ஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்

ஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்

மனிதன் என்றுமே தன் வெற்றுடலை மட்டுமே சார்ந்தவன் அல்ல. அதன் இயங்கு சக்தியாக ஆன்மா சர்வமும் பாய்ந்து கொண்டிருத்தல் வேண்டும். அதன் ஆற்றல் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது.
உடலால் செல்ல இயலாத பிரபஞ்ச வெளியில் கூட ஆன்மாவால் பயணிக்க இயலும். இதனை ஆங்கிலத்தில் Astral Projection( or Astral Travel) என்று சொல்வார்கள்.

அதாவது உங்கள் உடலை ஒரு இடத்தில் கிடத்தி உயிர் மட்டும் ஒரு புதிய பிரதேசத்தை அடையும் செயல். ஒருவகையான டெலிபதி போல. உதாரணமாக அவதார் படத்தில் நாயகன் ஒரு பேழையில் அடைக்கபட்டு அவரது ஆன்ம உடல் மட்டும் வனத்தில் சென்று நாயகியோடு வசிப்பது போன்று காட்சி அமைக்கபட்டிருப்பதை சிந்தித்து பாருங்கள்.

இதனை Out of Body Experience என வழங்கும் மேற்கத்திய உலகத்தினர் இப்படியான அனுபவத்தை பெற பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். 19 நூற்றாண்டிற்கு பின்னர் தான் இதைப் பற்றிய பேச்சு புழக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தில் தொடங்கிருக்கிறது. பல புதினங்கள், நாவல்கள்,திரைபடங்கள் என விளக்க இயலாத விஞ்ஞான கொள்கைகளுக்குள் தற்போது இது இணைந்துவிட்டது.

அஸ்திவாரமாக 17 நூற்றாண்டில் இம்மானுவேல் சுவிடன்பார்க் என்ற ஐரோப்பியர் ஆன்ம பயணத்தை பற்றி டைரிக் குறிப்புகள் எழுதி வைத்தார். அதன் பின்னர் பல்வேறு இலக்கியவாதிகள் இதனை முயன்றதாகவும் அதை பற்றிய விளக்கங்களை குறிப்பிட்டனர். இவர்களில் முக்கியமானவர் ராபர்ட் மோர்னி.

1971-94 வரையான காலத்தில் உடலை விட்டு வெளியேறும் அனுபவத்தை பற்றிய இவர் இயற்றிய புத்தகங்கள்(Journeys to other realms) மிக புகழ்பெற்றன, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் பட்டன.  இவர் ஆன்ம பயணத்தை பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இயக்கத்தையும் தொடங்கி தற்போது சில தன்னார்வளர்களை வைத்து சோதனைகள் செய்து வருகிறார்.

ஆன்மாவின் மற்றொரு நிலைக்கான(altered stats of consciousness) இவரது தேடல்கள் பலரை இந்த கொள்கையை பற்றிய மேலும் அறிய தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
உடலை விட்டு வெளியேறும் ஆன்மாவின் சக்தியானது தூண்டுதல் மற்றும் தூக்கத்தின் போது நடைபெற்று சொர்க்கத்தின் பல்வேறு அடுக்கு பகுதிக்குள் நுழைவதாக சொல்கிறார்கள்.

பொதுவாக இரண்டு வழிகளில் ஆன்ம வெளிக்கு(Astral Plane) நாம் சென்றடைய முடியும். ஒன்று உறக்கத்தின் வழியே மற்றொன்று யோக முறைகளில் தெளிவாக கனவுகள் எப்போதும் அரிதானவையே. இவ்வகை கட்டுபடுத்தப்பட்ட நினைவுகளில் பலர் தாங்கள் ஆன்ம லோகத்தை அடைந்ததாக கூறுகிறார்கள். Inception படம் உங்கள் நினைவுக்கு வரலாம்.

இதற்கான வழிமுறைகளில் நல்ல உறக்கத்திற்கு பின்னர் hypnotic state செல்ல வேண்டும்.அது ஒருவகையான சுயவசிய நிலை. பின்னர் உடலில் ஒவ்வொரு பாகமாக வெளியேற வேண்டும். இந்த சமயத்தில் உடலில் அதிர்வலைகள் உண்டாகும். மற்றொரு பரிணாம உலகை அடைவதால் இது உண்டாகிறது.

பலரும் தங்கள் உடலை விட்டு வெளியேறி சுற்றுபுறத்தை கண்டதாகவும் இது வாழ்வில் விவரிக்க முடியாத ஒரு அனுபவம் என விளித்துள்ளனர். Insidious படத்தில் வருவது போல மிகவும் இருள் சூழ்ந்த பாதாள உலகத்தை காணப்படுவதாகவும் அது சாத்தானின் இருப்பிடமாகவும் எண்ணப்படுகிறது.

இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று உறக்கத்தின் போது வேற்றுகிரக வாசிகள் தங்களை கடத்தி சென்று பறக்கும் தட்டுகளில் ஆராய்ச்சி செய்ததாக சொல்கிறார்கள். அந்த சம்பவம் நடந்த போது அவர்கள் உடல் வீட்டிலும் உயிர் மட்டும் கடத்தி செல்லப்பட்டிருக்கிறது.

மதனின் “மனிதனும் மர்மங்களும்” என்ற புத்தகத்தில் கூட இவ்வகையான ஏலியன் அனுபவங்களை பற்றிய விளக்க கதைகள் நிறைய இருக்கிறது.

