செங்கலூர் ரெங்கநாதன் – ஆசியாவின் உயரமான யானை

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பல்லாண்டு கால நினைவுகளை உள்ளடக்கியது. கடந்த 2,600 ஆண்டுக்கால மனித வரலாற்றில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஒரு காலத்தில் அவை கிட்டத்தட்டப் போர்க்கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டன.

அரசர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு காவியங்களிலும் இலக்கியங்களிலும் பேசப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில்தான் யானைகள் அதிகளவில் போருக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதற்கும் முன்பிருந்தே அவை மனிதர்களோடு சுமுக உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

யானைகள் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்டு போர்களிலும் ஊர்வலங்களிலும் பயன்படுத்தப்பட்டன. காடுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும் வாழும் பழங்குடிகள்தாம் யானைகளைப் பிடிப்பார்கள். அது அரசர்களுக்கும் அவர்களது ராணுவத்துக்கும் பழக்கப்படுத்தப்பட்டன.

பல ஐரோப்பிய ராஜ்ஜியங்கள் அவர்கள் கண்டிராத ஆசியாவின் யானை படையை எண்ணியே பயந்து ஒதுங்கினர். ஆசியாவில் யானைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. ஆசியாவிலேயே மிக உயரமான யானை என்று பெயர் எடுத்த யானை நமது தமிழ் நாட்டில் உள்ள திருச்சியில் இருந்து வந்தது என்றால் நம்ப முடிகிறதா?

“செங்கலூர் ரெங்கநாதன்” என்ற பெயர் கேரள மக்களின் மத்தியில் இன்றளவும் பிரபலம். 1907 முதல் கேரளத்தில் நடக்கும் திருவிழாக்களில் கம்பீரமாக உயர்ந்து நின்ற யானை தான் செங்கலூர் ரெங்கநாதன்.

11’4 (345 cm) அடி உயரம் கொண்ட ரெங்கநாதன் 1906 முதல் 1914 வரை, கேரள மாநிலத்தின் ஆராட்டுபுழா பூரத்தில் தவறாமல் இடம் பெறும். வரிசையில் நிற்கும் மற்ற யானைகளை விட நடுநாயகனாக உயரமாக காட்சி தரும்.Chengalloor Ranganathan sri rangam

முதலில் ரெங்கநாதன் இருந்த இடம் நம் திருச்சி யில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தான். அதனால் தான் ரெங்கநாதன் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி நதியில் இருந்து நீர் எடுத்து வருவது தான் அதன் வேலை, அதற்காக இரு புறமும் பாத்திரங்கள் கட்டப்பட்டு இருக்கும். அபிஷேகம் உட்பட அனைத்து நீர் தேவைக்கும் ரெங்கநாதன் தான் காவிரியில் இருந்து எடுத்து வரும்.

நாட்கள் செல்ல யானையின் வளர்ச்சி சாதாரண அளவுக்கு மேல் சென்றது, இதனால் கோவில் நுழைவுவாயிலில் நுழைந்து வருவது கடினம் ஆனது, அதிகமான காயங்களும் ஏற்பட்டது. அந்த காலத்தில் யானையை திருவிழாக்களில் பயன்படுத்த தமிழகத்தில் தடை இருந்த நேரம், அதனால் ரெங்கநாதனை பராமரிப்பது மிகவும் கடினம் ஆகியது. இறுதியில் யானையை விற்க முடிவு செய்து “ஹிந்து நாளிதழில்” விளம்பரம் செய்தார்கள்.

இதனை கவனித்த கேரளத்தைச் சேர்ந்த “செங்கலூர் பரமேஸ்வரன் நம்பூதிரி” யானை யை வாங்க முடிவு செய்தார். 1905ல், ரூபாய் 1500 கட்டி திருச்சூரில் உள்ள செங்கலூர்மன்னா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றபின் நல்ல முறையில் கவனித்து, 1906ல் நடைபெற்ற ஆராட்டுபுழா பூரத்தில் கலந்து கொள்ள செய்தனர்.

Chengalloor Ranganathan 3

அதுவரை யாரும் பார்க்காத உயரம், அங்கு நின்ற மற்ற யானைகளை குட்டிகள் போல ஆகிவிட்டான் ரெங்கநாதன். இதனால் மக்கள் ஆரவாரிப்பு அதிகமானது. ரெங்கநாதனை காணவே கூட்டம் கூடினர்.

1906-1914 வரை அனைத்து பூரத்தில் கம்பீரமாக நின்றான். அப்படி 1914 ஆண்டு நடந்த பூரம் துயரமான ஒன்றாக அமைந்தது, அருகில் நின்ற கோவிந்தன் என்ற யானை தாக்கியதில் ரெங்கநாதன்க்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது. மூன்று வருடங்கள் நீடித்த சிகிச்சை பலனின்றி 1917ம் ஆண்டு உயிரிழந்தான் ரெங்கநாதன்.

இப்படி உயரமான யானையை இழக்க விரும்பாத பிரிட்டிஷ் அரசு, ரெங்கநாதனின் எலும்புக்கூடு யை பத்திரபடுத்தி லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்தனர். அதற்காக ரெங்கநாதன் இறந்ததும் அதன் உடலில் ரசாயனம் தடவி புதைத்தனர். ஆறு மாத காலம் சென்றதும் எழும்புகள் மட்டும் எடுத்து அதனை பத படுத்தினர்.

திருச்சூரில் உள்ள அருங்காட்சியகத்தின் கடின முயற்சியில் லண்டன் எடுத்து செல்ல பட இருந்த ரெங்கநாதனின் எழும்புகளை, திருச்சூரில் உள்ள அருங்காட்சியகத்திலே வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100 ஆண்டுகள் கடந்தும் திருச்சூர் அருங்காட்சியகத்தில் கம்பீரமாக நிற்கின்றது நம் “ரெங்கநாதன்”.

Chengalloor Ranganathan 4

கடந்த 10 வருட காலத்தில் ஆயிரக்கணக்கான யானைகள் இந்தியாவில் மட்டுமே இறந்து உள்ளது. 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 27,785 யானைகள் இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் தந்திற்கான பலி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த யானைகளின் எண்ணிக்கை இப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு அவற்றின் வாழிடங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.யானைகள் ஓர் அற்புத உயிர்கள். அதிக சிந்தனை ஆற்றலை கொண்டவை. பல்லுயிர் பெருக்கத்தின் சமச்சிர்றை பராமரிப்பவை. அவை மனிதக் கொடுமைகளையும் மீறி இந்தியாவில் உயிர்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

யானை வழித்தடம் வழியாகப் பாதைகளோ கட்டுமானங்களோ அமைக்கப்படும்போது ஒருமுறைக்குப் பத்துமுறை சிந்தித்து ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் அவை, தம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகின்றன.

ரெங்கநாதன் நினைவுகளை தமிழ் ஒலியில் கேட்க

Add comment