விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு

விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு

ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை.

தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து மகிழ்வதையே நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில் வெறும் மகாரஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே நடைப்பெற்ற இந்த பண்டிகை இன்று இந்திய விழாக்களின் அடையாளமாக மாறியது எப்படி, சங்க தமிழில் குறிப்புகள் இல்லாத கணபதி முழுமுதற் கடவுளாக மாறியது எப்போது?

கணேஷ் சதுர்த்தி எப்போது துவங்கியது என்பதற்கு ஆதார தரவுகள் ஏதும் இல்லை என்ற போதும் விநாயகர் பற்றிய முதல் குறிப்பேடு ரிக் வேதத்தில் இருக்கிறது. ஞானத்தின் அதிபதியான இவரை பற்றிய விரிவான கதைகள் வேதத்திற்கு பின்னான புராணங்களிலே வந்தன. மகாபாரத்தில் விநாயகராகவும் கந்த புராணம், நாரத புராணம் போன்றவற்றில் கணபதி என்றும் குறிப்புகள் உள்ளன.

ganpati-in-ellora-caves.jpg

இருப்பினும் உருவ வழிபாடு நிலை தகுதி 8 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை ஆராய்ந்ததில் எல்லோரா குகையில்(கிபி 5-8) சக்தி தேவிக்கு அருகில் இருக்கும் விநாயகரே பழமையானவராக தெரிகிறார். இந்த காலகட்டத்தில் தான் மத்திய இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருந்த கணபதி விந்திய மலைக்கு கீழிருக்கும் தக்கான பீடபூமி பகுதிகளான சாளுக்கிய தேசங்களுக்கும்(கர்நாடகா) சென்றடைந்தார்.

வாதாபியில் இருந்து வந்த சமஸ்கிருந்த ஆன்மிகவாதிகளால் விநாயகர் தமிழ் தேசத்திற்கு வந்தார். பல்லவர்கள் ஆட்சி காலத்தில் போர் வெற்றிக்கு பிறகு அந்த நாட்டில் இருந்த கணபதி சிலைகளை கொண்டுவந்ததும் ஒரு முக்கிய நிகழ்வு. அதன் பின்னரே தமிழக வழிபாட்டு சமயத்தில் விநாயகர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

முதலாம் ராஜராஜன் எழுப்பிய தஞ்சை கோவிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக கணபதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டியில் குடைவரை கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் சிலைதான் தமிழகத்தில் பழமையானது என கருதுகிறார்கள்.

எவ்வாறாகினும் கணேஷ் சதுர்த்தி எனும் விழா 16 நூற்றண்டிலேயே துவங்கப்பட்டிருக்கிறது. இன்றைய புனேவில் மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜி மகாராஜாவால் முகலாய மாராத்திய போருக்கு பின்னான காலத்தில் முதன்முறையாக விழா மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் மராத்திய மக்களின் முக்கியமாக பிராமணர்களின் தெய்வமாக கணேஷா அப்போது வணங்கப்பட்டார். பூணுல் அவருக்கு அப்போதே சார்த்த பட்டிருக்கும் என தெரிகிறது.

கணேஷா பிறந்தை குறிப்பதாக இருக்கிறது இந்த பண்டிகை. புராண கதைகளை பொறுத்த வரையில் பார்வதி தனது அழுக்கை பிடித்து காவலனாக வைக்க சிவன் அதன் தலை துண்டித்து வடக்கே கிடைத்த யானை தலையை வைத்தது யாவரும் அறிந்த கதையே. மற்றொரு கதை அசுரர்களை அழித்து தேவர்களை காக்க சிவனால் உருவாப்பட்டவரே விக்னேஸ்வரன் என்கிறது.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

இந்து கடவுகளில் முதன்மையானவராகவும், வெற்றி, தடைகளை தகர்ப்பது மற்றும் ஞானத்தின் தெய்வமாகவும் கணேசனே திகழ்கிறார். சந்திரன் ஒருமுறை விநாயகர் உருவத்தை பார்த்து சிரித்து சாபம் வாங்கிக் கொள்கிறார். பின் வழக்கம் போல தேவர்கள் பிரம்மாவின் அறிவுரைப்படி பிள்ளையாருக்கு லட்டு கொழுக்கட்டை போன்றவற்றை படைத்து சாப விமோசனம் பெறுகிறார்கள் என்ற கதை கந்த புராணத்தில் வருகிறது.

வெறும் ஒரு சமூக மக்களின் குடும்ப பண்டிகையாக இருந்த கணேஷ் சதுர்த்தி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகரால் பெருமளவு அடையாளபடுத்தப்பட்டு ஆண்டுதோறும் மக்கள் கொண்டாடும் பொது விழாவாக மாற்றம் கொண்டுவரப்பட்டது. பிரச்சாரங்களில் இதைப் பற்றி அவர் பேசினார்.

