தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்

மகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர்.

ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து விளங்குபவர்களாக இருந்தார்கள். அப்போது மட்டுமல்ல யுகம் கடந்தும் தென்னிந்திய பூமி வாள் வீச்சிலும் உற்பத்தியிலும் உயர்புகழ் பெற்று விளங்கியது.

கவசத்தை துளைத்து கொண்டு செல்லும் இரும்பை விட கடிமையான தனிமனால் செய்யப்பட்ட அரிய வாள்கள் நம் வையத்தில் இருந்துள்ளன. அதிலும் அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 – 500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக்கு வாள்.

Wootz Steel எனப்படும் உலையில் உருக்கப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை எக்கு இரும்புகள்(Crucible Steel) கார்பன் அளவை மிக அதிகமாக கொண்டிருக்கும். உயர்வெப்ப உலையில் வைத்து தயாரிக்கும் முறை தமிழகத்தின் சேர மன்னர்களிடம் இருந்தது. சொல்லப்போனால் உலகிலேயே அவர்களிடம் மட்டுமே இருந்தது.

மூன்று கண்டங்கள் தாண்டிய இவை மிக உறுதியானவை அதே நேரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. நேர்த்தியான வடிவமைப்புடன் கைப்பிடிகள் அழகான வேலைப்பாடுகள் கொண்டதால் பண்டைய காலத்தில் இதன் மதிப்பு அதிகமாக இருந்தது.

புராதான தமிழகத்தின் கொடுமணல் இதன் தயாரிப்பின் மிக முக்கிய பகுதியாகவும் தெலுங்கானாவின் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையிலும் தயாரிக்கப்பட்டு  சீனா, ஆப்பிரிக்க மற்றும் மத்திய தரைகடல் நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்டிருக்கிறது.

அலெக்ஸ்சாண்டரின் இந்திய படையெடுப்பின் போது அவரை வழியனுப்பும் விதமாக தலைசிறந்த எக்கு இரும்பால் தயாரிக்கப்பட்ட தென்னிந்திய வாள்(15kg) ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. உலகில் இதுவரை அறியப்பட்ட இரும்புகளில் மிகவும் மேன்மையானது தென்னிந்திய உருக்கு இரும்புகளே என்கிறது உலக கணிமவியல் தொல் ஆராய்ச்சி.

வூட்ஸ் என்ற சொல் உக்கு என்ற கன்னட சொல் அல்லது உருக்கு என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்தது. மேலும் சில உள்ளூர் மக்கள் அந்த சொல்லிற்கு உயர் சிறப்பு வாய்ந்தது(Superior Iron) எனும் பொருள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். டச்சுக்காரர்கள் இந்த கத்தியை இந்துவாணி(Hindwani) என்ற அழைத்தார்கள்.

பல டன் கணக்கில் கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட உருக்கு வாள்கள் அன்றைய காலகடத்தில் நடந்த பெர்சியா,இரான், ஐரோப்பிய போர்களில் முக்கிய இடம் வகித்தன. அரபு மொழியில் Jawab-E-hind என அந்த கத்திகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு  உலகிற்கு இந்தியாவின் பதில் என பொருள். இறக்குமதி செய்யபட்ட வாளையும் குத்துவாளையும் வைத்திருப்பதை அவர்கள் பெருமிதமாக கருதினார்கள்.

திப்பு சுல்தான் வாள்

இந்தியாவில் நடந்த பல போர்களில் இவ்வகை வாள் முக்கியத்துவமாக இருந்துள்ளது. திப்பு சுல்தான் கல்லறையில் பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. பஞ்சாப் மன்னர்கள் வளையும் தன்மை கொண்ட வாள்களை உற்பத்தி செய்து கொண்டு போனார்களாம். போர்க்கத்தி என்றாலே நினைவுக்கு வரும் சமுராய் கத்திகளை விட இவை சிறப்புவாய்ந்தவை.

