லென்ஸ் – திரைப்பார்வை

லென்ஸ் – திரைப்பார்வை

தமிழ் திரையுலகம் அவ்வப்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படங்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும் பாலியல் தொடர்பாக குறிப்பிடதக்க வகையில் பதியபட்ட படம் அதிகமில்லை. அப்படியே வெளியானலும் அவை கேளிக்கை அல்லது ஆக்‌ஷன் படமாகவே காட்சிபடுத்தப் படுகின்றன.

சமீபத்தில் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் அதே நேரம் “லென்ஸ்” திரைப்படம் நம் கண்களுக்கு தெரியாமலே திரையரங்குகளில் இருந்து ஓடி மறைந்துக் கொண்டிருக்கிறது.

மலையாளம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டு பல திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம், மக்கள் மறைமுகமாக பார்க்கச் செல்லும் படமாக மாறி வருகிறது.

LENS is A must watch adult film என பலதரப்பில் இருந்து வரவேற்பு வருகிறது. தி இந்து விமர்சகர் A porn with silver spoon என கொண்டாடுகிறார்.

வெற்றிமாறன் வெளியிட்டு பிரபல படுத்தினாலும் திரை அரங்குகளில் குறைவான காட்சி இடப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் சென்று சேரவில்லை என்பதே உண்மை.

மற்றொன்று ‘A’ கிரேட் அளித்திருப்பது. அதன் காரணம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிறந்த கதையாக இது இருப்பது தான்.

இப்படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் பேட்டி ஒன்றில் சொன்னதை போல A என்றால் அடல்ட் என்பதிற்கு பதில் அசிங்கம் என நினைக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும்.

இணைய அத்துமீறல் வழியாக பாதிக்கப்பட்டு தன் வாழ்வை தொலைத்த ஒருவன் அதே இணையத்தின் மூலம் எப்படி பழி வாங்குகிறான் என்பதே கதை.

அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கோலோச்சுவதை எடுத்துக்காட்டி கடைசி வரை இமை மூடவிடாமல் விறுவிறுப்பாக திகிலடைய செய்கிறது திரைக்கதை.

இந்த படம் தொடங்கிய சில நிமிடங்களிலே நம்மை குற்றவாளி கூண்டில் நிக்க வைத்து விட்டுதான் மற்ற காட்சிகள் நகர்கின்றன. கதிரின் ஒளிப்பதிவு நம்மை அந்த அறைக்குள் ஒளிந்து கொள்ள வைக்கிறது.

இத்துணை வருடங்களாக நாம் பகிர்ந்த ஆபாச வீடியோக்களையும் செக்ஸ் சேட்டிங்கையும் கொஞ்சம் கூட சமரசம் செய்யாமல் நம் முகத்தில் சாட்டை அடித்தாற்போல காட்டுவது கூச செய்யலாம்.

ஸ்கைப், வாட்சப், பேஸ்புக் பயன்படுத்தாத தலைமுறை தயவு செய்து பார்க்க வேண்டாம். இப்படி ஒரு அந்நிய உலகமா என நீங்கள் வெறுக்கக் கூடும்.

மிக முக்கியமாக இப்படத்தின் இடையில் வரும் ஒரு பெண்ணின் மரண வாக்குமூலம் நம்மை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விடுகிறது.

வாய்மொழி இல்லா அவ்வசனங்கள் ஒவ்வொரு பெண்ணின் வலியையும் உணர்த்துகிறது. அவள் உடலை கிழிந்தெறிந்து அந்த காகிதங்களை நம் முகத்தில் வீசி செல்கிறது அந்த காட்சி.

அந்த காட்சியில் ஊமையானது அந்த கதாபாத்திரம் மட்டுமல்ல, மொத்த திரையரங்கமும் தான்.

படத்தை பற்றி இன்னும் பேசும் முன் இணைய உலகை கொஞ்சம் பார்த்துவிடுவோம். இணையத்தில் நாம் இலவசமாக பார்த்து ரசிக்கும் ஆபாச வீடியோக்கள் அங்கே சாதாரணமாக பதிவேற்ற பட்டதில்லை.

ஆபாச இணைதளம் ஒன்றில் மெம்பர் ஆகிவிட்டு அதில் வீடியோக்களை பதிவேற்றி விளம்பரம் மூலம் கிடைக்கும் லாபத்தை இவரும் பங்கிட்டுக் கொள்கிறார்.

1980 பின்னான அசுரத்தனமான இணைய வளர்ச்சியில் ரகசிய கேமரா மற்றும் திருடப்படும் வீடியோக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையை விட அதிகரித்து வருகிறது.

