1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி, பி.டி.உஷா 100 மீட்டர் தடகளத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு மயிரிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.பதக்கமின்றி அவர் தாயகம் திரும்பினாலும் அவரை நாம் இன்னமுன் இந்தியாவின் தங்க மங்கையாகவே அடையாளம் காண்கிறோம்.
36 வருடங்கள் ஆகியும் தணியவில்லை இந்த தங்க தாகம், அதன் பின்னர் ஒலிம்பிக் மகளிர் 100 மீ போட்டிகளில் இந்தியர் யாரும் தகுதி பெறவுமில்லை.மெல்ல கலைந்து கொண்டிருந்த இக்கனவில் மீண்டும் வண்ணம் தீட்டியுள்ளார் டூட்டி சந்த்.
கஜகஸ்தானில் அல்மாட்டி ரியோ ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட டூட்டி சந்த் 11.30 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்தார்.
இதன் மூலம் 1989 க்கு பிறகு ஒலிம்பிக்கில் 100மீ மகளிர் தடகளப் போட்டியில் பங்குபெறப் போகும் வெற்றியாளர் ஆகிறார்.
பின்னர் அதே சந்தர்ப்பத்தில் நடந்த மற்றோரு போட்டியில் 11.24 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். இதனால் தேசிய சாதனையான 11.33 வினாடியை உடைத்தெறிந்தார்.
2014 ல் ஆண்களுக்கு உண்டான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக கூறி, தடைக்கு உள்ளான இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் எனப்து குறிப்பிடத்தக்கது.
வருகிற ஆகஸ்ட் 5 ஆம் திகதி 13 பிரிவுகளில் 100 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்தியா சார்பில் ரியோ நகர அரங்கில் தங்களது தோளில் தேசிய கோடியை ஏந்தி செல்ல ஆயத்தமாக இருக்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையக மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் 1980 க்கு பிறகான 100 மீட்டர் வீராங்கணை என்பதையும் தாண்டி டூட்டி இந்த தகுதியை அடைய கடந்துவந்த பாதை, பாலின சர்ச்சை, உடைத்தெரிந்த அரசியல் தடைக்கற்கள், குடும்ப சூழலை மீறிய சாதனை போன்றவை அவர் மேலான கூடுதல் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் ஒரு நெசவாளரின் மகளாக பிறந்தவர் டூட்டி. சிறுவயது முதலே வறுமையான குடும்ப சூழலில் வளர்ந்த இவரது ஓட்டம் பிராமினி நதிக்கரையில் விளையாட்டாய் அவரது அக்காவின் காலடி தடங்களில் துவங்கியது.
தன தங்கையின் திறனை கண்ட அக்கா சரஸ்வதி அவளை மேலும் ஊக்கப்படுத்தினார். ஊரில் உள்ளவர்கள் அவர்கள் தந்தையிடம் ஏன் உன் மகள் இப்படி அறை குறை ஆடையோடு ஓடுகிறாள், கண்டிக்க மாட்டாயா என கூறுவார்களாம்.
காலம் செல்ல செல்ல மாநில விளையாட்டு ஆணையத்தால் இவர் திறமை கண்டெடுக்கப்பட்டது. தன் வேக திறனால் தைவானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்( 2012) போட்டியில் 100 & 200 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.
வெற்றி களிப்போடு ஸ்கட்லாண்டில் நடந்த தனது முதல் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள சென்றார். ஆனால் போட்டியில் பங்கு கொள்ளும் முன்னே அவர் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கத்தால் (International Association of Athletics Federations, ஐஏஏஎஃப்) வெளியேற்றப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட ஸ்டீராய்டு ஹார்மோனை(ஆண்தன்மை) அதிகமாக கொண்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடைசி நிமிட சோதனை மற்றும் வெளியேற்றத்தால் செய்வதறியாது தவித்தார் டூட்டி. அதாவது பாலின பிரச்சனை உள்ளதாக அவர் குற்றம் சாற்றப்பட்டார், ஆய்வு ரீதியில் இவர் பெண் இல்லை என்பதை நிரூபிக்க முயலும் சோதனை இது.
வீட்டுக்கு திரும்பிய டூட்டி உளவியல் ரீதியாக பாதிப்படைந்தார்.இந்திய கண்களின் வழியாக வீட்டின் சன்னலுக்கு வெளியே பார்ப்பது கடினமென அவர்க்கு பட்டது.
அன்றிலிருந்து சில மாதங்கள் அவர் இல்லத்தில் நிசப்தம் மட்டுமே நிலவியது. சமைப்பதே அரிதாகி விட்டது.டூட்டி எப்போதும் எதுவும் பேசாமல் தனிமையாக இருந்தாள்.அவள் தன் உடலை வருத்திக் கொள்வாள் என அவள் அக்கா பயந்தார்.