ஏலியன்கள் இவர்களிடன் பாலின மற்றும் மரபணு சோதனை செய்ததாக கதைகள் சொல்வதுண்டு. ஆனால் இவை எல்லாம் ராபர்ட் மோர்னி OBE இயக்கத்தை துவங்கிய அதே சமகாலத்தில் நிகழ்ந்தவை.
விஞ்ஞானத்துடன் மிக குழப்பமான வகையில் தொடர்பை வைத்திருக்கும் ஆன்ம பயணத்திற்கு அறிவியல் ரீதியாக இதுவரை விளக்கங்கள் தரப்படவில்லை.

இது ஒருவகையான மனமே உண்டாக்கும் மாயத்தோற்றம்(Hallucination) என அறிவியலார்கள் கருதுகின்றனர். கமல் சொன்னதே தான்.ஆன்ம பயணம் மேற்கொண்டதாக சொல்லப்படும் சிலர் மூளை தொடர்பான சிகிச்சை மற்றும் போதைப்பொருள் அடிமையாக இருந்துவந்தது தெரியவந்துள்ளது.

அதே சமயம் 1978 ல் இங்கோ சுவான் என்பவர் வியாழன் கிரகத்திற்கு சென்று வருவதாக ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவுகள் 37% மட்டுமே சரியாக இருந்தன.இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் பெரு வெற்றியை தராததால் சில அறிவியலார்கள் இதனை கற்பனை காட்சி எனவும் ஒரு கனவுலக நிலை மட்டுமே என கருதுகிறார்கள்.

மூளையின் திறனால் ஒரு மாய உலகத்தை உருவாக்க இயலும் என்பதை ஒப்புகொண்ட ஆராய்ச்சியாளர்கள் ஆன்மா இருப்பதையும் அதன் பயணத்தையும் ஏற்கவில்லை.

நம் உலகிற்க்கு இணையான வெவ்வேறான அதிர்வெண்களை கொண்ட பிரபஞ்சங்களை(Parallel Universe) கோட்பாட்டளவில் சாத்தியமாக கருதுகின்றனர்.(Doctor Strange, The Flash, Fringe Tv series)
சிலரின் கருத்துபடி, ஆன்ம பயணம் என்பது ஒரு மாயை, கனவுலகம், ஆழ்மனத்தின் கற்பனை. மெய் அறிவியலுக்கு எதிராக(Psedoscience) மட்டுமே இதன் இருப்பிடத்தை விளக்க முடியும்.

இவற்றை முழுதும் கற்பனை என விலக்கி விட முடியாது. ஆன்ம பயணம் செய்தவர்கள் அந்த அனுபவத்தை ஆழமான உறுதியுடன் நம்புகிறார்கள். மோஜா மூலம் ஆவிகளுடம் பேசுவது, சாமி வரும்போது மற்றொரு மன நிலையை அடைவது போன்றவற்றை அப்படியே மறுக்க இயலாதே, அது போல தான். மனித மனத்தின் அதீத கற்பனை ஆற்றலுக்கு தீனி போடும் ஆன்ம பயணத்தை தெளிவான கனவுகளின் வழியே ஓரளவிற்கு விளக்க முடியும்.

Lucid Dreams எனப்படும் தெளிவு கனவுகள் நாம் எல்லோருக்கும் இயல்பாகவே நிகழும். தூக்கம் கலைந்த பின்னரும் நாம் விழித்திருக்கிறோம் என நம் மூளைக்கு எட்டி இருப்பினும்
நாம் அறிந்தே அந்த கனவை தொடர்வோம், அதன் காட்சிகள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைந்து கொண்டே இருக்கும்.

விஞ்ஞானத்தின் படி இப்படியான தெளிவான கனவுகள் நம் கற்பனை திறனை வளர்க்கக் கூடியது. கனவுகளில் நாம் செய்ய, பார்க்க இயலாததை நிகழ்த்திக் கொள்ளலாம். லூசி என்று கன்னட மொழியில் எடுக்கப்பட்டு தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படம் இதற்கு நல்ல உதாரணம்.
ஏலியன்களும் பறக்கும் தட்டுகளும் என்றுமே நம் ஆர்வத்தை தூண்டுபவை. அவை மூளையில் பதிவதால் சிறிய பொறியும் நம் கண்களுக்கு பிழம்பாக தெரிகிறது.

தனக்கு வேண்டியதை மனம் காரணமின்றி ஏற்றுக்கொள்கிறது. மூளை அதற்கான சிந்தனை ஆற்றலை ஊக்குவிக்கிறது. பருவத்தில் எல்லாமே அழகாக தெரியும் என்பார்களே அது மாதிரி.
அதேபோல ஆன்ம பயணத்தை கனவுகளின் வழியே அடைந்து மெய்யென உணர்வதாக உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்று பல்வேறு இணையதளங்கள், யூடியுப் மற்றும் யோக வகுப்புகள் ஆன்ம பயணத்தை சொல்லித் தந்து லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் ஆன்மாவை தேடிய இந்த பயணம் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. கிரேக்க, சீன, இந்து புராணங்களில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.

ஆன்ம பயணத்திற்கு இணையாக , சொல்லப்போனால் அதனை விட அதிநுட்பமான வழியில் தார்மீக உடலில் இருந்து சூட்சம உடலுக்கு கூடு விட்டு கூடு பாயும் சித்தர்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

Add comment