Image default
Culture Tradition

புத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்

புத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏற்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே.

குப்பிகள் போல தலை முழுதும் நிரம்பிருக்கும் இந்த உருவமைப்பு புத்தரின் தோற்றத்தை பற்றி பல்வேறு விவாதங்களை விதைத்து இருக்கிறது. பொதுவாக துறவிகள் மொட்டை தலையுடன் தோன்ற புத்தர் தலையில் இருக்கும் இந்த குமிழ்கள் போன்ற முடி கேள்விக்கு உள்ளாவதை தவிர்க்க முடிவதில்லை.

முடி கர்வத்தை குறிப்பதால் துறவிகள் அதனை நீக்கி விடுவர். அறியப்பட்ட வரலாற்று பதிவுகளை பொறுத்தவரையில் இளவரசனாக இருந்த சித்தார்த்தனர் தனது பதவி, தேசம், உறவுகளை துறந்து துறவு நிலையை மேற்கொள்ளும் போது அவருக்கு நீண்ட சிகை இருந்ததாகவே நம்பப்படுகிறது.

புத்தரின் சர்வ போதனைகளையும் கொண்ட பௌத்தர்களின் புனித நூல் திரிபிடகம் (Tripiṭaka). புத்தரின் போதனைகளை நேரடியாக பாலி மொழியில் கொண்டுள்ள இந்த புத்தகம் கௌதம புத்தரின் தலைமுடி கருமையாக இருந்தது என்ற ஒற்றை தகவலை மட்டுமே தருகிறது. துறவின் பங்காக தனது முடியை ஒரு முறை அவர் அகற்றியதாக தெரிகிறது.

ancient-buddha-statue-and-stupa-at-borobudur-temple-in-yogyakarta-java-indonesia-.jpg

புத்தர் சிலைகளை வணங்கும் பழக்கத்தை ஆதரிக்கவில்லை. புத்தர் வாழ்ந்தது கி.மு 500. அவர் ஞானமடைந்து சில நூற்றாண்டுகளுக்கு பின்னரே அவருக்கான சிலைகள் உருவமைப்பானது. எனவே இந்த குறிப்புகள் உண்மையென முழுதுமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படி என்றால் அவரது சுருள் போன்ற தலைமுடி எங்கிருந்து வந்தது, எதை குறிக்கிறது?

சுருள் முடி கொண்ட புத்தர் சிலைகளே உலகெங்கும் நிறைந்து உள்ளன. வளைந்த அழகிய நீள கூந்தல் உள்ள சிற்பங்கள் கூட உள்ளன. சிலர் இந்த வழிமுறை கிரேக்க கலாச்சாரத்திலிருந்து வந்ததாக சொல்கிறார்கள், இன்னும் மேலாக ஆப்பிரிக்க வழிவந்தவரே புத்தர் எனவும் கருத்துக்கள் நிலவுகிறது. மேலும் விவரமாக பார்ப்போமானால்,

நத்தை கூடுகள்

புத்தர் ஒருமுறை ஆழமாக சிந்தித்தவாறே நடந்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் ஒரு மரத்தை கண்டு அதன் நிழலில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். பல மணி நேரம் நீடித்த தியானத்தின் இடையே சூரியன் கிழக்கிலிருந்து மெல்ல உயர்ந்து உச்சிக்கு வர துவங்கியது.

அதே நேரம் அந்த வழியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு நத்தை இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. அதனால் மனிதன் ஒருவன் ஞானியாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

lavastone-buddha-head-1000x1000

கதிரவன் உச்சி வானை நோக்கி உயர்ந்து விட்டது, மர நிழலோ திசை மாறி சென்று விட்டது. இதை கண்ட நத்தை உச்சந் தலையில் வெயில் பட்டு அந்த உஷ்ணத்தால் புத்தரின் தீவிர எண்ணங்கள் திசை மாறக்கூடும் என எண்ணி எவ்வாறோ சமாளித்து அவர் தலையில் ஏறி அமர்ந்துக் கொண்டது. நத்தையின் மிருதுவான தசைகளின் ஈரப்பதம் புத்தரின் உடலை குளுமைப்படுத்த துவங்கியது.

இந்தக் கண்ட மற்ற நத்தைகள் தாமும் தலையில் ஏறி அமர்ந்து ஒரு தலைக்கவசம் போல தன்னை இணைத்துக்கொண்டன. நத்தைகள் இயற்கையில் மிக மெல்லிய சதையை கொண்டவை. ஊர்வன வகையை சேர்ந்ததால் இவற்றுக்கு ஈரப்பதம் அத்தியாவசியமானது. இல்லையென்றால் அதீத வெப்பத்தால் அவை உயிரிழக்க நேரிடும்.

