Image default
History Politics

காவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை

“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை
தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
– சிலப்பதிகாரம்

காவிரி பாறைகளில் தவழ்ந்து மணல் வெளியை கடந்து வேர்களுக்கு விருந்து வைக்கும் வெறும் நன்னீர் நதி மட்டுமல்ல. அது காலம் கடந்த ஒரு நாகரீகத்தின் வழித்தடம், இன்று சிதிலமைடந்த மாநிலங்களின் மக்கள் ஒரு மொழி பேசி ஒன்றாய் கலந்திருக்க உயிர் ஆதாரமாய் விளங்கிய அமிர்த பேரொலி.

வெறுப்பை உமிழ எரிந்துக் கொண்டிருக்கும் இரு மாநில கலவரத்திற்கு அச்சாரமாய் இந்நதி ஆனது காலத்தின் ஓலமே. அரசியல் சதுரங்கத்தில் அவல சிப்பாய்களாய் பரிதவிப்பது டெல்டா பாசன மக்களின் சாபம்.

metturdam2

காவிரியை `அன்னையின் அருளே வா வா வா, ஆடிப்பெருக்கே வா வா வா,‘ என்று அரவணைத்து ஆடிப் பெருக்கு என்று ஆற்றில் வரும் புது நீரை வரவேற்று மகிழ்வது தமிழ்நாட்டின் கலாச்சார நிகழ்வாகும்.
புகழ் பாடப்பட்டு பாய்ந்த காவிரி ஓய்ந்த காவிரியாகி மாய்ந்திருப்பது நிதர்சனம்.

ஆனால் இது எதோ சமீப கால அரசியல் நிகழ்வல்ல, பலகாலமாய் தொன்றுதொட்டு வரும் வரலாற்று ஈரம். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக கருதப்படும் கல்லணை முதன்முதலாக கி.பி.2 ம் நூற்றாண்டிலேயே கரிகால சோழனால் காவிரி மீது கட்டப்பட்டது.

shivanasamudra-falls_india_17472

கி.பி.11 ஆம் நூற்றாண்டில் அன்றைய மைசூர் அரசு அப்போதே அங்கு அணை கட்டி இன்னல் கொடுத்தது. அப்போது தமிழகத்தில் கோலோச்சிய சோழ வம்சத்தின் இரண்டாம் ராஜராஜன் தன் படைகளொடு சென்று அணையை உடைத்தெறிந்தான்.கி.பி.17 ஆம் நூற்றாண்டிலும் மீண்டும் இதுபோல சம்பவம் நிகழ தஞ்சை மாராட்டிய மன்னரும் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவும் படை திரட்டி சென்றனர்.

ஆனால் அவர்கள் சென்று உடைக்கும் முன்னரே இயற்கையின் வரமோ சதியோ, பெரும் மழையால் அணை தானாக உடைந்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது. அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர்.

capture

இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.

1892 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழுருந்த மெட்ராஸ் மாகாணத்திற்கும் சுதேச மைசூருக்கும் இடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் 1910 ஆம் ஆண்டு இரு மாநிலங்களும் அணைகட்டும் முயற்சியில் இறங்கின.

காவிரி பிரச்சினையின் அஸ்திவாரம் 1924 ஆம் ஆண்டில் தான் இடப்பட்டது. சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது. சராசரியாக ஆண்டிற்கு காவிரியில் 671 டி.எம்.சி அளவில் தண்ணீர் உற்பத்தியாகிறது. மேலும் 140 டி.எம்.சி தண்ணீர் கேரளாவில் உருவாகும் கபினி நதி மூலம் கிடைக்கிறது.

blogger-image-123272033

இதனால் கர்நாடகா, கேரளா, தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய நான்கும் காவிரி சமவெளி மாநிலப்பகுதிகளாக அறியப்படுகிறது. தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. அதாவது 75% காவிரி நீர் தமிழகத்திற்கு வந்ததாக 1924 உடன்படிக்கை கூறுகிறது. 23% தான் கர்நாடகாவிற்கு மீதம் கேரளாவிற்கு.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நதி காவிரி மட்டும்தான், உலக நாகரீங்களோடு ஒப்பிட தகுத்த அளவு பல்நூற்றாண்டுக்கு முன்பே காவேரி சமவெளிகளில் பழப்பெறும் விவசாயம் செய்தது நம் தமிழ்குடி. 