தடை போடப்பட்டிருந்ததால் டூட்டிக்கு அரசின் சார்பாக எந்த நிதி உதவியோ வேலையோ கிடைக்காது. தன் தந்தை தறி ஓட்டி சம்பாதிக்கும் 3000 ரூ பணத்தை வைத்து குடும்பம் சமாளித்தது. ஊர் மக்களின் இதெல்லாம் தேவையா என்பது போன்ற பார்வையை வேறு பொறுத்துக்க கொள்ள வேண்டிருந்தது.
ஆனால் பாலின சர்ச்சை நடப்பது இது முதன்முறையல்ல. 2009 ஆண்டு பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஆப்பிரிக்க வீராங்கணை காஸ்டர் செமன்யாவிற்கு இச்சோதனை நடந்து அவரது தங்கம் பறிக்கப்பட்டது.
நமது தமிழத்தை சேர்ந்த சாந்தி சௌந்தரராஜன் 2006 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்ற பின்னர், அவருக்கு பாலின சோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனையில் இவருக்கு பெண்மைக்கான பண்புகள் இல்லை என கூறப்பட்டு அவரது வெள்ளி பதக்கமும் பறிக்கப்பட்டது.
எதிர் நீச்சல் படத்தில் வரும் வள்ளி கதாபாத்திரம் இவரை தழுவியே உருவாக்கப்பட்டது. இவர் டூட்டி சந்த்க்கு தனது ஆதரவை மிக அழுத்தமாக தெரிவித்தார்.
அந்த பெண்ணின் எதிர்காலம் பாதிப்படையும் என்பதால் 18 வயதே நிரம்பிய அந்த இளம்பெண் மீண்டும் தடகள பாதைக்கு வரவேண்டி வலியுறுத்தினார்.
இந்நிலை பற்றி அவர் கூறுகையில் சமூகத்தில் ஒரு பெண் தனக்கான அடையாளத்தை இழந்து பெரும் அவமானத்தை அடைகிறாள். பின்னாளில் குடும்ப சுழலில் தொடங்கி பொருளாதார ரீதியிலும் பெரும் இழப்பை சந்திக்கிறாள்.சமூக ஆர்வலர்களும் டூட்டி சந்த்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் பல ஆதரவாளர்கள் மூலம் விளையாட்டு துறையின் உயர் வழக்குமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
ஒரு வருட தடைக்கு பின்னர் அவரது வழக்கில் சரியான ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தால் டூட்டியின் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் தடகள விளையாட்டில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் ஒரு வருட சிக்கலான சூழலுக்கு பின் ஓடுதளத்தில் இறங்கி மீண்டும் முன்னிலைக்கு வருவது அவ்வளவு எளிதல்ல, அதற்கான கால அவகாசமும் மிகக் குறைவாகவே இருந்தது.
டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டியில் ஒரு நொடி வித்தியாசத்தில்(11.33) தனது ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்ட போதும் கடைசி வாய்ப்பான கஜகஸ்தான் மைதானத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
கஜகஸ்தானில் தகுதி போட்டி அன்று காலை 3 மணிக்கு பயிற்சியாளர் அவரை எழுப்பினர், வெற்றிக்கான உந்துதலை அவர் ஒவ்வொரு நிமிடமும் தந்து கொண்டிருந்தார். இந்தியாவில் டூட்டியின் பெற்றோர் கோவிலில் உள்ள அத்துணை தெய்வத்திடமும் தன் மக்களின் வெற்றிக்காக வேண்டிக் கொண்டிருந்தனர்.
பதட்டத்துடன் இருந்த டூட்டி சந்த்யிடம் பதக்கத்தை முதலில் மறந்து விடு, இந்த போட்டியில் தகுதி அடைவதை மட்டும் நினைவில் வைத்துக்கொள் என்றார் பயிற்சியாளர். அத்துணை சவால்களை தாண்டி 11.30 நொடிகளில் இலக்கை அடைந்தார்.
அடுத்த சில கணங்களிலே அவரது அக்கா சரஸ்வதியின் வாட்சப் அலறியது. அளப்பரிய ஆனந்தத்தோடு தான் தேர்வாகிவிட்டேன் என்ற குறுஞ்செய்தி அது.
“Olympic ke liye qualify hua,” read the message from Dutee.
சரஸ்வதி அந்த செய்தியை ஊர் மக்களிடம் சென்று சேர்க்க ஊரே ஆனந்த கூத்தாடியாது. நம்ம ஊர் பொண்ணு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள போகிறாள் என்பது சர்வ சாதாரணமா.ஆரவாரங்கள் புவனேஸ்வர் நகரம் வரை ஒலித்தது.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதென்பது ஒவ்வொரு தடகள வீரரின் வாழ்நாள் லட்சியம். இவர் ஒலிம்பிக்கை தகுதி மட்டுமல்ல பல எதிர்கால இந்திய தடகள மகளிருக்கான வாழ்வையும் வென்றுள்ளார்.
