப அழ ஆரம்பிக்கிற,

இல்லடி நான் அழல, அது சரி புள்ள
புறந்திருக்குனு சொன்னியே நல்லா பாக்குறியா
எப்படி இருக்கான்டி எம் பேரன்,

அடிக்கடி கேக்குறாம்மா அவன் ப்ரண்ட்ஸ்
நிறைய பேருக்கு பாட்டி இருக்காங்கலாம்
என் பாட்டி எங்கனு கேக்குறான்,

உன்ன கட்டி முத்தம் கொடுக்கனும்
போலிருக்கு தாயி, சரி என் பேரன்
முகத்தை கூட காட்ட மாட்டியா எனக்கு,

ஐயோ இதோ கூப்புடுறம்மா, டேய்
இங்க வாடா ,அப்புறம் விளையாடலாம்
வந்து உன் பாட்டிய பாரு,

ஐ பாட்டியா,குரல் மட்டும் கேட்க
எல்லாம் சட்டென மறைந்து விட்டது,
டேய் தம்பி என்னடா ஆச்சு,

ஒன்னும் இல்லமா நெட் டிஸ்கனெக்ட்
ஆயிடுச்சு கொஞ்சம் இரு மறுபடியும்
ஸ்கைப்ப கனெக்ட் பண்றன்,அக்கா வந்துட்டாபாரு,

அந்த அம்மாவின் முகம் ஏக்கத்தோடு
மீண்டும் பார்த்தது கணினி திரையை…