மகராஷ்டிராவில் ஒரு தலைவர் முதன்முறையாக குடும்பங்களுக்கு அப்பாற்பட்டு கோவிலில் பொது கணபதி ஒன்றை நிறுவி வழிபட துவங்கினார். திலகர் தனது பத்திரிக்கையில் அவரை பாராட்டி மற்றவர்களையும் பின்தொடர சொன்னார்ர்.

ganeshfestival1964.jpg

திலகர் இந்த ஆன்மிக ஆர்வத்திற்கு பின்னால ஒரு அரசியல் இருக்கிறது. ஒன்று, பிரிட்டிஷ் இந்தியாவில் மக்கள் குழுவாக கூடி பேசுவதை புரட்சியை உண்டாக்கும் என்ற காரணத்தால் 20 க்கும் மேற்பட்டோர் ஒன்றுசேர தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் முஸ்லிம் லீக் கட்சியின் தொடர் வேண்டுகோளால் வெள்ளிக்கிழமை பிராத்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்துக்கள் இடையே ஒற்றுமை இல்லாததால் அன்றைய பிரிட்டிஷ் அதிகாரிகளும் அதனை சாதமாக பயன்படுத்திக் கொண்டனர். இதற்கெல்லாம் ஒரு விடையாக விநாயகரை அடையாளம் கண்டார் திலகர். கணபதியை ஏழைகளும் வணங்கினர், ஆனால் விழா கொண்டாடவில்லை. அது வசதி படைத்தவர்கள் மட்டுமே கொண்டாடும் படியாக இருந்தது.

ஜாதி பிரிவினையை உடைத்து அனைத்து இந்து மக்களும் ஒன்று சேர இதுவே தளம் என புரிந்து கொண்ட திலகர் ஒரு குடும்ப விழாவை சமூகத்தின் திருவிழாவாக மாற்றினார். எனவே மதத்தின் பெயரால் மக்கள் ஒன்று திரளும் போது எந்த ஆட்சியாலும் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறாக பிள்ளையார் வேறுபாடுகளை களைந்து எல்லா வீடுகளிலும் தஞ்சம் கொண்டார்.

திருமலை நாயக்கர் மதுரையில் சைவ வைணவ பிரிவினையை தவிரிக்க சித்திரை திருவிழா கண்டது போல திலகர் நிகழ்த்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தி சமயத்தில் வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கு உதவ தொடங்கினார். விழா சமயத்தில் சிலை செய்வது அர்ச்சனை பொருள்கள் தயார் செய்வது என பல சிறு தொழில்கள் நாடெங்கும் உருவானது.

ganesh-festival-1.jpg

அதே நேரத்தில் மற்ற விழாக்களை போலல்லாது விநாயகர் சதுர்த்தி மதக்கலவரத்தை தூண்டுவதாக இருப்பதாகவும் சிலர் விமர்ச்சிகிறார்கள். ஒருவகையில் அது உண்மைதான். ஏனெனில் சிலையை வீதிகள் வழியாக கொண்டு செல்லப்படுவதால் மற்ற மதங்களை சீண்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

விஸ்வகர்மா, இந்து முன்னணி போன்ற இந்து அமைப்புகள் உருவாக காரணமாக இருந்ததும் விநாயகர் சதுர்த்தி தான். இது இந்துக்களை ஒன்று சேர்த்தது அதன் பெருக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் எதிராக இருப்பவர்கள் என நினைத்து மற்ற மதங்களை எதிர்க்க துணிந்தது.

இதனை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் மதத்தின் பெயரால் நாட்டை பங்கு போட்டுக் கொள்ள தொடங்கினர். இப்போதும் மும்பை போன்ற பகுதிகளில் இந்து மக்கள் காரணமே தெரியாமல் இஸ்லாமிய மக்களை வெறுப்பதை கண்கூடாக காண்கின்றேன். அவர்களுக்கும் அப்படிதான். பல மதக்கலவரங்களை இந்த பகுதி சந்தித்து விட்டதை மணிரத்னம் இரு முறை படமாக்கி(பம்பாய்,நாயகன்) இருக்கிறார்.

மற்றொரு சர்ச்சை பெருமளவு சிலைகள் கரைக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுசுழல் மாசுபாடு. மும்பை கடற்கரையில் மட்டுமே 150000 சிலைகள் வருடந்தோறும் கரைக்கப்படுகின்றன. ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மக்களிடமும் அரசிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. plastic of paris முழுதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. சுர்ருசுழலை காக்கும் சிலைகளை பற்றி மேலும் காண

இந்தியா மட்டுமின்றி மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் லண்டனின் தேம்ஸ் நதியிலும் விநாயகர் கரைந்து கைலாயம் வருகிறார். அரசியல் நாடகங்களுக்கு மத்தியில், அன்றைய ஒரு தினத்தில் மும்பையின் நகர வீதிகளை நடன தளமாக மாற்றிக் கொண்டு தன்னை மறந்து இந்த வீதி இந்த பூமீ என்னுடையது என ஆனந்தமாக கோஷம் எழுப்பும் சாமனியனின் ஆர்பரிப்பை காண எத்தனை சிலைகள் வேண்டுமாலும் கரைக்கலாம்.

Add comment