தசரா – இறைவியின் கோலாகலம்

தசரா – இறைவியின் கோலாகலம்

நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான்.

இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

maxresdefault.jpg

இந்தியாவின் பன்முக கலாச்சரத்திற்கு ஏற்ப வெவ்வேறான இடங்களில் வண்ணங்களால் தீட்டப்பட்ட கோலாகல பண்டிகை நிகழ்வுகள் மக்களை இணைக்கின்றன.

பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் விழி விருந்தாக அமைகிறது இந்த நவராத்திரி.

தசரா அல்லது நவராத்திரி பண்டிக்கைக்கு பல்வேறு விதமான புனைவு மற்றும் இதிகாச கதைகள் உள்ளன. மகா பாரதமும் ராமாயணமும் இரு வேறு காரணங்களுக்கு இவ்விழாவில் நினைவு படுத்தப்படுகிறது.

முதலில் மத புராணங்களில் உள்ள விளக்கத்தை அறிவோம்.. இறைவன் பேரழிவால் அழிந்த இவ்வுலகத்தை மீண்டும் உருவாக்க எண்ணிய போது , அதன் ஆதார ஆற்றலாக இருக்க சக்தியை படைத்தாராம்.

இச்சை அதாவது உலகின் தீய எண்ணங்களை வேரறுக்க துர்க்கை ரூபத்தில் சக்தி அவதாரமெடுத்தாள். உயிரினங்களின் தேவைகளை நிவர்த்திக்க செல்வம் தரும் லட்சுமியாக பரிணமித்தாள். பின்னர் அறிவின் ஆதாரமான சரஸ்வதி உருவெடுத்து சகல உயிர்க்கும் நுண்ணறிவை அளித்தாளாம்.

நவராத்தின் போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு முறையே அடுத்தடுத்த மூன்று தினங்களுக்கு விழா எடுக்கப்படுகிறது.

சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களுக்கு குங்குமமிட்டு சாமி அறைக்குள் வைத்து வணங்கியது எல்லோருக்கும் நினைவில் இருக்கும். தேடிக் கொண்டிருந்த பழைய புத்தகங்கள் திரும்ப கிடைக்கும் தினமது.

saraswati-and-durga-pooja.jpg

மத்திய இந்தியா மற்றும் சில வட மாநிலங்களில் மகிஷாசூரன் என்ற அரக்கனை அழித்தவளாக இந்த நவ தினங்களில் சாமுண்டி ஆராதிக்கப்படுகிறாள்.

மகிஷாசுரமர்த்தினி :

மகிஷா என்ற அரக்கன் பிரம்மனிடம் சாக வரம் வேண்டி, ‘தான் ஒரு பெண்ணின் கையால் மட்டுமே இறக்க வேண்டும்’ என வரம் பெற்றான். பெண்கள் பூவை விட மென்மையானர்வள் என்றெண்ணி அவன் மூவுலகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

எல்லா கதைகளிலும் வருவது போல தேவர்கள் அஞ்சி விஷ்ணு பகவானை நாடி சென்றார்களாம். ஆனால் ஆணாதலால் அவரால் கூட மகிஷாவை வீழ்த்த முடியவில்லை. விஷ்ணு சிவபெருமானை நாடி நடந்ததை கூற சிவன் தன் ஞானத்தால் சந்தியா தேவி என்ற சக்தியை உண்டாக்கின்றார்.

நேரிடையாக போருக்கு அழைத்தால் வரமாட்டான் என்றறிந்த தேவி தன் அழகால் அவனை மயக்கினாள், எதிர்பார்த்தது போல் அவனும் தேவியை திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது அனுப்பினான். என்னிடம் ‘போரிட்டு வெல்பவர் மட்டுமே தன்னை திருமணம் செய்ய முடியும்’ என சொல்லி அனுப்பினார் சந்தியா.