டூட்டி சந்த் இதை விவரிக்கையில்,”இது என் வாழ்வில் மிக முக்கியமான தருணம், ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதை விட எனக்கு பெரிய மகிழ்ச்சியை எதுவும் தரப்போவதில்லை.
எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். நிச்சயம் ஒலிம்பிக் இறுதி போட்டிக்குள் நுழைய முழு திறனையும் பயன்படுத்துவேன்.
நான் 60 மீட்டர் வரை நல்ல வேகத்டன் ஓடுகிறேன். ஆனால் கடைசி 40 மீட்டர் தூரத்திற்கு எனது வேகம் குறைகிறது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். எனது வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். ரமேஷ் சார் எனது ஓட்ட வேகத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்.”
11.24 வினாடிகளில் ஓடினாலும் அவரது பயற்சியாளர் கணிப்புப்படி அவரால் 11.5 நொடியில் அதிகபட்சமாக ஓட முடியும். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பல நாட்டு வீராங்கணைகளோடு தகுதி முறையில் போட்டியிட்டு இறுதி சுற்றில் நுழைவதென்பது அசாதாரணம், இதுவரை பி.டி.உஷா மட்டுமே இதை செய்து நான்காம் இடம் பிடித்தார்.
ஆனால் 1988 க்கு பின்னரே ஒலிம்பிக்கில் தகுதி பெற இலக்குகள் வைக்கப்படும் முறை கொண்டுவரப்பட்டது, அதாவது 2016 ஒலிம்பிக் விதிமுறைகளின் படி ஆண்கள் பிரிவில் 10.2 விநாடியிலும் மகளிர் 11.32 விநாடியிலும் பந்தைய தூரத்தை அடைந்தால் மட்டுமே தகுதி பெற முடியும்.
இதுவரை 100 மீட்டர் மகளிர் ஓட்டப் பந்தயத்தில் சிறப்பான வேகமாக கருதப்படுவது 1988 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புளோரன்ஸ் கிரிபித் ஜாய்னர் என்பவரின் உலக சாதனை தான், 10.49 நொடியில் இவர் கடந்த இலக்கை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. உசேன் போல்ட் 2009 பெர்லின் போட்டியில் 9.58 வேகத்தில் கடந்துள்ளார்.
கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா ஆறு பதக்கங்கங்கள் வாங்கியது. ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச ஒலிம்பிக் பதக்கங்கள் இதுவே.
1983 ல் இந்தியா உலக கோப்பை வென்ற பின்னர் தான் கிரிக்கெட் இங்கு பிரபலமானது.சச்சின், கோலி எல்லாம் அதன் தாக்கங்களே.ஒரு வெற்றி எல்லாவற்றையும் மாற்றும். இம்முறை மட்டும் ஏதோவொரு பதக்கத்தை டூட்டி வாங்கினால் கூட அது பல தடகள வீரர்கள் இந்தியாவில் தோன்ற ஒரு உந்துவிசையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மகளிர் 100மீ ஓட்டப் பந்தயத்திற்கான ஒலிம்பிக் அட்டவணை
- 12 ஆகஸ்ட் காலை – தகுதி சுற்று (Qualification)
- 12 ஆகஸ்ட் மாலை – முதல் சுற்று (Heats)
- 13 ஆகஸ்ட் மாலை – அரை இறுதி சுற்று (Semi-finals)
- 13 ஆகஸ்ட் மாலை – இறுதி சுற்று (Finals)
இதனிடையே ஒடிஸா மாநில முதல்வர் நவின் பட்நாய்க், டூட்டி சந்த்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா தடகள சங்கம் 50,000 டூட்டிக்கு பரிசு அளித்துள்ளது.மேலும் ஒடிசாவிலிருந்து கலந்து கொள்ளும் ஆறு ஒலிம்பிக் வீரர்களுக்கும் 10 லட்சம் பரிசளித்து ஒடிசா அரசு கௌரவித்தது.
Congratulate #Odisha sprinter Ms. Dutee Chand for qualifying for#Rio2016, wishing her triumph and success pic.twitter.com/rUnxd51ZMK
— Naveen Patnaik (@Naveen_Odisha) June 25, 2016
சவால்களை தாண்டி ஒலிம்பிக் சிகரத்தை அடைந்திருக்கிறார் இந்த தங்க மங்கை. டூட்டி பதக்கம் வெல்வதையும் தாண்டி அவர் கலந்து கொள்வதே மிக முக்கயமானதாக கருதப்பட வேண்டும். அவருக்கு இன்னும் 20 வயது கூட நிரம்பவில்லை. எல்லைகளற்ற ஒரு எதிர்கால உலகம் அவர் முன்னே காத்துக்கொண்டிருக்கிறது..
Update :
தடைகளை தாண்டி 2018 இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில் 11.32 நொடிகளில் 100மீ கடந்து வெள்ளிப் பதக்கம் வாங்கி தேசத்தை கௌரவித்துள்ளார் சந்த்.