கிலிஜ்(Kilij Swords) எனப்படும் துருக்கிய வாள்கள் உலகின் வலிமையான வாள்கள் பட்டியலில் உள்ளது. இவை வூட்ஸ் இரும்புகளாலே தயாரிக்கப்பட்டவை. அவை மட்டுமல்ல உலகின் சக்திவாய்ந்த கத்திகளாக கருதப்படும் பல்வேறு ஆயதங்கள் எதோ ஒரு வகையில் தென்னிந்திய எக்கு இரும்போடு தொடர்பு கொண்டவையாக இருந்துள்ளது. கடனா என்றழைக்கப்படும் இந்து புராண கத்திகளை விட வலிமையானவை.

பிற்காலத்தில் உருக்கு எக்கு தயாரிக்கும் தொழிற்நுட்பம் மெல்ல அரபு நாடுகளுக்கு பரவியது. கொடுமணம் உள்ளிட பல இடங்களில் இருந்த தயார் செய்யப்பட்ட எக்குகள் மலபார், ஆந்திரா கடற்கரை வழியாக கப்பல் கப்பலாக அரபு தேசங்களுக்கு பயணப்பட்டது. அங்கே டமாஸ்கஸ் என்ற இடத்தில் போர் வாள்கள் தயார் செய்யப்பட்டு உலகமெங்கும் பரவியது.

இந்திய தொழிற்நுட்பத்தை கண்டுகொண்ட சிரியா நாட்டவர் டமாஸ்கஸில் பெரும் சந்தையை உருவாக்கினர். அதனாலே டமாஸ்கஸ் கத்திகள் என உலகம் அதனை அறிந்தவாறு உள்ளது. 16 நூற்றாண்டுகளில் நெதர்லாந்துக்கு மட்டும் 1,50,000 பவுண்ட் உருக்கு இரும்புகள் அனுப்பபட்டன. அரபு நாடுகள் வழி நெப்போலியன் காலத்தில் பிரான்ஸ் சென்றடைந்த உருக்கு இரும்புகள் அங்கு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தபட்டு பல வலிமையான கத்திகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக இப்படியொரு வலிமைவாய்ந்த ஆயுதத்தை பற்றி அறிந்திராத ஐரோப்பிய தேசங்கள் அதன் திறன் கண்டு ஆச்சரியமடைந்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்(1670-1681) இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி பொறுப்பு கிடைத்ததும் சக்தி வாய்ந்த இந்த ஆயுதங்களை தமக்குரியதாக மட்டுமே மாற்றிக்கொள்ள விழைந்தனர்.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1851 ஆண்டு நடைபெற்ற லண்டன் கண்காட்சியில்(The Great Exhibition) இடம்பெற்ற இந்திய வாள்கள் தாம். பல இந்திய மன்னர்கள் தங்கள் பேரரசின் அடையாளமாக வூட்ஸ் கத்திகளை ஆங்கிலேயர்களுக்கு பரிசளித்தனர். 1862ம் ஆண்டு அதே லண்டனில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியிலும் அரசர்கள் அனுப்பி வைத்த போர்க்கத்திகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

17-19 நூற்றாண்டு முழுதும் பிரிட்டிஷ் அரசு இதனை ஆய்வு செய்தது. ஆங்கிலேய பேராசை ஆதிக்கத்தின் போது இந்தியாவிலிருந்த அத்தணை உருக்கு ஆலை கூடங்களும் முழுவதுமாக தடை செய்யப்பட்டன. அதன் தொழிற்நுட்பம் முழுவதுமாக வழக்கொழிந்து ஆதியறியாது அழிக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காரணமாக இந்த அபூர்வ வாள்கள் புதைந்து போயின. தற்போது உலகில் இரான், துருக்கி, லண்டன் போன்ற ஒரு சில அருங்காட்சியங்கள் தவிர வேறு எங்கும் இந்த அரிய வகை வாள்கள் காண கிடைப்பதில்லை.

