Image default
Featured Travel

போய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்

Photo Courtesy : Google, Flicker, 500px.

ஒருசேர விடுமறை தினங்கள் அமைய இம்முறை கன்னியாகுமரி சென்று வரலாம் என புறப்பட்டோம். நாகர்கோவில் செல்லும் பேருந்து கிடைத்தது. வடதமிழகத்தை சேர்ந்தவர்கள் நிச்சயமாக வைகையை கடக்காமல் நாகையை அடைய இயலாது.

வற்றிய வைகையை கண்டபோதெல்லாம் வாடிவிட்டு வயல் கொழித்த பரப்பினிடையே வட்டமிடும் காற்றலைகளை ரசித்தபடி நாகர்கோவில் வந்தடைந்தோம்.

பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் என அறியப்பட்டாலும் நாகை தான் முக்கிய இணைப்பு சந்தி, மேலும் அதிகாரப்பூர்வ தலைநகரம். நாகையிலிருந்து குமரி முனையை அடைய 20 கிமீ தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது.

முகிலாடும் மலைகள் சூழ்ந்து வழிநெடுக ஆறும் வயல்களும் விழிக்கு விருந்தை தந்தது. தென்னை சூழ்ந்த தாமரை குளங்களை பார்க்கையில் மனச்செருக்கு உண்டானது.

கன்னியாகுமரி மாவட்டம் குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல் என நால்வகை நிலங்களும் ஒருசேர அமைந்த வளம்கொழிக்கும் நாஞ்சில் நாடு என படித்தது புரிந்தது.

நாம் செல்லும் அதே கடலை நோக்கி தான் ஆறுகளும் நம்முடன் பயணிப்பதை நினைத்தால் வியப்பாக இருந்தது.

அகஸ்தியாபுரம் ஊர் கடந்து சென்றது. முக்கால ஞானியான அகத்தியர் இங்குதான் வாழ்ந்தாதாக ஒரு ஐதீகம் உண்டு. அனுமன் சிரஞ்சீவ் மலையை சுமந்து கொண்டு பறந்தபோது சிதறிய மலையும் இங்குதான் உள்ளதாம்.

கன்னியாகுமரியை மேலும் நெருங்கிய உடனே தேவாலய சாலைகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 46% கிறித்தவர்கள் உள்ளனர்.

மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலம் முதலே கல்விநிலை மேலோங்கி இருந்ததால் தமிழகத்தில் கல்வியை பொருத்தமட்டில் குமரியே முதலிடம். கல்வி மேலோங்கி இருப்பதால் சாதி வழக்கங்களும் சத்தமிடுவதில்லை இங்கே.

பேருந்து நின்றதும் முதல் வேலையாக சூரிய உதயத்தை பார்க்க ஓடிக்கொண்டிருக்கும் மராத்தானில் நானும் இணைந்து கொண்டேன். பகவதி அம்மன் கோவிலின் இடது பக்க திசையில் எல்லோரும் குழுமி நின்றோம்.

திருவள்ளுவர் உறங்கிக் கொண்டிருந்தார்! அருகில் இருந்த விவேகானந்தர் பாறையில் தான் பகவதி அம்மன் சிவனை நோக்கி தவம் புரிந்து அவரைச் சேர்ந்தாக புராணம் கூறுகிறது.

அம்மனின் தல புராணத்தில் இருந்து தான் இவ்விடத்திற்கு கன்னியாகுமரி எனும் பெயர் வந்ததாக சொன்னார்கள். விவேகானந்தர் பாறையின் ஆதிப்பெயர் கூட பாதப்பாறை என்று தான் இருந்தது.

அருகிலிருந்தவரின் தொலைபேசி உதயனை படம்பிடிக்க தயாரானது , அதன் வழியே இன்னும் பல்நூறு தொலைபேசி கண்கள் காத்து கொண்டிருந்தன.

தீபகற்ப தேசத்தின் ஆதிப்புள்ளியில் நின்றுக் கொண்டு ஆதவன் அவதரிப்பதை நாங்கள் கண்டு ரசித்தோம். சிவப்பு கோள ஒளிபரவ தேகம் சிலிர்த்தது.