தன் வீரர்கள் ஒவ்வொருவராய் அனுப்ப எல்லோரும் தேவியிடம் வீழந்து மடிய இவனே நேராக களத்திற்கு சென்றான். அவனது வரத்தை அழித்து தேவர்களை மகிழ்வித்தாள் மகிஷாசுரமர்த்தினி. பத்து நாட்கள் நடந்த போரில் அரக்கனை வென்று அழித்ததால் விஜயதசமி உருவானதாய் ஐதிகம்.

மைசூர் தசரா :

மைசூரில் மகிஷனை வென்ற சாமூண்டேஷ்வரியை வணங்கி கொண்டாடுவது 400 ஆண்டு கால கலாச்சாரமாகும். மேலும் இந்தியாவின் பெரிய சூரசம்காரம் நடத்தும் இவ்விழா கர்நாடகத்தின் மாநில விழாவாக அங்கிகரிப்படுகிறது.

யானைகள் புடைசூழ அரண்மனை நகர வீதிகளில் நடைபெறும் இந்த தசரா உலக புகழ்பெற்றது. ஆங்கிலேய காலத்தில் கூட அரசர்கள் குதிரைகளில் வலம் வந்து உற்சவத்தை சிறப்பிப்பர்.

FL30_BK_DASARA_2583113g.jpg

தசமி நாட்களில் மலர் கண்காட்சிகள், மேள தாள விளையாட்டு, நடனங்கள், மகளிர் தசரா, இளைஞர் தசரா, உணவு திருவிழா, திரைப்பட விழா, கலாச்சார கூடங்கள், இசை கச்சேரி, ராம்லீலா நாடகம்,சுடரொளி அணிவகுப்பு இன்னும் பல என மைசூரே கலைகட்டும்.

28BG_ILLUMINATED_P_2129325f.jpg

அரண்மனை உட்பட நகரமே செயற்கை ஒளியால் வண்ணமிகுந்து தோற்றமளிக்கும் அழகை விளக்க இயலாது.

இடம் : மைசூர், கர்நாடகா.

காலம் : தசராவின் 10 தினங்களும்(10-19 Oct)

கர்பா தசரா 🙁Garba)

வட இந்தியாவின் பெரும்பாலான மாநில கோவில்களில் துர்க்கைக்கு பத்து நாட்களுக்கும் அதிசிறப்பான பூஜைகள் நடைபெறும்.

குஜராத்தில் தான் இந்தியாவிலேயே கொண்டாட்டமான திருவிழாவாக தசரா நடக்கிறது. பாரம்பரிய நடமான கர்பா, தாண்டியாவை பெரிய திடல்களில் குழுவாக இணைந்து கலாச்சார ஆடை அணிந்து ஆடி மகிழ்வார்கள். நவராத்திரி முழுதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும்.

இந்த நடன ஆர்பரியத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்து பயணிகள் குவிகின்றனர். வண்ண கற்கள் பொதிக்கப்பட்டு சிகப்பு கலந்த ஆடையில் தங்களின் ஒய்யாரத்தை கண்டு மகிழ்கின்றனர் ஊர்வாசிகள்.

Garba-dance.jpg

திடல்கள் மட்டுமல்லாது தெருக்களிலும் வீடுகளிலும் கூட சில வகை கர்பா நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்பது தினங்களும் விரதமிருந்து கோவிலுக்கு சென்று துர்க்கையை உளமாற வணங்க வேண்டும்.

ரங்கோலிகளை ஆடையில் தெரித்தது போல வண்ண நட்சத்திரங்கள் வீதியில் வட்டமிடும்.

குழந்தைகள் கூட விரதமிருந்து மூன்று தேவிகளை போல ஆடையணிந்து மேடைகளில் காட்சியளிப்பதை காண சில நேரங்களில் தேவியே தரையிரங்கி வந்தாலும் யாரும் கவனிப்பது அரிது தான்.

விஜயதசமி பெயர் காரணம்:

விஜயதசமி பெயர் வர காரணம் மகாபாரத கதையில் உள்ளது. பாண்டவர்கள் மறைந்து வாழும் போது துரியோதனன் அவர்களை எவ்வாறாவது வெளியே வர வைக்க வேண்டுமென திட்டங்கள் தீட்டினான்.

