Image default
Culture Tradition

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம். மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி . வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.

உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும். இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் சக்கடாவண்டி என்னும் பாரவண்டி வடிவமைப்பு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5 ¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது. இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன் என்று சற்று பார்ப்போம். பொதுவாக ஒரு நபரை நெட்டையான ஆள் என்றோ குட்டையான ஆள் என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை(reference point) என்று ஒன்று இருக்க வேண்டும் தானே. அதாவது சராசரி உயரம் என்பதாக. நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 5 ½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது எண் சாண் உடம்பு என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும். இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்’ என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5 ¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும் .

சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் ‘போல்’ என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1 ½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும். இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். அந்த வரையறையில் சில:

சட்டம்…………… வாகைமரம்
குறியது……….. வாகைமரம்
ஆரக்கால்……. உன்னி
அலகு…………. தேக்கு
குடம்……….. வைமரம்
தெப்பக்கட்டை……. வேங்கை
போல்……… பாலோடி(அ)வேங்கை
நுகம்…… கொன்றை(அ)மஞ்சணத்தி(அ)புன்னை
நோக்காகுச்சு…… வைமரம்
தாங்குக்கட்டை…… வைமரம் பிள்ளைச்சட்டம்….. வாகை
குரங்குகம்பு……… கல்மூங்கில்
ஊனிகம்பு…. விடத்தலை
அளி……. மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.

எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.பயணத்தை தொடர்வோம்.

Related posts

உலகில் தலை சிறந்த 10 போலிஸ் படைகள் கொண்ட நாடுகள்

Seyon

செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Seyon

ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்?

Seyon

Leave a Comment