கதவுகளே இல்லாத இந்திய கிராமம்

கதவுகள் இல்லா வீடுகளை கற்பனை செய்து பார்ப்பது கூட ஆச்சர்யமாக இருக்கிறது. தேவலோகத்தில் வாழ்பவர்களுக்கு கூட வாசற்கதவுகள் உண்டு. வீதியுலாவின் போது நாட்டு மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டிய குற்றத்துக்காக தன் கையையே வெட்டி கொண்ட பொற்கை பாண்டியனின் நீதி தவறாக கதைகள் நம் தமிழ் சமூகத்தில் உள்ளது.

மனிதர்களை பொறுத்தவரை கதவுகள் கையெடுத்து கும்பிடபடாத காவல் தெய்வம். அத்தணை அத்தியாவசிய கதவுகளுக்கு தோரணம் போல ஆயிரம் பூட்டுகளை அணிவித்து விட்டு செல்லும் இந்த கலியுகத்தில் கதவுகளே இல்லாத கிராமம் ஒன்று உள்ளதை அறிவீர்களா!

மகாராஷ்டிரா மாநிலத்தின் சனி சிங்கனாப்பூர் என்ற இந்த குக்கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. வெறும் அருகால் வைத்த வீடுகள் பார்ப்போரை வியக்க வைக்கிறது. கதவுகள் இல்லையென்ற பயம் இங்குள்ள மக்களுக்கு துளியும் இல்லை, காரணம் அவர்களை காக்க சனிபகவான் அனுதினமும் காவலுக்கு இருக்கிறார்.

சனியே இவர்களின் காவல் தெய்வம், விருப்ப தெய்வம், குல தெய்வம், எல்லாம். சனி பகவான் தங்களை காத்தருளுவார் என பல தலைமுறைகளாக நம்மும் இந்த பகுதி மக்கள் வெளியூர் செல்லும் தருணத்திலும் அருகாமை வீட்டாரிடம் தங்கள் வீட்டை பார்த்துக் கொள்ள சொல்வதில்லை. பணம் பொருள் எல்லாவற்றையும் அவ்வாறே விட்டுச் செல்கின்றனர்.

அதனையும் தாண்டி யாரவது திருட முற்பட்டால் அவர்கள் அந்த சுற்று வட்டாரத்தை கடக்கும் முன் ரத்த வாந்தி எடுத்து இறக்கக்கூடும். மேலும் பலர் தொடர் உபாதை, புத்தியிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாய் சொல்கிறார்கள். முக்கியமாக ஏழரை சனி பிடித்து மிக கடுமையான காலத்தை அனுபவிக்கக்கூடும்.

வீடுகளுக்கு மட்டுமல்ல கழிவறைக்கு கூட கதவுகளை பயன்படுத்தாமல் துணியால் ஆன திரையை மட்டும் உபயோக்கிறார்கள். வணிக நிறுவனங்கள், கடைகளுக்கும் கதவுகள் கிடையாது.

கலியுகம் தொடங்கிய சமயத்தில் ஆற்றில் பெருகிய வெள்ளத்திற்கு பிறகு பெரிய கருங்கல் ஒன்று ஆற்றுப்படுகையில் தென்பட்டுருக்கிறது. மக்கள் ஒரு குச்சியை கொண்டு கல்லை குத்த அதிலிருந்த ரத்தம் வந்ததாகவும் உடனே அந்த கல்லை அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

அன்று இரவே ஊர்த்தலைவரின் கனவில் சஞ்சரித்த சனி பகவான் தானே கல்லாக வந்திருப்பதாகவும் தன்னை சுயம்புவாக நிறுவி பிராத்தனை செய்யுமாறு பணித்தார். மேலும் தான் இந்த வட்டத்தை பாதுகாப்பேன் என்றும் என் அருள் எந்த தங்கு தடையின்றி ஊரை வலம்வர வழிவகை செய்யவேண்டும் என்று ஆணையிட்டு மறைந்து போனார்.

அதன் பிறகு கல் கடவுளாகி அங்கே அவதரித்தார் சனி. அதுமுதல் அங்கிருக்கும் எந்த வீடுகளுக்கும் கதவுகள் இல்லாமல் போனது. காற்றோடு கடவுளும் வலம் வருவதாக அவர்கள் நம்பினார்கள். கேட்பதற்கு வேடிக்கையாகவும் நம்பகதன்மை அற்றதாகவும் இருப்பினும் இந்த வினோதச் சிறப்பே இந்த ஊர் கோவிலுக்கு 40,000 கணக்கான பக்தர்களை அனுதினமும் வரவழைக்கிறது.

p03wcl4z.jpg

சனிக்கோவில் எந்தவொரு மேற்கூரையும் அற்று திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கும் அதன் புகழால் கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து எந்த வித காவல் கதவுகள் அமைக்கப்படவில்லை. கருங்கல்லில் சூலாயுதமும் எதிரே நந்தியும் உள்ளது. அமாவாசை பௌர்ணமிகளில் சிறப்பு வழிபாட்டிற்காக சராசரியாக 3 லட்சம் பக்தர்கள் கூடுகிறார்கள்.