அதற்கு ஒரே வழி அவர்கள் ஒளிந்திருக்கும் விராட நாட்டின் மீது படை எடுப்பது தான். நிச்சயம் அர்சுனன் சினம் கொண்டு வெளியே வந்து தாக்குதலை எதிர்ப்பான் என்பது அவன் எண்ணம்.

மறுநாள் மறைவு நாட்கள் முடிவதை யோட்டி வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வணங்கி பூஜித்தனர் பாண்டவர்கள். மறு நாளும் வந்தது.

ஆனால் பெண் வேடம் பூட்டிருந்த அர்சுனன் மாலை வரை பொறுக்காது விராட இளவரசன் உத்தரனை ரதத்தில் ஏற்றிக் கொண்டு சாரதியாய் போர்க்கலம் சென்றான். பின்னர் வேடம் கலைந்து போரில் வெற்றியும் கொண்டான்.

தசமி அன்று வெற்றியோடு துவங்கியதால் விஜயனுக்கு என்றும் வெற்றியே என மக்கள் ஆரோத்தித்தனர். அன்றைய தினம் விஜய தசமி ஆனாது, அதற்கு முன் ஆயுதங்களை வழிபட்ட தினம் ஆயுத பூஜை ஆனதாக கூறப்படுகிறது.

அஷ்டமி நல்ல காரியங்களை செய்ய தகுத்த காலமில்லை என்பது இந்துக்களின் வழக்கம். தசமி அன்று தொடங்குவது சிறப்பானதாக கருத்தப்படுகிறது.

endhiran-movie_80447-1920x1080.jpg

ஆயுத பூஜையானது நமக்கு தொழில் மூலம் உணவளிக்கும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் தினம், ஒவ்வொரு கடைகளிலும் தங்கள் ஆயுதங்களுக்கு மாலைகளில் தோரணமிடப்பட்டு சந்தனமும் குங்குமமும் வைத்து ஒரு மாய ஆர தழுவலை நிகழ்த்தி விட்டு செல்வார்கள் தொழிலாளிகள்.

முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

சிறுவர்களுக்கு சைக்கிள் என்றால் இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து புதிய விதவிதமான ஒலிபெருக்கிகளை இணைத்து வீதிகளில் பந்தாவாக வலம் வருவார்கள், அதுவும் பெண்கள் இருக்கும் தெருவில் சொல்லவே வேண்டாம்.

ராம்லீலா :

மகாராஷ்டிரா, குஜராத், உ.பி, டெல்லி இன்னும் பல பகுதிகளிலும் தசரா இரவுகளில் ராம்லீலா நாடகம் மேடையேறுவது வழக்கம். இதற்காக பல அமைப்புகள் பெரும்பான்மையான தொகையை செலவிடுகிறது, பார்வையாளர்களும் தான்.

அதிபலம் வாய்ந்த சிவபக்தனான ராவணை வெல்வதற்கு தனக்கு சக்தியை வழங்குமாறு காளியை வேண்டி வணங்கினாராம் ராமன்.

ஒன்பது இரவுகள் தவமிருந்து பத்தாவது நாளன்று தசமுகனை ராம சேனைகள் வென்றது. ராமர் தான் முதன்முதலாக நவராத்திரி கொண்டாடினார் என்றொரு கருத்தும் உண்டு.

ராம்லீலா இன்னமும் மக்களுக்கு தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. தீய சக்தியை அழிக்க தேவி நமக்கு ஆற்றலை வணங்க்குவாள் என்பது அவர்களது மனதளவிலான தீராத நம்பிக்கை.

ஊரின் மைய திடல்களில் மிக பிரமாண்டமான ராவணன், மகிராவண் மற்றும் கும்ப கர்ணின் உருவ பொம்மைகளை வைத்து மக்களின் பேரதரவான இருபது காதுளையும் மூடிக் கொள்ளும் அளவிற்கு கரகோஷத்தோடு எரியும் வில் எய்தப்படும்.

உருவ பொம்மைகள் எரிப்பதை கண்டு அரசியல்வாதிகளும் மகிழ்வது இந்த திருநாளில் மட்டும்தான்.