கர்நாடகாவில் காவிரியை விட பெரிய நதியான கிருஷ்ணா நதி பாய்கிறது. அது காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்டது. ஏறத்தாழ 734 டி.எம்.சி தண்ணீர் வருடந்தோறும் அரபிக்கடலில் வெறுமனே கலக்கிறது.

தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தான் நாம் கர்நாடகாவை நம்பிருக்க வேண்டியுள்ளது.

1_6

1974 ஆம் ஆண்டு காவிரி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதெனவும் மைசூர் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுபடுத்த இயலாது எனவும் கூறி கிளை நதிகளிளெல்லாம்(ஹேமாவதி, ஹாரங்கி, கபினி)அனுமதியின்றி அணை கட்டி இயற்கை வழித்தடத்திற்கு தடையிட்டது கர்நாடக அரசு. பல மாநில ஆற்றை தனியுடமையாக்கி உயிர் தேவைக்கு சுருக்கிடப்பட்டது காவேரியில்.

கர்நாடகாவின் இச்செயல் தமிழகத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியது. திராவிட இயக்கங்கள் விவசாயிகளின் கோரிக்கையை முன்னிருத்தி மத்திய அரசை நாட முயன்றது.

  • 1971 – உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பிரதமரால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.
  • 1983 – தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது.
  • 1986 – தமிழக அரசு மத்திய அரசிடம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது.
  • 1990 – திரு.வி.பி. சிங்கின் மத்திய அரசு உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.

இதுபற்றி கர்நாடக அரசுடன் விவாதித்திருக்கலாமே என்று நீங்கள் எண்ணிருக்கலாம்.
1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் சுமூகமாக எட்டப்படவில்லை.

1473230797

அதிலும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் அல்லாது வி.பி.சிங் தலைமையிலான தேசிய முண்ணனி மற்றும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களின் தொடர் முயற்சியாலும் நடுவர் மன்றம் உருவானது.

  • 1991(25/6/91) – நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும்,
  • கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது.
  • 1991(25.11.91) – இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்தது.
  • 1992(3.4.92) – நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பில் போதிய அளவு நீர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
  • 1998(12/8/1998) – பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது.

இது முழுக்க முழுக்க கர்நாடகாவிற்கு சாதகமாக அமைந்தது, இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவு எனக்கூறி அணைகளையும் ஏரிகளையும் பெருக்கிக்கொண்டது.

மக்களின் நாயகர்கள் தமிழகத்தின் சிறந்த கட்சி போட்டிகளில் தம்மை முன்னிருத்திக் கொண்டு காவிரியை மறக்க துவங்கின. பாஜகவும் காங்கிரஸும் ஆளும் காட்சியாதலால் எதிர்க்க அவற்றிற்கு எண்ணமில்லை.

2007 – கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கி உத்தரவிட்டது.

2013 – சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவைத் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டதை போலவே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு, 416 டி.எம்.சி தண்ணீர் தருமென  கூறப்பட்டுள்ளது. இது காவிரி பிரச்சினையில் தமிழத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

மேலும் காவிரி நதி நீர் நிர்வாக ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு என இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இறுதித் தீர்ப்பு கிடைத்த பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்ட பாடில்லை. இதுகுறித்து பலமுறை உச்ச நீதிமன்றதுக்கு முறையிட்டது தமிழக அரசு. பின்னர் நீதிமன்றமும் மத்திய அரசுக்கு தீர்ப்பை நிறைவேற்ற ஆணையிட்டது.

தமிழகத்தின் பக்கம் தான் நியாயம் உள்ளது. இதுபோன்ற சூழல்கள் முன்னாள் ஏற்பட்ட போது கூட தமிழ் மக்கள் அங்கு தாக்கப்பட்டது உண்மையே. 50000 கன அடி தேவைப்பட்ட போதும் அவர்கள் நிலைக் கண்டு 20000 என்று குறைத்தோம் , அதனையும் இழத்தலில் தர்மம் இல்லை.

