சந்திராயன் கொண்டு நிலவை ஆராயும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நம் வாழும் புவியின் மர்மங்களை இன்னும் நம்மால் விளக்க முடியவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையே. எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விண்வெளியின் ஆச்சர்யங்களை பற்றி அறிந்த அளவிற்கு கூட ஆழ்கடல் ரகசியங்களை இன்னும் மனிதகுலம் அறியவில்லை.

காலப்போக்கில் ஆராய்ச்சியாளர்கள் எத்தனையோ மர்ம சிக்கல்களை அவிழ்த்த போதும் இன்னமும் மனிதம் வியந்து வரும் ஓர் மர்மம் என்றால் அது பெர்முடா முக்கோண சர்ச்சை தான். சிறுவயதில் இருந்து உலகத்தை பார்த்து நாம் ஆச்சர்ய பட்ட முக்கிய மர்மம் இதுவாகத்தான் இருக்கும்.

பெர்முடா பகுதியை கடந்து செல்லும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் தடயமேயின்றி மறைந்துவிடுகின்றன. இதுவரை  100 க்கும் மேற்பட்ட ஊர்திகள் அதில் பயணித்த  மனிதர்களும் தொலைந்த மர்மம் இன்றும் நிலைக்கிறது. வாகங்களின் உடைந்த பாகங்கள் கூட கிடைப்பதில்லை என்பதால் இயற்கை சீற்றங்கள் மட்டுமே இதற்கு காரணமா என்ற சந்தேகம் தீவிர மடையச்செய்கிறது.

அன்றிலிருந்து இப்போது வரை அந்த கப்பல்கள் எங்கே போகியிருக்கும் என பல்வேறு விஞ்ஞானிகள், மீடியாக்காரர்கள் ஏராள அனுமானங்களை வைத்த போதும் இதெல்லாம் உண்மையா வெறும் புனைவு கதையாக என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை. கப்பலும் விமானங்களும் தொலைந்தது என்னவோ உண்மைதான், ஆனால் அதில் மர்மம் ஏதுமில்லை.

பின் எங்கே போகின அவை என்ற கேள்விக்கு முன்னர் அங்கு நடந்த சம்பவங்களை சற்று அலசுவோம். சாத்தனின் முக்கோணம் என மக்களால் அழைப்படும் இந்த பகுதி வடக்கு அமெரிக்காவின் பனாமா, கரிபியன் போர்டோ ரிகோ மற்றும் பெர்முடா தீவுக்கு மத்தியில் இருக்கும் அட்லாண்டிக் கடற் பிரதேசம் ஆகும்.

பெர்முடா முக்கோணம்.jpg

குறிப்பாக பெர்முடா ட்ரையாங்கிள் பயணிக்கும் எல்லா விண்ணுர்திகள், கப்பல்கள் எல்லாமே மறைந்து போவதில்லை. இது உலகின் மிகவும் அதிகமான கடல் போக்குவரத்து பகுதி. இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. வர்த்தக, பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன.

ஆண்டு 1492 அக்டோபர் 11 இரவு. இதுவரை நாங்கள் பயணித்த கடல்களில் இருந்து இது மாறுபட்டது, அன்று வானத்தின் நிறம் விந்தையாக இருந்தது, திசைக் காட்டும் கருவிகள் இங்கே செயலிழந்து தவறான திசைக்காட்டி குழப்பமடைய செய்தது. எனவே நாங்கள் மேலும் முன்னேறாமல் வேறு திசையில் பயணித்தோம் என்ற கிறிஸ்டபர் கொலம்பஸ் குறிப்புகளே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் பெர்முடா சம்பவம்.

பெர்முடா முக்கோணம் மர்ம கப்பல்.jpg

அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற மர்ம கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கடற்படை கப்பல் அதில் இருந்த 309 பயணிகளுடன் எவ்வித தடையமும் இன்றி கடலோடு கரைந்து போனர். இதுவரை நடந்ததில் மிகப்பெரிய பெர்முடா விபத்து இதுவாகத்தான் இருக்கும்.