ராமனின் வில் ராவணனின் தலையை கொய்யும் போது மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர், சீதையை காணும் போது களிப்படைகின்றனர், இது இந்தியாவின் சக்திவாய்ந்த ஆன்மிக தாக்கத்தின் அடையாளம்.

குல்லு தசரா(kullu dussehra):

சண்டிகருக்கு அருகே குல்லு தசரா சற்று வித்தியாசமாக பத்தாவது நாளான்று தொடங்கி ஒருவாரம் வரை நீளும்.

Kullu-Dussehra-1.jpg

17 ஆம் நூற்றாண்டில் இமாச்சல பிரதேசத்தின் அரசர் ரகுநாதர் சிலையை நிலை நிறுத்தியலிருந்து வருடா வருடம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் ரத யாத்திரையில் 5 லட்ச அளவிலான மக்கள் வருடாவருடம் கலந்து கொள்கின்றனர்.

இடம் : குல்லு பகுதி, இமாச்சல பிரதேசம்.

காலம் : விஜயதசமி அன்று(19-Oct-2018)

குல்லு நகர திருவிழா உலகமய மாகிக் கொண்டிருக்கிறது. அழகிய குளிர் பிரதேசமான இமாச்சலத்தில் நடப்பது மட்டுமல்லாமல் ராம்லீலா, ரத யாத்திரை, சர்வதேட அளவில் பிரபலமடைந்து வரும் கிராமிய நடனங்கள்(International Folk Festival) என இன்னும் பல காரணங்கள் இவ்விழாவிற்கு பெருவாரியான சுற்றுலாவாசிகளையும் ஈர்க்கிறது.

நவராத்திரி கொலு :

நவராத்தின் விழாக்கள் தென் இந்தியாவில் வேறு மாதிரியான வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. வடிவம் என குறிப்பிடுவது கொலு பொம்மைகளை.

குறிப்பாக தமிழகத்திலும் ஆந்திராவிலும் கொலு வைத்து வணங்குவது பாரம்பரியமாக தொடர்கிறது. வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வணங்குதலோடு தினம் சுமங்களிகளுக்கு உணவு படைப்பது நற் செல்வத்தை அளிக்கும்.

புழுவாகவும் மரமாகவும் அவதரித்து மனிதனாகி இறுதியில் இறைவனடி சேர்வோம் என்பது இதன் தத்துவம்.ஒன்பது அடுக்குகளாக கொலு வைப்பது முறை. விநாயகரை வைத்த பின் தான் மற்ற பொம்பைகளை வைப்பது நியதி.

Idols-kolu-being-dispalyed-in-Andhra-Pradesh.jpg

முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.

இரண்டாம் படியில் – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

மூன்றாம் படியில் – மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

நான்காவது படியில் – நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஐந்தாம் படியில் – ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஆறம் படியில் – ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

எட்டாம் படியில் – தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் சக்திதேவி இருக்க வேண்டுமாம்.

 ஒன்பது படிகள் இயலவில்லை எனில் ஒற்றை படை எண்களில் அமைக்கலாம். இந்த வழக்கம் முந்தைய மன்னர் காலத்திருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது.

சுரதா என்ற அரசன் தன்னை தாக்குவதற்க்கு பல எதிர்களில் போர் தொடுத்து வருவதை எண்ணி கொண்ட ஐயத்தை தனது குருவிடம் கூறினார்.

அதற்கு குரு நீ காளி தேவியை வழிபடு உனக்கு தேவையானதை அவள் அளிப்பாள் என்றார். சுரதாவும் லிங்கத்தை உருவாக்குவது போல காளி சிலையை மண்ணால் உருவாக்கி வழிபட்டான்.

காளி அவனுக்கு போரில் வெற்றி கொள்ளும் ஆற்றல் பலத்தை அளித்தாள். அவனும் போரில் வெற்றி கொண்டான்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணால் வணங்கியதால் சகல செல்வங்களும் கிடைக்க அருளினாள். அது முதலே மண்ணால் சிலை செய்து கொலு வைக்கும் முறையும் தோன்றியது.

