இவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது

இவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது

பாரத ரத்னா விருது பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா(Sir MV) அவர்களின் பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் செப்டம்பர் 15 ஆம் நாளை தேசிய பொறியாளர் தினமாக இந்தியா அனுசரித்து வருகிறது.

விசுவேசுவரய்யா(Visvesvaraya) கர்நாடகத்தில் பிறந்தவர். கர்நாடக பகுதிகளான மைசூர், ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு இவர் ஆற்றிய தொண்டு ஏராளம். அதனாலே பொறியாளர்கள் தினம் கர்நாடகா மாநிலத்தின் அரசு விடுமுறை நாளாகும். அந்த காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் நீர்த்தேக்கமாக கிருஷ்ணராஜ சாகர் அணையை காவிரிக்கு குறுக்கே கட்டியவர் இவரே.

மைசூர் திவான்

1881 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்து முடித்தவர் சிவில் இஞ்சினியர் படிப்புக்காக புனே சென்றார். இந்திய அரசுத்துறையில் பல்வேறு மதகுகள், அணைகள் போன்றவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியதுடன் தானியங்கு வெள்ள தடுப்பு மதகுகளுக்கு காப்புரிமையும் பெற்றார். தக்கான் பகுதியில் பாசன திட்டத்தை அறிமுகபடுத்தி உணவு விளைச்சலை அதிகரிக்க காரணமானார்.

1908 ஆம் ஆண்டு அன்றைய மைசூர் ராஜ்ஜியத்தின் பெருமைமிகு திவான் பதவி(தலைமை அமைச்சர்) இவருக்கு அளிக்கப்பட்டது. அப்போது மைசூர் மன்னராக இருந்த நான்காம் கிருஷ்ணராச உடையாரின் ஆதரவுடன் செயகரிய காரியங்களை செய்து அசத்தினார்.

சாதனைகள்

கிருஷ்ணராஜ சாகர் அணை, ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையான சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகளுக்கான பொது பணிகளுக்கு பின்னணியாக விளங்கினார். ஐதராபாத் நகரை பாதுகாக்க வெள்ள தடுப்பு முறை அமைப்பை வடிவமைத்தது இவருக்கு அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது.

கல்வியை பொறுத்தமட்டில் பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், 1917 ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது.

இன்றைய தமிழக காவிரி பிரச்சினைக்கு இவரும் ஒரு காரணமே. காவிரிக்கு குறுக்கே அணை கட்ட அன்றைய அரசு தடை விதித்திருந்தது. திவானாக இருந்த விசுவேசுவரய்யாவே இந்த அணையால் நீர் மின்சாரம் தயாரித்து அதனாலும் லாபம் கிடைக்கும் என்று அரசை சம்மதிக்க வைத்தார். மேலும் திட்ட கருத்து முதல் திட்டம் முடியும் வரை உடனிருந்தார்.

கௌரவிப்பு

வெறும் பொறியாளாராக இல்லாமல் சிறந்த பொருளாதார வல்லுனாராகவும் விளங்கினார். கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் நூல் எழுதியுள்ளார். நவீன மைசூர் அரசின் தந்தை என கருதப்படும் இவருக்கு நைட் கம்மாண்டர்(Knight Commander) என்ற பதவியை பிரிட்டிஷ் அரசு கொடுத்து கவிரவித்தது. பாரத ரத்னா 1955 இவருக்கு கிடைத்தது. பல்வேறு அறிவியல் அமர்வுகளுக்கு தலைமை வகித்து வழிநடத்தினார்.

Add comment