2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்தாகவே அமைந்தது. சில வருடங்களாகவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் ஒவ்வொரு மாதமும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்ட வண்ணமே இருந்தது.
ஆனாலும் வழக்கம் போல இளம் இயக்குனர்களும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெற்றி வலம் வந்தது திகைப்பை தரவில்லை. முக்கியமாக பெரிய நாயகர்களுடன் புதுமுக இயக்குனர்கள் கைக்கோர்த்து தந்த தரமான படங்களான இரும்புத்திரை, 96, பரியேரும் பெருமாள் போன்றவை 2018 யை திருப்தி படுத்தியது. வாருங்கள் இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை பட்டியலிடுவோம்.
பரியேறும் பெருமாள்(Pariyerum Perumal)
வழக்கமான காதல் சாதிய ஒடுக்குமுறை படங்கள் நிறைய வந்தபோதும் இந்த படம் அளவிற்கு யதார்த்தின் உண்மை நிறத்தை அள்ளி நிறைத்து வலம் வந்தது பரியேறும் பெருமாள். சாதியை ஏற்றிச்சொல்லமால் நடப்பதை அப்படி சொன்னது அழகு. ஒவ்வொரு கேரக்டர் பக்கமும் நின்று கதை சொல்லும் இயக்குனர் படத்தை முடித்த விதத்தில் தியேட்டரில் கைதட்டுகளை வாங்கிறார். நாயகனின் அப்பா, வயதான வில்லன், கல்லூரி பேராசிரியர் போன்ற கதாபாத்திரங்கள் இந்திய சினிமா இதுவரை காணதது
நிறை : கதிர் & ஆனந்தி
96
அழகி, ஆட்டோகிராப், பிரேமம் வரிசையில் அடுத்தொரு பள்ளிக் காதல். ஒவ்வொரு படத்திலும் காதல் கதை இருந்தாலும் காதல் படங்கள் என்று எண்ணிப் பார்த்தால் தமிழில் மிக குறைவு தான். ஒரு பக்கம் பள்ளி காதல் இன்னொரு பக்கம் நிகழ்கால காதல் என சலிப்படையாமல் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்ததில் வெற்றி அடைகிறார். புன்னகை அழுகை என விஜய் சேதுபதி திரிஷா தரும் பாவனைகள் மனதை கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு ஆணும் ராமுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கமால் இருந்திருக்க முடியாது.
நிறை : நடிப்பு, இசை
வடசென்னை(VadaChennai)
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் மற்றுமொரு தரமான படம். இயக்குனர் ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கி இருந்தார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாதியில் வரும் தத்ருபமாக ஜெயில் செட் ஆர்ட் வடிவமைப்பின் அடுத்த கட்டம். படத்தின் பெரிய பலமே கதாபத்திரங்களை வெவ்வேறு காலகட்டங்களில் திரை முழுதும் கடத்திச் செல்லும் விதம்தான். ராஜன், அன்பு என எல்லா பெயரும் படம் முடிந்தும் மனதில் பதிகிறது.
நிறை ; நடிப்பு, திரைக்கதை & கலை வடிவமைப்பு
ராட்சசன்(Raatchasan)
தமிழில் திரில்லர் படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனாலும் சைக்கோ திரில்லர் படங்களில் சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் ராட்சனை நிச்சயம் சேர்த்ததாகவே வேண்டும். விறுவிறுப்பான திரைக்கதையில் பெண்கள் பாதுகாப்பை பற்றியும் எடுத்துரைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர். போலிசாக வரும் விஷ்ணு நன்றாக நடித்திருந்தாலும் பட இறுதியில் நினைவை மிரள வைப்பது என்னவோ கிறிஸ்டோபர் தான்.
நிறை : மிரட்டல் காட்சிகள் & வில்லன் கதாபாத்திரம்
மேற்குத்தொடர்ச்சிமலை(Merku Thodarchi Malai)
வழக்கமான சினிமாவாக இல்லாமல் மலைவாழ் மக்களின் வாழ்வியலை பதிவு செய்திருக்கின்றனர் படக்குழுவினர். தேவையற்ற சினி மசாலாக்களை வைக்காமல் மலைவாசி மக்களை வைத்தே போகிற போக்கில் நடக்கும் ஒரு இயற்கை அனுபத்தை வெள்ளித்திரையில் தந்தது இந்த படம். படத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு சமர்பிக்கும் இயக்குனர் லெனினியையும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிக்கும் பாராட்டுகள்.
நிறை : எழில்
காலா(Kaala)
ரஜினிவை வைத்து படம் எடுக்கும் எல்லோரும் ஆக்சன், பிரம்மாண்டம் என செல்ல நிலம் எங்கள் உரிமை என்ற வலிமையான கருத்தை சூப்பர்ஸ்டார் குரலில் கனமாக ஒலிக்க செய்தது காலா. யதார்த்தமான கதாபாத்திரங்கள், சேரியை கண்முன்னே கொண்டு வந்த செட், முன்னாள் காதலி, மக்கள் அரசியல், முக்கியமாக திரைக்கு தகுந்த பின்னணி இசை என எல்லாவற்றிலும் வலுசேர்த்திருக்கிறார் ரஞ்சித்.