2011 ஆம் ஆண்டு யுனைடெட் கமர்சியல் வங்கி தனது ஒரு கிளையை துவங்கியது. கிராம மக்களின் நம்பிக்கையை பறை சாற்றும் விதமாக முன்னெப்பேதும் இல்லாத வகையில் ஏற்பாடுகளை செய்தது வங்கி நிறுவனம். பாதுகாப்பு பெட்டகத்தை தவிர மற்ற எதுக்கும் காப்புக் கதவுகள் கிடையாது.

அதாவது கண்ணாடியால் கதவுகள் போன்று அமைக்கப்பட்டு மின்காந்த அலைகளால் வாசல் காக்கப்படுகிறது. இந்திய அரசு விதிப்படி ஒரு வங்கி முழுமையான பாதுகாப்போடு தான் அமைக்கப்பட வேண்டும்(!). இருப்பினும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து நேரடியான கதவுகள் அமைப்படாது மக்களின் உணர்வுகளை மதிக்க விரும்புவதாக வங்கி அமைப்பு சொல்கிறது.

2015 ஆம் ஆண்டு இந்த ஊரில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த பகுதி மக்களால் இதுவரை ஒரு குற்றமும் அதிகாரப்புர்வமாக பதிவு செய்யப்படவில்லை. கதவுகள் இல்லாத ஒரே காவல் நிலையத்தின் காவல் அதிகாரிகள் இதைப் பற்றி சொல்லும் போது இறை நம்பிக்கை காரணமாக பெரும்பாலும் யாரும் குற்றங்களில் ஈடுபடுவதில்லை, எனினும் சிறு சிறு திருட்டு சம்பவங்களை ஊர்ப்பெயரின் இழுக்குக்கு அஞ்சி புகார் தெரிவிப்பதில்லை என்கின்றனர்.

p03wcl3k.jpg

முதன்முதலாக கடந்த 2010 ஆம் ஆண்டு தரிசனம் செய்ய வந்த பக்தர் அல்லது பயணியின் வாகனத்தில் 35000 ரூபாய் தொலைந்து போனது. அதேபோல் 2011ல் கோவில் பண்டிதர் ஒருவரின் வீட்டிலும் 70000 மதிப்புள்ள நகை கொள்ளை போகியுள்ளது. இவை ஊருக்கு வெளியே நடந்ததால் வழக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சாமியை மீறி இருந்தும் கதவுகள் வைத்தால் அசம்பாவிதங்கள் நடந்து விடும் என்கின்றனர். முன்னர் ஒருவர் பேச்சைக் கேக்காமல் கதவு வைத்ததாகவும் மறுதினமே விபத்திற்கு ஆளானதாகவும் சொல்கிறார்கள். சனிபகவான் தண்டிப்பார் என்ற அச்சம் இன்றும் அங்கு தழைத்திருக்கிறது.

என்னதான் 0% குற்றப்பதிவு கொண்ட கிராமமாகினும் தற்போது காலங்கள் மாறி வருகிறது. அதற்கேற்ப அந்த பகுதி வாசிகள் சிலரும் மாற நினைக்கிறார்கள். குற்றங்கள் அதிகரித்து விட்ட இந்த யுகத்தில் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்க அவர்கள் எண்ணுவதில் தவறில்லை.

புதிதாக வீடு கட்டுபவர்கள் அவர்களுக்கென கதவுகள் அமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு ஊர்மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இறைவனின் சாபத்திற்கு ஆளாவோம் என்ற கூக்குரல் தூரத்தில் ஒலிக்கிறது.

எல்லைப் பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ள ஒரு வியாபாரி கதவுகளோடு பூட்டையும் சேர்த்து பூட்டிருக்கிறார். மேலும் கழிவறைகளுக்கு கதவிட்ட இவர் அதை செய்யாமலிருப்பதில் உள்ள அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக குற்றங்கள் தழைத்துள்ள இந்த பொன் நாட்டில் தீமைகள் இல்லாத கிராமத்தை நினைத்தால் ஆதங்கமாகவும் ஆர்வமாகவும் தான் இருக்கிறது. எனினும் இன்னும் எத்தனை காலம் இந்த அறம் இங்கு காக்கப்படும் என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அதற்கான பதிலை சனிபகவான் வேறொருவர் கனவில் தோன்றி சொல்லலாம்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.