தொடர்ந்து பல விபத்துக்கள் நடைபெற்றாலும் வடக்கு அமெரிக்காவின் துறைமுகம் மிக முக்கிய வர்த்தக தடமாக இருப்பதால் நுற்றுக்கணக்கான போக்குவரத்துகளில் சில அசம்பாவிதங்கள் நடப்பது சகஜம் என்றே எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் 1945 ஆம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்து எல்லா மர்மங்களுக்கும் வித்திட்டது.

அமெரிக்காவின் 5 கடற்படை விமானங்கள் (TBM Avenger bombers) பயிற்சிக்காக அட்லாண்டிக் கடல் மீது பறந்து சென்றது. இவை Flight 19 என்று அழைக்கப்பட்டன. பறந்து கொண்டிருக்கும் போதே விமானி தாங்கள் திசைக்கருவி சரியாக வேலை செய்யவில்லை என தகவல் அனுப்பினார்.

Flight 19 கமாண்டர் சார்லஸ் டெய்லர் கடைசியாக அனுப்பிய செய்தி, ‘எங்களுக்கு கரை தெரியவில்லை, தவறான திசையில் செல்வது போலிருக்கிறது’. அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம் ரேடாரில் இருந்து தொலைந்து போனது. கமாண்டர் உட்பட பயிற்சி மாணவர்கள் சேர்த்து 14 பேர் இந்த சம்பவத்தில் காணாமல் போகினர்.

சுதாரித்த அமெரிக்க கடற்படை உடனே அவர்களை கண்டுபிடிப்பதற்காக திறமையாக பைலட் உடன் இரு மீட்பு விமானக்களை அனுப்பியது. எவ்வளவு தேடியும் அவர்கள் கிடைக்காததால் அவர்கள் திரும்பி வந்தனர். அதன் பின் தெரிந்தது, ஒரே ஒரு விமானம் மட்டுமே திரும்பி வந்திருந்தது.

பெர்முடா முக்கோணம் மர்ம விமானம்.jpg

தொலைந்து போன 5 விமானங்களுடன் அதனை தேட போன விமானமும் மாயமாய் மறைந்தது அமெரிக்க செய்திகளில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பலரும் வெவ்வேறான கருத்துக்களை அள்ளி தெளித்தனர். புனைவு கதைகள் உருவாக்கப்பட்டன. 1950 முதல் சில எழுத்தாளர்கள் பெர்முடா முக்கோணம் என்ற பெயரை வைத்து ஆய்வு கட்டுரைகளை எழுத தொடங்கினர்.  1964 Vincent Gaddis மரண பெர்முடா முக்கோணம் என்ற தலைப்பில் Flight 19 சம்பவத்துடன் பழைய விபத்துகளை இணைத்து பிரபல கட்டுரையை அர்கோசி இதழில் எழுதினார்.

சார்லஸ் பெர்லிட்ஸ்(Charles Berlitz) தி பெர்முடா டிரையாங்கிள் என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான புத்தகத்தை  1974 ஆம் ஆண்டு வெளியிட்டார். லட்ச பிரதிகளோடு 30 க்கும் மேல் மொழிப்பெயர்ப்புகளும் வெளிவந்தன. அதிலிருந்தே Atlantis, ஏலியன், கடல் அரக்கன் கதைகள் கொடிகட்டி பறக்க தொடங்கின.

மிகப்பெரிய கடல்வாழ் உயிரினங்கள், வேற்றுக்கிரக வாசிகள் போன்ற கருத்துகளை தாண்டி அட்லாண்டிஸ் கதை வித்தியாசமானது. தமிழர்களுக்கு குமரிக்கண்டம் போல கிரேக்கர்களின் அழிந்த நகரம் தான் அட்லாண்டிஸ். முன்னொரு காலத்தில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாகரீகம் கடற்கோளால் மூழ்கியதாகவும் அதில் இருந்து வரும் கதிர்கள் ஊர்திகளை பாதிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு சிலர் அட்லாண்டிஸ் மக்களை கடவுளாக பாவிக்கிறார்கள். Aquaman படத்தில் வருவதை போல அங்கே ஒரு ஆழ்கடல் அரசாங்கம் நடப்பதாகவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒருபக்கம் எனில் ஏலியன்கள் தளம் கடலுக்கடியில் இருப்பதாகவும் பலர் நம்புகின்றனர்.