நிறை : ரஜினி நடிப்பு & நில உரிமை கருத்து
இரும்புத்திரை(Irumbu Thirai)
ராணுவ அதிகாரியான வரும் விஷால், இணைய உலகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹேக்கரான WhiteDeveil யை எப்படி பிடிக்கிறார் என்ற கதையை சுவாரசிய எலி பூனை ஆட்டமாக திரையக்கியுள்ளார் இயக்குனர் P.S.மித்ரன். படத்திற்காக அவர் செய்திருக்கும் ஆராய்ச்சிகள் மற்றும் மொபைல் பயன்பாடு விழிப்புணர்வு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நிறை : அர்ஜுன் மற்றும் முறையான ஆராய்வு
கோலமாவு கோகிலா(Kolamavu Kokila)
அறம் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு மிக முக்கியமான படம் கோலமாவு கோகிலா. அம்மாவை காப்பாற்ற எந்த தூரத்துக்கும் செல்லும் பழைய ஹீரோ கதையில் ஹீரோயினை மையபடுத்தி சவால் விடுத்திருக்கிறார் நெல்சன். சண்டை காட்சி, குத்து பாடல் என எதுவும் இல்லாமல் யோகி பாபுவை துணை நாயகனாக வைத்து வெற்றி படத்தை தந்திருக்கும் அவரது இயக்குனரின் துணிச்சல் அபாரம்.
நிறை : அனிருத் இசை & யோகி பாபு காமெடி
கடைக்குட்டி சிங்கம்(Kadaikutty Singam)
ஓரளவு நல்ல படங்களை தந்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பாண்டிராஜிடம் இருந்து விவசாய குடும்பத்தை மையமாக வைத்து வெளியானது கடைக்குட்டி சிங்கம். நான்கு அக்காகளுடம் பிறக்கும் கார்த்தி ஒரு விவசாயியாகவும் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் கடினப்படும் காட்சிகள் படத்துக்கு துணை நின்றன. பல துணை நடிகர்கள் இருந்தும் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவம் அளித்து கமர்சியல் சினிமாவுக்குள் இறுதிவரை ஒரு குடும்ப கதையை தொடர்புபடுத்தி சுவாரசியமாக கொண்டுபோனது ரசிக்க வைத்தது.
நிறை : வசனங்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு
2.0
பல வருடங்களாக இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கபட்ட திரைப்படம் எந்திரன் 2.0. சங்கர், ரஜினி, ரஹ்மான் என்ற பிரம்மாண்டங்கள் ஒன்று சேர, படத்திலும் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. படத்தின் திரைக்கதையில் அங்காங்கே சில சொதப்பல்கள் இருந்தாலும் தொழிற்நுட்ப ரீதியாக இந்தியாவில் இதற்கு இணையான படம் இதுவரை உருவாக்கப்படவில்லை.
நிறை : அக்ஷய் உழைப்பு மற்றும் அபார கிராபிக்ஸ் விசுவல்
டிக் டிக் டிக்(Tik Tik Tik)
இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான டிக்டிக்டிக், அதற்கான தகுதியோடு விண்வெளி தொடர்பான குறிப்புகளையும் சிறந்த கலை அமைப்போடு உருவாக்கப்பட்டு ஆச்சரியபடுத்தியது. தமிழ் ரசிகர்களுக்காக மசாலா காட்சிகள் இருந்தாலும் சுவாரசியம் குறையா திரைக்கதை மூலம் புதுவித திரை அனுபவத்தை தந்தது
கவனத்தை ஈர்த்தவை(Special Mentions):
மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம்(chekka chivantha vaanam) அதன் மல்டி ஸ்டார் தயாரிப்பிற்கும் வெகுநாள்க்கு பிறகு ஒரு நல்ல ஆக்ஷன் படம் வேண்டுமென்ற ஆவலையும் தீர்த்தது. மற்றொரு ரஹ்மான் படத்தை போல இதுவும் இசைக்காக பாராட்டை பெற்றது.
சர்ச்சையான வசனங்கள் காட்சிகள் என சர்கார் படம் திரைக்கு வரும் முன்னே பல பிரச்சினைகள். எனினும் வெற்றிக்கரமான வெளியான விஜய்-முருகதாஸ் இன் சர்கார்(Sarkar) வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது. இருப்பினும் இது இன்னொரு துப்பாக்கியோ கத்தியோ இல்லை.
அதேபோல 2018, நாயகியை மையப்படுத்தி எடுக்கப்ட்ட ஆரோக்கியமான படங்களுக்கு நல்ல பலனை தந்தது. கால தாமதமாக வந்தாலும் இமைக்கா நொடிகள்(Imaikka Nodigal) எந்த காலத்திலும் ஹிட் அடிக்கக் கூடிய திரைப்படம் தான். நல்ல திரில்லர் கதையோடு எதிர்பாராத டுவிஸ்ட்கள் நயன்தாராவின் வெற்றி படங்களின் பட்டியலில் இதையும் சேர்த்தது.
கீர்த்தி சுரேஷ்க்குள் இப்படி ஒரு நடிகையா என்று எல்லோரும் வியக்க வைத்தது நடிகையர் திலகம்(Nadigaiyar Thilagam) திரைப்படம். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றி கொண்ட சாவித்திரி படத்தின் மூலம் மீண்டும் வாழ்ந்துள்ளார்.
கன்னட ரீமேக் ஆன யுடர்ன்(U Turn) படமும் தமிழ் தெலுங்கில் சமந்தாவுக்கு நல்ல மதிப்பை தந்தது. இவை இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா(Kanaa) ஜோதிகா நடித்த காற்றின் மொழி(Kaatrin Mozhi) ஆகிய திரைப்படங்கள் நிச்சயம் 2018 இல் மிஸ் செய்யக்கூடாத படங்களில் இடம்பெறுகின்றன.