புத்தரின் வெகு நேர தியானத்துக்கு பிறகு அவர் கண் விழித்து பார்த்தபோது தனது தலையில் நத்தை மேனிகளால் ஆனா கவசம் தனது சிரத்தை சூழ்ந்திருப்பதை கவனித்தார். மொத்தம் 108. அத்தனையும் இறந்து போய் ஒரு காய்ந்த தேன்கூடு போல காட்சியளித்தன. சில இடங்களில் 360 காக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நத்தைகளின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாகவே புத்தரின் சிலைகள் மற்றும் ஓவியங்ககள் விந்தையான தலைப்பாகை போன்ற வடிவத்தில் உருவாக்கப்படுகின்றன என்ற ஒரு கதை உள்ளது. சுவாரசியமான இந்த  கதை இன்னொரு கதையோடு பிணைகிறது.

8111391501_8e215fb8fb

இந்த வரலாற்று கதைப்படி ஒரு வேடன் காட்டில் மயிரற்ற துறவி ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்வதை காண்கிறார். அதனை கெட்ட சகுனமாக கருதி அன்றைய தினம் வேட்டையாடுவதை நிறுத்திக் கொள்கிறார். அதே மனிதரை அங்கியோடு காணும் போது பிராமணர் என எண்ணுகிறார். இருப்பினும் தலைக்கு பின்னால் குடுமி இல்லாததை கண்டு குழம்பி போவதாக கதை முடிகிறது.

கிரேக்க சாயல்

roman god.jpg

புத்தருக்கான சிலைகள் முதன்முறையாக கனிஷ்கர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதாவது கி.பி 1-2 நூற்றாண்டு. எனவே அன்றைய காந்தர்வ( இந்திய -கிரேக்க) கலையின் தாக்கமே சுருள் வடிவ முடி கொண்ட சிலை உருவாக அடித்தளமாக அமைத்திருக்கலாம். பிரபல கிரேக்க ரோமானிய கடவுள்கள், மன்னர்கள் சுருள் முடியுடன் காணப்படுவதை வரலாற்று பக்கங்களில் காணலாம்.

ஆனாலும் இந்தோ-கிரேக்க ராஜ்ஜியத்தில்(Indo-Greek Kingdom) கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் அழகிய நீள அலை அலையான முடியோடே இருக்கின்றன. அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்புக்கு பின்னான காலங்களில் இந்திய கிரேக்க நாடு (கி மு 180 – கி பி 10)  தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான் பகுதியில் அமைந்தது.

இந்த அலையான சிகை அலங்காரம் எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை எதிர் கொண்டு பின்னர் இறுக்கமான நெருங்கிய சுருளாக மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.

GreekBuddha.jpg

கருப்பு புத்தர்

கருப்பு புத்தர் என்னும் பிரபலமான கோட்பாடு புத்தர் ஆப்பிரிக்க தேசத்திலிருந்து வந்தவர் எனும் கருத்தை ஆதரிக்கிறது. 18-19 நூற்றாண்டை சேர்ந்த சில ஆய்வாளர்கள் கூட இதனை வழிமொழிந்தனர்.

உலகின் பழமையான குடிகளின் பூர்வீகம் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. நீக்ரோக்கள் எனப்படும் கறுப்பினத்தவரே பல கண்டங்களுக்கு பயணம் செய்து பண்டைய நாகரீகங்கள் உருவான காரணமாக இருந்தனர்.

எனவே புத்தர் ஒரு நீக்ரோ மனிதர் எனவும் அவர் ஆப்ரிக்காவில் இருந்தே பயணித்து உலகிற்கு ஞானத்தை போதித்தார் என எடுத்துரைக்கிறார். மிக முக்கிய காரணம் அவரது தலைமுடி ஆப்பிரிக்கர்கள் போல சுருளாக இருப்பது தான்.

ஆப்பிரிக்க கறுப்பின மனிதர்களுக்கு இயற்கையாகவே முடி சுருள் சுருளாகத்தான் இருக்கும். பல இணைய பக்கங்களின் விவாத பொருளாக விரவிவரும் இந்த கோட்பாடு சில நாடுகளில் கிடைத்த புத்த சிலைகளின் உருவத்தால் கருத்தில் கொள்ளப்படுகிறது. தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் கூட சுருள் முடி, பெரிய உதடுகள், அகண்ட மூக்கு, நீளமான காதுகள் கொண்ட புத்த மிட்சங்கள் கண்டெடுக்கப்பட்ட ப்பட்டுள்ளன.

main-qimg-4b3d11c3e6d154f8b7f3d00b0b35f228.jpg

இந்த அடையாளங்கள் ஆப்பிரிக்க மக்களோடு பொருந்துவதால் முந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து சிந்து சமவெளி நாகரீகம் அல்லது திராவிட நாகரீகத்தோடு தொடர்பு கொண்டிருந்த பண்டைய எகிப்திய பண்டிதர்கள் பயணப்பட்டு இங்கு ஆன்மிகத்தை போதித்திருக்க வேண்டும். காலத்தால் அழிக்கப்பட்டு சிலை உரு பரிமாற்றம் அடைந்தது என்பது அவர்கள் கூற்று.