aquaman-international-trailer.jpg

அடுத்த சில வருடங்களில் Satan’s Triangle(1975), Airport ’77, The Bermuda Triangle(1978), Bermuda Depths, ஸ்டீபன் ஸ்பில்பேர்க்யின் Encounters in the Deep(1979) என ஆங்கில திரைப்படங்கள் அமானுட கருத்துகளை மையப்படுத்தி வெளிவந்தன. புனைவுகளை தாண்டி அறிவியல் ரீதியிலும் மின்காந்தத விசை, வாரம் ஹோல், மீத்தேன் வாயு, கால பயணம் என பல விளக்கங்கள் விவாதத்திற்கு உட்பட்டன.

இதற்கான எதிர்ப்புகளும் வராமல் இல்லை. 1975 ஆம் ஆண்டே The Bermuda Triangle Mystery Solved என்ற புத்தகத்தை Larry Kusche எழுதி வெளியிட்டார். இதற்கு முன் வந்த அத்தனை கட்டுரைகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த புத்தகம் இருந்தது. பல ஆராய்ச்சிகளை கருத்தில் கொண்டு அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

அதன்படி ஒப்பீட்டளவில் பார்த்தால், மற்ற கடற்பயண பகுதியை விட இந்த பகுதியில் தொலைந்து போன கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை வரம்புகடந்ததாக இல்லை. தவிர, பெர்லிட்ஸ் மற்றும் பிற ஆசிரியர்கள் அதே சமயத்தில் நடந்த புயல்கள் குறித்து குறிப்பிடாமல் விட்டிருக்கின்றனர்.

ஒரு படகு காணாமல் போனதாக தகவல் வந்தால் பதிவாகும், ஆனால் அது கடைசியில் (தாமதமாக) துறைமுகத்திற்கு திரும்பியிருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போயிருக்கும். இதுபோல எண்ணிக்கையில் பல தவறுகள் நிகழுந்துள்ளன. அவர் செய்தித்தாள்களை ஒப்பிட்டு பார்த்தே அதில் இருக்கும் காலநிலைகளை யாரும் கவனிக்கவில்லை என்கிறார்.

அவர் குறிப்பிடுவது போல, உண்மையில் சில சம்பங்கள் நிகழவேயில்லை அல்லது வேறு எங்கோ நடந்த ஒன்றை பெர்முடா வோடு தொடர்புபடுத்தி இருக்கிறார்கள். பெரும்பான்மையானவை மனித பிழையின் காரணமாகவும் மற்றும் பரபரப்பு ஏற்படுத்தும் கருத்துக்கள் கொண்ட கட்டுரை ஆசிரியர்களாலும் உருவாக்கப்பட்டதாகும்.

அப்படியெனில் நிச்சயம் இத்தனை சம்பங்களுக்கு ஏதேனும் அறிவியல் காரணம் இருந்தாக வேண்டும் அல்லவா! உண்மையில் இங்கு நடந்த அமானுஷங்கள் எல்லாவற்றுக்கும் விந்தையான காரணங்கள் பதிலாக இருக்கின்றன. ஆனால் அதற்கான விளங்கங்களை நாம் இதுவரை கவனிக்கவில்லை.

அறிவியாலாளர்கள் பொதுவாக ஏற்றுக் கொண்ட ஒரு ஆய்வு முடிவு என்பது அதிக போக்குவரத்து கொண்ட, அதே நேரத்தில் மாறதக்க வானிலை நிலைகளை  கொண்ட அட்லாண்டிக் பெருங்கடலில் இது போன்ற விபத்துகள் நடப்பது இயல்பே. மிக வலிமையான வெப்பமண்டல சூறாவளி புயல் உண்டாகும் சமயங்களில் 15 மீட்டர்(45 அடி) அளவிற்கு அலைகள் எழும்பும், இதில் வலிமையான போர்க் கப்பல்கள் கூட தப்பிச் செல்ல முடியாது.