குளித்து எழும் குமரியின் சிவந்த மேனி கண்டதும் வண்ணமேறி ஆனந்த சலனமடையும் கடல் நம் மனதை ஒத்து அலையாடியது. கொஞ்சம் வளர்ந்ததும் கன்னி அவள் எங்கள் முகத்தில் மஞ்சள் தெளித்தாள்.

கொஞ்சம் உயரம் குறைவான் பெண்கள் அருகிலிருந்தவர்களின் தொலைபேசி படத்தில் பகலவனை கண்டு ஆசுவாசபட்டனர். அப்பாவின் தோளில் குழந்தைகள் குதுகலித்தனர்.

இயற்கையின் அற்புதத்தை ரசித்த சிலர் தவிர மற்றவர்கள் அடுத்த இலக்கை நோக்கிய ஓட துவங்கினர். அவர்களுக்கு குறைவான கால அவகாசமே இருந்தது.

விவேகானந்தர் இங்கு வந்தபோது பகவதி அம்மனை வழிபட்டுவிட்டு கரையில் இருந்து நீந்தி சென்று இப்போது கப்பல் சென்றடையும் அந்த பெரிய பாறையின் மீது அமர்ந்து தவம் செய்தாராம்.

அம்மனை வழிபட்ட பின்னரே 1893 ல் அவர் அமெரிக்கா சென்று புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவை ஆற்ற பயணப்பட்டார். பின்னாளில் 1971 ஆண்டு இந்தியாவின் கடைசி பாறையில் ஆன்மிக சான்றாக மணிமண்டபம் எழுப்பப்பட்டது.

விவேகானந்தர் பாறையை அருகில் சென்று பார்க்க வள்ளுவனை போல வெகுகாலம் வரிசையில் நிற்க வேண்டிருந்தது. படகு பயணமும் பாறைச் சாரலும் நெகிழ வைத்தது.

அஜந்தா வாசல் போல் மண்டபத்தின் வாயில் இருந்தது. பாறையில் செதுக்கப்பட்டிருந்த கோட்டை போன்ற மண்டப வடிவமைப்பு தோன்றியது. மெல்ல விவேகானந்தர் வாழ்வை பற்றிய பல குறிப்புகள், புகைப்படங்கள் எல்லாம் பார்த்துவிட்டு,

வான்புகழ் கொண்டவனை வாய்பிளந்து கண்டேன். அறத்துப்பால் மீதேறி அகிலத்தை அவர் பார்வையிட்டு கொண்டிருந்தார். 38 அடி உயரமுள்ள பீடம் அறத்துப்பாலையும் 95 அடி உயர சிலை இன்பம் மற்றும் பொருட்பாலை குறிக்கிறது.

இங்கிருக்கும் பெருநாவலன் என்னை விட இளையவன். ௨௦௦௦ ஆண்டு சனவரி 1 தான் சிலை நிறுவப்பட்டது. உலகில் இதுபோல் கருங்கற் பாறைகளால் ஆன சிலை வேறில்லை. 130 அடி வெற்றிடம் கொண்ட இச்சிலை எல்லா இயற்கை சூழலிலும் நிலைத்திருக்கும் ஸ்திரத்தன்மை உடையது.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

என்னதான் பெரிய மகிழுந்து வாகனத்தில் வந்தாலும் அதனை கடலில் ஓட்ட முடியாது என அவர் அன்றே சொல்லியதை எண்ணி நகைப்பு வந்தது.

காந்தி 1925,1937 என இருமுறை இங்கு வந்துள்ளார். என்றும் அழியாத கன்னித்தன்மை கொண்டவள் என முக்கடலை கண்டு நெகிழ்வராம்.

அவருக்காக கடற்கரையில் கட்டப்பட்டுள்ள காந்தி மண்டபத்தில் தான் அவரது அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. வருடாவருடம் அக்டோபர் 2 ஆம் தேதி சூரிய கரணங்கள் மண்டப துளை வழியே அஸ்தி வைப்பட்டிருந்த இடத்தை தொடும்.

அருகிலேயே கர்மவீரருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது இங்கு வருகை தரும் வட மாநிலத்தவருக்கு அவரை பற்றிய அறிமுகத்தை தந்து கொண்டு இருக்கிறது.

காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் தான் காமராசர் இறந்தார். இரு மண்டபங்களும் கடற்கரையை ரசிக்கும் வண்ணம் மாடி கட்டமைப்புகளோடு சிறப்பாய் உருவாக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம், அமைதியை கடை பிடித்தல் நலம்.