காலதாமதம் ஆகி ஆகி மத்திய அரசின் கிடுக்கால் கர்நாடக அரசு குறிப்பிட்ட அளவு நீரை திறந்து விட முடிவு எட்டப்பட்டது. அதிலிருந்து தான் எப்படி தண்ணீர் விடலாம் என வரிந்து கட்டிக் கொண்டு வன்முறையில் இறங்கினர்.

synidicate-protesters-september-hindustan-bangalore-september-activists_453710ee-7955-11e6-85ec-37294133f8ac

2016-17 நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் பல்வேறு விவாதங்கள் அரங்கேறின. அதிமுக அரசு பல்வேறு வகையில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தனது கண்டத்தை தெரிவித்து பார்த்தது, கரிசனம் இல்லை. ஆய்வாளர்கள் பின்னர் தமிழக டெல்டா பகுதியை ஆராய்ந்து தமிழகத்திற்கு மழைக்கு போக 177 டி எம் சி தண்ணீர் விடலாம் என கருத்து சொன்னார்கள்.

இதனை தமிழகத்தின் நிலத்தடி நீரை கருத்தில் கொண்டு முறையிட்டதாக சொல்லும் அவர்கள் கர்நாடகாவின் நிலத்தடி நீர் அளவை பற்றி விசாரித்து கூட கேட்டுப் பார்க்கவில்லை. இது தமிழக விவசாய்களுக்கு செய்யும் கண்கூடான துரோகம்.

2018 – பிப்ரவரி 16 இல் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்தது. 2007 சொன்னதுதான் என்றாலும் பெங்களுரின் தண்ணீர் தேவை தமிழகத்தின் நிலத்தடி நீர்வளம் போன்ற பகட்டான காரணிகளை முன்னிறுத்தி 15 tmc நீரை கர்நாடகத்திற்கு தந்தது. அதன்படி தமிழகத்திற்கு 177 tmc தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு.

இது குறைவு என்றாலும் தமிழக விவசாயிகள் அதையாவது செய்யுங்கள் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். மேலும் உச்ச நீதிமன்றம் 6 வார அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஏப்ரல் மாதமும் வந்துவிட்டது. கால அவகாசமும் முடிந்துவிட்டது. தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசின் மீதும் காவிரி பிரச்சினை பற்றிய தமிழக அரசு மேல் முறையீடு செய்த வழக்கும் வரும் ஏப்ரல் 9 நீதிமன்றத்திற்கு வருகிறது. இடையில் பழைய தீர்ப்பே என்னவென்று புரியாதது போல மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டை போலவே கர்நாடகாவின் மாண்டியா, ஹாஸன் பகுதி மக்களுக்கும் காவிரி உயிர்நாடியாக விளங்குகிறது. நம்மை போலவே காவிரி பண்பாட்டின் தொன்மை கொண்டவர்கள் அவர்கள்.

மனிதத்தை மறந்து வெறும் காட்சி பேதம் கொண்டு, வன்மம் தழுவ  வேற்றுமை காண காவிரியை நாம் காரணமாக கூடாது. மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் ஒரு சமுதாய பிரச்சைனையை அரசியலாக்குவது சற்றும் ஏற்றுக்கொள்ளலாகாது.

கர்நாடகத்தின் வன்முறை அவர்களுக்கே அபத்தமானது, தமிழர்களை தாக்குவது, பேருந்தை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போதும் பொறுமை காத்த நம் தலைமுறையை பற்றி வருங்காலம் நிச்சயம் விவாதிக்கும்.

துரதிஷ்டவாதமான இந்த போராட்டத்தால் தன் இனத்திற்கு ஒரு அவலத்தை கர்நாடகம் உண்டாக்கிருக்கிறது. மக்களின், விவசாயத்தின் முதுகெலும்போடு நேரிடையாக உரையாட்டும் காவிரியை பற்றி அவர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

இதை பற்றி காவிரி டெல்டா மக்களின் மனசாட்சிகளோடு விவாதிக்க வேண்டும், அரசியல் சூழ்ச்சியாளர்களோடும், சந்தர்ப்பவாதிகளோடும் அல்ல. தாமதமானலும் அதுவே எதிர்கால தலைமுறையினர்களுக்கு நாம் எழுதப்போகும் கடிதமாக அமையும்.

இலங்கை அகதிகள் போல காவிரி அகதிகள் உருவாகும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. விவசாய நிலங்கள் அழிந்து வரும் சூழலில் பாசன பகுதிகளும் அழிவுற்றால் காணடைய போவது விவசாயிகள் மட்டுமல்ல…

Related posts

கல்பனா சாவ்லா விண்வெளி தேவதை

Paradox

தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்

Seyon

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு

Seyon

Leave a Comment