தமிழகத்தின் தென் பகுதிகளில் வாசலை மாட்டின் சாணத்தால் பூசிவிட்டு வீட்டிற்கு வெள்ளை அடிப்பார்கள், இது நிறங்களான ஒரு வர்ணஜால பகுதிகள் உருவாகும் சமயம்.

இப்பொழுதெல்லாம் கோவில்களில் தான் பொதுவான கொலு வைத்து வணங்கப்படுகிறது. மதுரை, காஞ்சி உட்பட அனைத்து இடங்களில் பல அவதாரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

சில ஊர்களில் இரவில் அம்மன் ஊர்வலம் நடைபெறும். உற்சவ சிலையை கோவிலுக்கு வெளியே வைத்து மேள தாளங்களோடு நடனமாடி கொண்டாடுகின்றார்கள்.

குலசை தசரா:

தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் எல்லா நவராத்தி விழாக்களிலிருந்து வித்தியாசப்பட்டது. இங்கு கடவுகளுக்கு சிலைகள் வைப்பதில்லை, மாறாக இவர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர்.

அதற்கு பல கட்டுபாடுகள் உண்டு. பல நாட்கள் விரதமிருந்து காளி, துர்க்கை, வீரன், கிருஷணன், முருகன் உட்பட தெய்வ வேடங்கள் மிக நேர்த்தியாக இடப்படுகின்றன.

95_4.jpg

மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகமானோர் கூடுவது குலசை தசராவில் தான். கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் கோலாகலமாக விழா நடைபெறும்.

தினசரி அம்மனுக்கு விசேஷ பூஜைகள், தேர்பவனி, அன்னதானம் , முக்கிய நிகழவாக சூரசம்காரம் வெகு விமிர்சையாக நடக்கிறது. வேடம் பூண்டு வியக்க வைக்கும் அத்தினத்தில் காளியால் மரண சம்பவங்கள் நிகழ்வதாக கூட சொல்லப்படுகிறது.

இடம் : குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி(திருசெந்தூரிலிருந்து 14 கி.மீ)

காலம் : விஜயதசமி நாட்கள்( 10- Oct to 19-Oct-2018)

பார்ப்பதற்கு தத்ரூபமான மாறு வேடங்கள் சில சமயங்களில் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அதிலும் காளி உருவங்கள் பயத்தை அளிக்கின்றன. பல லட்ச கணக்கான பக்தர்கள் கூடும் பிரமாண்ட விழா மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் ஹால்லோவன் விழாவிற்கு ஒப்பத்தகுந்த பண்டிகையாக கருதப்படுகிறது.

தற்போது பெருமளவில் இல்லையெனினும் சோழ மன்னர்கள் காலத்தில் நவராத்திரி தமிழக அரச விழாவாக கொண்டடப்பட்டதாய் கருதப்படுகிறது.

இருப்பினும் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் ஆயுத பூஜை/ சரஸ்வதி பூஜை அளவிற்கு விஜய தசமி கொண்டாடப்படுவதில்லை, பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை தவிர.

ss.jpg

விஜய தசமி பண்டிகை ஆன்மீகவாதிகள் மட்டுமல்லாது சுற்றுலா வாசிகளுக்கும் புகைப்பட கலைஞர்களுக்குமான விழாவாகும். கண்களுக்கு பல வித காட்சிகளை விருந்து படைக்கும் ஒரு அற்புத நிகழ்வாக இது அரங்கேறுகிறது.

ஏற்கனவே சொன்னது போல இந்தியாவில் தான் உலகிலேயே அதிகளவிலான பண்டிகைகள் கொண்டாட்டப்படுகின்றன். வண்ணங்களிலும் ஆட்டம் பாட்டங்களிலுமே நம் கலாச்சாரம் கலந்துள்ளது.

 நாற்காட்டிகள் திணறும் பண்டிகைகள் தாம் நம்மையும் நம் பாரம்பரியத்தையும் நிலைத்திருக்க வைத்திருக்கிறது என்பதில் பாலின் நிறமளவிலும் சந்தேகமில்லை.

 

Add comment