சோம்நாத் கோவிலை ஒத்தது போல மண்டபத்தில் இருந்து கடற்கரை செல்லும் வழியை மார்க்கெட் கடைகள் ஆக்கிரமித்திருந்தன. முக்கடல் சங்கமமாக அறியப்படும் இடத்தில் இறங்கி விட்டு அருகில் கடலில் இறங்கி கரைய தொடங்கினேன்.

திருச்செந்தூர் கடலில் கூட அங்காங்கே பாறைகள் அடிபடும், குமரிக் கடலிலோ பாறையில் தான் நடக்க வேண்டிருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பில் ஆனந்தகூத்தாட்டம் போட்டுவிட்டு அலை மோதி தெறிக்கும் பாறைகளின் மீது நின்று மாறிமாறி புகைப்படம் எழுத்துக் கொண்டோம்.

கவனமாக இருந்ததால் காலில் ஏதும் அடியில்லை. அதற்குள் அஸ்தமான நேரம் வந்துவிட்டது. கடற்கரையில் குளித்துவிட்டு குழுமி நின்றவர்கள் மேற்கை நோக்கி தொலைபேசி படத்தை திருப்பி வைத்திருந்தனர்.

கொஞ்ச தூரம் நடந்து சென்றிருந்தால் காட்சிப் கோபுரம் மீதேறி ரசித்து இருந்திருக்கலாம். ஆறஅமர கடல் இரவில் கலக்க சூரியன் அரேபிய இரவுகளை சந்திக்க சென்றுவிட்டதாக எண்ணிக் கொண்டு கரை ஏறினோம்.

ஓய்வு எடுத்துவிட்டு அருகாமையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வந்தேன். கடற்கரை மணலில் வெகுநேரம் அமர்ந்து பொழுதை ரசித்துக் கொண்டிருந்தேன்.

பயணம் ஒரு சிறந்த ஆசான் என நினைக்கும் அவளை நித்தியமாய் உடன் அழைத்து வந்திருக்கலாம் போன்றிருந்தது.

அந்நேரம் முக்கால் நிலவு முழித்துக் கொண்டிருந்தது, யாரும் இல்லை என்ற நினைப்பில் அலைகள் சத்தமாக பாறைகளை தழுவிக் கொண்டு சரணங்கள் எழுப்பின, முத்தச் சாரல் முகத்தில் தெரித்தது.

ஒரு சின்ன மேகமழை தூவி நின்றது. “ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ” எனும் வைரமுத்து வரிகள் நினைவில் வந்துபோனது.

கன்னியாகுமரி பெயர் பகவதி அம்மனால் வந்தது என சொன்னேன் அல்லவா, அதற்கு பின்னணியில் மற்றொரு பெயர்க்காரணம் உள்ளது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக்கண்டம் கடற்கோளால் ஆழியில் மூழ்கிய போது உயிர்பிழைத்த பெண் ஒருத்தி அலைகளில் மிதந்து பாதப் பாறையில் வந்து சேர்ந்தாள்.

ஒரு பெருங் கண்டமே கடலில் முழ்கிப்போக தன் காதலன் மட்டும் தனக்காக வருவான் என எண்ணிக் கொண்டே அவள் தனித்து நின்றிருந்தாள். எத்தனை நிலவையும் சூரியனையும் அவள் பார்த்திருப்பாள்.

காரிருள் விலக்கி இவள் கரங்களை சேர நாவாய் கொண்டு தன் துணைவன் வருவான் என காத்துக் கொண்டிருந்த குமரியின் ஏக்கம் நினைவுகளில் தழும்பிக் கொள்ள கலங்கரை விளக்க ஒளி நினைவுப் படுத்தியது காலம் கடந்து விட்டதென.

Related posts

டெல்டா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதா? பயங்கர சத்தம் எதனால்?

Paradox

அறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை

Seyon

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு

Seyon

2 comments

Balaji April 23, 2018 at 1:52 am

அழகான நடை. ஒரு எழுத்து பிழை கண்டேன். ‘தோளில்’ எனபதற்கு பதிலாக ‘தோலில்’ என்று அச்சாகியுள்ளது.

Reply
shan April 25, 2018 at 12:26 pm

திருத்ததிற்கு நன்றி

Reply

Leave a Comment