தலைச்சம் பையனுக்கும், தலைச்சம் பெண்ணுக்கும் ஏன் திருமணம் செய்யக் கூடாது?

தலைச்சம் பையனுக்கும், தலைச்சம் பெண்ணுக்கும் ஏன் திருமணம் செய்யக் கூடாது?

May 26 2020 12:34:00 PM
வீட்டில் ஜாதகம் பார்க்கும் பேச்சை கையிலெடுத்தனர். நான் வீட்டில் மூத்த பையன் என்பதால், தேடல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. கோவில், மண்டபத்தில் எல்லாம் எழுதி வைத்து, சமீபத்தில் ஒரு ஜாதகம் வந்தது. வாங்கி பார்த்த உடனே, “தலைச்சம் பிள்ளைக்கும், தலைச்சம் பெண்ணுக்கும் ஆவாது” என சொல்லி பாட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என்ன பாட்டி? வீட்டின் மூத்த பெண்ணா இருந்தா என்ன குறைச்சல்? என்று கேட்டேன். ஆவாதுனா ஆவாது, நீ அடுத்த ஜாதகத்த பாரு என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

marriage tamilnadu culture

எனக்கு ஒரே குழப்பம், எதுக்கு பாட்டி அப்படி சொன்னாங்க என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தேன். அன்றைய சூழலில் குடும்பங்கள் என்பவை 10 பேர், 20 பேர் என அதிக மனிதர்களை கொண்டவையாக இருந்தது. மேலும் மருத்துவ வசதிகள் குறைவு, வேலைவாய்ப்பு குறைவு, உறவுகளுக்கான செலவும் அதிகம். வீட்டில் தலைச்சம் பிள்ளையாக இருந்தால், இருவருக்கும் பிறந்த, புகுந்த இடங்களில் பொறுப்பு அதிகமாக இருக்கும். இருவருமே தலைச்சன்களாக இருப்பதால் இரண்டு குடும்பங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அவர்களின் சுமையை அதிகரிக்கும் என்பதால்தான் அப்படி சொல்லியிருக்கின்றனர்.

marriage tamilnadu culture

இது தவிர, “மூத்தது மோழை.இளையது காளை” என்ற பழமொழி கிராமப்புறங்களில் சொல்லக்கேட்டிருப்போம். வீட்டில் பிறக்கும் முதல் குழந்தை, மற்ற பிள்ளைகள் அளவுக்கு புத்திசாலித்தனமும், விவேகமும் இல்லாமல் இருக்குமாம். திருமணம் செய்யும் இருவரும், மூத்த பிள்ளையாக இருந்தால், அவர்களுக்குள்ளே புரிதல் குறைவாக இருக்கும் என்றும், வீணாக சண்டை வரும் என்பதை உணர்ந்தும் அப்படி சொல்லியிருக்கலாம். தாத்தா, பாட்டி இதனை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து, அடுத்த சந்ததிகளுக்கு உதவும் நோக்கில் இப்படி கூறி இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

marriage tamilnadu culture

இத்தனை பேசியிருக்கோம். இப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கனுமே! வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தால், தலைச்சம் பிள்ளை எனலாம். அப்போ ஒரு குழந்தை இருக்கும் வீடு எல்லாம் என்ன பண்ணுவாங்க? எல்லாம் மனம் சார்ந்தது தான். அந்தக்காலத்தில் நிலைமை அப்படி, அதற்கேற்ப ஒரு வழக்கத்தை கடைபிடித்துள்ளனர். ஆகவே இனி வரும் காலத்தில், திருமணம் என்பதை இரு மனங்களின் பொருத்தமாகவே பார்த்து, முன்னோர்களின் நல்ல பழக்கத்தையும் சேர்த்து வளமுடன் வாழ்வோமாக!

Add comment