பெர்முடா முக்கோணம் கப்பல்.png

திசை காட்டிகள் தவறான பாதை காட்டுவது அதன் தவறல்ல.  அமெரிக்காவில் காந்த வடக்கும்(Magnetic north) புவியியல் ரீதியான (True north) வடக்கும் ஒன்றாக சந்திக்கும் இடம் அட்லான்டிக். பயிற்சிபெற்ற மாலுமிகள் இதற்கான வித்தியாசத்தை அறிந்து சரியான திசையில் இன்றவுளவும் பயணித்து வருகிறார்கள். ஆனால் கொலம்பஸ் காலத்திலோ பொது மக்களுக்கோ இதற்கான வித்தியாசம் தெரியாமல் வழி மாறி சென்று விடுகிறார்கள்.

Flight 19 சம்பவத்தில் காமாண்டோ குடி போதையோடு வந்திருந்தார் என்ற ஒரு கருத்து இருந்தது. அது மட்டுமில்லாமல் பெர்முடாவிலிருந்து புளோரிடா நோக்கி வராமல் அவர் மேற்கு திசை நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அதனாலே கரையை காணமுடியவில்லை என பதிவு செய்திருந்தார். எனவே அவர் தொலைந்த இடத்தை விடுத்து பெர்முடாவில் தேடியபடி இருந்தனர். மனித தவறுக்கு இது ஒரு உதாரணம். ஆனால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதோ அமானுஷ்ய கட்டுக்கதைகள்.

மற்றொமொரு விந்தையான கருந்து வாரம் ஹோல் இங்கே இருக்கிறது என்பது. Warmhole என்றால் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு தொலைவான இடத்திற்கு அல்லது வேறு பரிணாமத்திற்கு மிக விரைவான நேரத்தில் செல்வது. ஒருவகையான கால இயந்திரம் போல. ஆனால் வார்ம் ஹோல் Blackhole அருகில் தான் உண்டாக சாத்தியம் உள்ளது. அதற்கு கிட்டத்தட்ட 100 சூரியன்கள் எரியும் சக்தி தேவை. எனவே பூமியில் அதற்கு வாய்ப்புகள் குறைவே.

மனித தவறுகளை குறிப்பிட்டாலும் சில கப்பல்கள் அடையாமல் கிடைக்கமால் போனதற்கு அறிஞர்கள் விளக்கம் சொல்ல வேண்டிருந்தது. புளோரிடா நீரோட்டம், வளைகுடா பகுதிகளில் உண்டாகும் கடல் ஆறு போன்ற நீரோட்டம் சில சமயம் உடைந்த பாகங்களை அடித்து சென்று வேறு இடத்தில் இ=கிடத்தி விடுகிறது. இதனாலே சில கப்பல் மீதங்கள் பல நாட்டிகல்தொலைவில் கிடைத்துள்ளன.

2000 ஆண்டுகளில் கிடைத்தை புதிய ஆய்வு முடிவு பெர்முடா மர்மத்தை மீண்டும் தலையங்க செய்தியாக மாற்றியது. அதுதான் மீத்தேன் ஹைட்ரேட். ஆய்வின்படி மீத்தேன் வெளியேறும் பொது  நீரின் அடர்த்தியை குறைப்பதினால் உருவாகும் குமிழிகள் சேறு போன்ற நிலையை உருவாக்கி கப்பல் மிதக்கும் தன்மையை குறைக்கின்றன. ஒரு பெரிய கப்பலையும் நாழிகைகளில் எச்சரிக்கையின்றி மூழ்கச் செய்யும் என்பதை நிரூபித்திருக்கின்றன.

அமெரிக்க நிலவியல் துறை ஆய்வு வெளியீடுகள், கடலுக்கடியான மீத்தேன் ஹைட்ரேட்டுகள் உலகெங்கிலும் பெரும் கூட்டமைப்பாய் இருப்பதை கூறியது. தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அளவிற்கு பெர்முடா முக்கோணப் பகுதியில் கடந்த பல வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுகளின் பெரும் வெடிப்புகள் எதுவும் நிகழவில்லை என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடலுக்கடியில் எரிவாயு குமிழிகள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் நாம் கருத்தில் கொள்ளத்தக்கது. பெரும் சூறாவளியின் வலிமையான சுழல்கள் அளவிற்கு இவை மிக மோசமானதாகவும் இல்லை.