உங்களில் எத்தனை பேர் கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற ஆங்கில தொலைக்காட்சி தொடரை பார்த்தீர்கள் என நான் அறியேன். கற்பனை உலகத்தில் உருவாக்கப்பட்ட அந்த கதையில் உலகின் வல்லமை வாய்ந்த ஒரு உறைவாள் முக்கிய கதாபாத்திரங்களிடம் இருக்கும். அதனை கொண்டே மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்த அவர்கள் தப்பிக்க இயலும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தழுவபட்ட கதைகளை கொண்ட கேம் ஆப் த்ரோன்ஸ் வலேரியன் கத்திகள் என குறிப்பிடப்படும் அரிய பொக்கிஷத்தை இந்திய கதைகளில் இருந்து எடுத்து சென்றிருக்கிறது.

Zschokke என்ற ஆராய்ச்சியாளர் கிடைக்கப்பெற்ற பல்வேறு கத்திகளை ஆராய்ந்து இப்பொழுதிருக்கும் கத்திகள் முழுமையான வரைமுறையில் உருவாக்கப்பட்டதில்லை எனவும் Fe3C அணுக்கள் அவற்றில் உருவாவதில்லை என்கிறார். அதாவது சரியான வெப்பநிலை, பதம், தாதுக்கள் சேர்த்து மட்டுமே தயாரிக்கபட்ட இவற்றின் சரியான கலவை அளவீடு இப்போது உயிர்வாழும் யாருக்கும் தெரியாது.

ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இதன் தொழிற்முறை வம்சவளிக்கு மட்டுமே பகிரப்பட்டது. ஒரு காலகட்டத்தில் அத்தியாவசி தாதுத்துகள்(வெண்ணகம்) கிடைக்கபெறாமல் போக இதன் ரகசியம் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே அழிந்து போகியிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்திய உருக்கு முறையின் அழிவுக்கு ஓரளவிற்கு ஏற்குபடியான காரணமாக இருப்பினும் உண்மை இன்னும் மர்மமாகவே உள்ளது.

இவை வெறும் போர் ஆயுதமாக மட்டுமில்லாமல் நவீன அறிவியல் வளர்ச்சியிலும் தனிமவியல் கோட்படுகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாகின. தாதுக்களிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் முறையிலும் பயன்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள் உலோகவியலின்(Metallurgy)  இன்றைய ஆராய்ச்சி பயன்பாடுகளில் வூட்ஸ் கத்திகள் பெரும் பங்காற்றியதாக பாராட்டுகின்றன. ரசவாதத்திற்கு இணையான ஒரு படைப்பாக அதிசயிக்கிறார்கள்.

சாதாரண கார்பன் இரும்போடு ஒப்பிடும் போது 1-2% அதிக கார்பன் வூட்ஸில் இருக்கிறது. ஜெர்மன் அறிவியலார்கள் 1991 ஆம் கிடைக்கபெற்ற கத்தியை ஆராய்ந்து அவை கார்பன் நானோகுழாய்களால்(CNT) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். எனவே 2000 வருங்களுக்கு முன்பே நானோ தொழிற்நுட்பம் பயன்படுத்தாக சொல்கிறார்கள்.

இன்றைய நவீனத்தால் பல வலிமையான கத்திகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் நிலைப்புத்தன்மை இந்திய உருக்குக்கு நிகராக வருவதில்லை.  சில உலோவியலார்களால்(metallurgists) நெருங்கிய போதும் தொன்மைக்கு இணையான அதே கட்டுமான நுட்பத்தில் தென்னிந்திய வாள்களை யாவராலும் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உருவாக்க முடியவில்லை, ஆராய்ச்சிகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

References:
http://materials.iisc.ernet.in/~wootz/heritage/WOOTZ.htm
http://www.tms.org/pubs/journals/jom/9809/verhoeven-9809.html
https://www.tf.uni-kiel.de/matwis/amat/iss/kap_a/backbone/ra_4_1.html
https://www.wired.com/2008/01/nanotech-used-2/

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.