கூடுதலாக புத்தரது உருவம் திபெத், நேபாள அச்சில் இல்லாமல் இருக்கிறது. மலேசியாவின் செமக் பழங்குடியினர் போன்ற பல்வேறு கறுப்பின பழங்குடியினர் ஆசியாவில் உள்ளனர். இந்தியாவின் அந்தமான் தீவுகளில் கூட ஜராவா, சென்டில் மக்களின் தோற்றம் ஆப்பிரிக்கர்களை ஒத்து உள்ளது.

வடக்கு சென்டில் தீவுக்குள் நுழைய நினைக்கும் மனிதர்களை அந்த மக்கள் கொன்று விடுவது இன்னொரு கதை. விவரம் அறிய இங்கே கிளிக்கவும்.

ஜாராவா போன்ற மக்களின் தோற்றத்தை ஒத்து இருந்தாலும் இந்த வடிவ சிற்பங்கள் சொற்பமாக கிடைக்கப் பெற்றுள்ளன. உலகின் பெரும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் முழுதுமாக கருப்பினரை ஒத்ததாக இல்லை. பழமையான புத்தர் சிலை திபெத்தில் தான் அகழ்வராயப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கருப்பு புத்தர் பற்றிய கொள்கைகள் வரலாற்றாளர் கணிப்பாக மட்டுமே இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வரலாற்று எட்சங்கள் ஆதாரமாக துணையில்லை.

china-buddhas-found-head-earth_50929_600x450

மகான்

முன்னர் சொன்னது போல பௌத்தரின் புனித நூல் கருத்துப்படி புத்தர் மற்ற துறவிகள் போல மொட்டை தலையுடன் இருந்திருக்கலாம். புத்த மதத்தில் மாகா புருஷ லட்சணம் (mahā purisa lakkhaṇa) என்னும் 32 சாத்மிக கொள்கைகள் பிறகாலத்தில் பௌத்தர்களால் இணைத்துக் கொள்ளப்பட்டது. அது தகுதிக்குரிய ஆணுக்குக்கான சகல குணங்களை பட்டியலிடுகிறது.

அதன்படி சிறந்த ஆண் மகனின் தலைமுடி கருமை நிறத்தில் சுருள் போல இருக்க வேண்டும் என்றும் வலது பக்கமாக வாக்கு எடுத்து படிய வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. சிற்பிகள் இதனை கருத்தில் கொண்டே புத்தரின் தலையை வடிவமைத்திருக்க பெரும் வாய்ப்பிருக்கிறது.

எனினும் சித்தார்த்தன கௌதம புத்தர் இவ்வாறு தான் இருந்தார் என்பதை பிறகாலத்தில் உருவான புத்தக குறிப்புகளையும் அவரை பின்தொடரும் சீடர்கள் சொல்வழியே மட்டுமே அரிய முடிகிறது. உண்மையில் இதுதான் அவரது தோற்றம் என ஒரு முடிவுக்கு வந்துவிட இயலாது.

மனமும் உடலும் தூய்மையடைந்து தன்னுள் இருக்கும் ஆத்மா வழி ஞானத்தை அடைவதே பௌத்தம். அதற்கு சிற்பங்கள் அவசியமற்றது. ஆனால் சராசரி மனிதன் வழிபட தனது சிந்தனைகளை கட்டுபடுத்தி ஆழ்மனதை அடைய நிச்சயம் ஒரு வழித்துணை தேவை. அதன் அடையாளமாக சிலைகள் திகழ்வதாக நான் நம்புகிறேன். மற்ற இந்து கடவுகளை போல புத்த மதத்தின் போதனைகளை கொண்டு சேர்க்க மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அடையாளமாகவே புத்தர் எனது கண்களுக்கு திகழ்கிறார்.

Related posts

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்

Seyon

யாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்

Seyon

சீனாவிலும் வணங்கப்படும் முருகன் – வரலாற்று ஆதாரங்களுடன்

Paradox

1 comment

R.Varadarajan March 7, 2021 at 8:12 pm

Super

Reply

Leave a Comment