முக்கோணம் மர்மம் விளக்கம்

2018, சமீபத்திய ஆய்வு முடிவின் படி அருங்கோண வடிவிலான அரிய மேகங்ககள் பெர்முடா மேற்பகுதியை சூழ்ந்திருப்பதாகவும் அதுவே இதுபோன்ற மர்மங்களுக்கு காரணம் என தெரிவித்தனர். இந்த மேகங்ககள் காற்று குண்டுகளை(Air Bombs) 170 வேகத்தில் பூமியை நோக்கி செலுத்த வல்லது.

Science Channel வெளியிட்ட இந்த அறிக்கை சில மர்மங்களுக்கு பதில் சொல்வதாக அமைகிறது. எல்லா விஞ்ஞானிகளும் இதற்கு ஆதரவு தரவில்லை எனினும் மறுப்புகளும் பெரிதாக இல்லை. எனினும் இது பெர்முடாவிற்கு மட்டுமல்ல, உலகின் ஆபத்தான மற்ற பகுதிகளிலும் சாத்தியம்.

கடைசியாக பெர்முடாவில் நடந்த கோரமான விபத்து 2015 ஆம் ஆண்டு சரக்கு கப்பலான El Faro அதில் பயணித்த 33 நபர்களுடன் கடும் சூறாவளி விபத்துக்கு உள்ளாகி ஆழ்கடலில் காணாமல் போனது.  பல வார தேடுதலுக்கு பிறகு 15000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் கப்பல் முழுவதுமாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இறந்த மனிதர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.
பெர்முடா முக்கோணம் மர்ம கப்பல் விளக்கம்.jpg

இது போன்ற ஏகப்பட்ட அனுமானங்கள் அதனுடன் சார்ந்த சர்ச்சைகள் பெர்முடா முக்கோணத்தை மையமாக வைத்து தொடர்ந்து எழுப்பப் பட்டு வருகிறது. மக்களின் ஆர்வத்தை தூண்டி எதிர்பாராத நிகழ்வுகளை மர்மக்கதைகளாக மாற்றுகின்றனர். நாமும் கதைகளை கேட்டு ஆச்சர்யபடுவதோடு நிறுத்திக் கொண்டு தீர விசாரிக்காமல் கண்டுமுடித்தனமாக நம்புகிறோம்.

உலகில் மர்மங்களே இல்லை என்பது என் விளக்கம்மல்ல. மனித அறிவியலால் ஆராய முடியாத அதிசயங்கள் இன்னுமும் இந்த பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பல அறிவாளர்கள் கூறியது போல பெர்முடா என்பது ஒரு மர்மமே இல்லை. எனவேதான் எந்தவொரு அறிவியல் அமைப்பும் நேரடியாக அங்கு ஆராய முனையவில்லை. அவர்கள் கருத்துப்படி விசாரிக்க அங்கு மர்மம் ஏதுமே நிகழவில்லை என்பதே.

மற்ற போக்குவரத்து நெரிசல் கொண்ட கடற்பகுதிகளை விட பெர்முடா பகுதியில் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாச குறைவு தான். பெர்முடாவில் செல்லும் எல்லா கப்பல் விமானம் தொலைகிறது என்ற வார்த்தையே தவறு. ஆண்டுக்கு 50000 மேற்பட்ட ஊர்திகள் அவ்வழியே பயணிக்கின்றன. வரலாற்று கணக்கில் இதுவரை 100 க்கணக்கான விபத்துகளே நிகழ்ந்துள்ளன. தற்போது இந்த கணத்திலும் பெர்முடா மீது  50 விமானங்கள் பயணித்து கொண்டிருக்கும். அதில் பயணிக்கும் நபர் நம் கற்பனைகளை நினைத்து சிரித்துக் கொண்டே பெருங்கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.

Leave a Comment