இதில் இடம் பெற்றிருக்கும் நபர்கள் தங்கள் அந்தரத்தை உலகம் பார்க்கக் கூடும் என்று அறிந்திருப்பதில்லை, முக்கியமாக பெண்கள்.

பெரும்பாலும் பெரிய ஹோட்டல்கள், துணிக்கடையில் ஆடை மாற்றும் அறைகளில் அந்த நிறுவனங்கள் இது போன்ற தவறை செய்வதில்லை. மாறாக அங்கு பணிபுரியும் யாரோ ஒருவரின் தவறால் இவை நடக்கலாம்.

நமக்கு பிடித்தமானவருடன் உறவு கொள்ளும் போது அதனை காட்சி செய்து பின்னர் ரசிக்கலாம் என எண்ணுவது மனித வரலாற்று தவறுகளில் ஒன்று.

முக்கியமாக பெண்களே இவ்வகையான வீடியோக்களில் அதிகம் பாதிப்படைவது. ஏனெனில் எடுப்பது ஆணாக்கத்தான் இருக்கும். மேலும்

சமூக வலைதளங்கள் வழியாக வீடியோ சாட் செய்வது, அதில் ஆடையை நீக்குவது. தனது அந்தரங்கத்தை ஆபாச காட்சியாக எடுத்து அனுப்புவது என ஏராளமாக தவறிவிடுவது பெண்களே.

அந்த ஆண் கணவர், காதலன், நண்பன் என யாராக இருப்பினும் அவர் அதனை ஆபாச தளத்தில் பதிய பெருவாய்ப்பு உள்ளது.

ஆண்கள் சபலப்பட்டு பொது இடங்களில் அத்து மீறுகிறார்கள் என்றால் அதற்கு ஒத்துழைப்பு தரும் பெண்கள் நிலையோ மோசம், இதனால் அசிங்கப்பட போவதும் அவர்களே.

பார்க், நெட் கபே, மால்ஸ், கடற்கரை என எண்ணற்ற வகையான வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. Hidden camera, spy camera, Cctv என யாரும் மறைய வாய்ப்பில்லை.

இன்றைய இணைய உலகில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டுக்கு பின் எதிலும் ரகசியம் பாதுகாப்பு என்று எதுவுமே கிடையாது.

நாம் பகிர்ந்துக் கொள்ளும் ஒவ்வொரு டேடாவும் யாரோ ஒருவரால் திருப்படக்கூடும். சில நேரங்களில் ஹேக்கர்ஸ், நண்பர்கள் மட்டுமில்லாமல் நீங்களே அதனை தவற விட்டிருக்கலாம்.

லேப்டாப், செல்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை எடுப்பது ஒன்றும் பெரிய விஞ்ஞானம் இல்லை. மிக சுலபமாக நிகழ்ந்து விடக்கூடியது.

லென்ஸ் படத்தில் இது போன்ற ஒரு அத்துமீறல் எப்படி பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் காணலாம்.

இது போன்ற வீடியோக்களை மற்றவரின் தனிப்பட்ட ஒரு வாழ்வை பதிவேற்றம் செய்து இன்பம் காணும் நபர் இரக்கமில்லாமல் அல்லல்படும் கதாபத்திரத்தில் ஜெயபிரகாஷ் நடித்திருக்கிறார்.

எல்லோரும் தானா பார்க்கிறார்கள் என நம்மை நியாப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் நம் மனதை பிரதிபலிப்பதாக இருக்கும். ஏனெனில் நம் எல்லோரும் அந்த தவறை செய்கிறோம்.

ஒரு முறை இணையத்தில் பதிவேறிய ஒரு காட்சி பதிவை முற்றிலுமாக அழிப்பது என்பது நெற்றிக்கண்ணை திறந்தாலும் சாத்தியமில்லை.

கடந்த 2016 ஆண்டு இத்தாலியில் ஒரு பெண்ணின் ஆபாச வீடீயோ இணையத்தில் வைரலாக பரவி மீமாக மாறி கடைசியில் அவள் தற்கொலை செய்துக் கொண்டு இறந்துவிட்டார்.

ஒரு கணவன் மனைவி அல்லது காதலர்கள் வீடியோ இணையத்தில் அரங்கேறும் போது அதன் பார்வையாளர்கள் யாரோ ஒருவராய் இல்லாமல் உறவினாராய் இருந்தால் ஆவது என்ன.

அவர்களை சுற்றி உள்ளவர்களின் கண்கள் அவர்களை எப்படி பார்க்கும். தன் குழந்தை தாய் தந்தையின் ஆபாச காட்சியை பார்க்கும் நிலை வரும் என்றறிந்து வாழும் வாழ்க்கைக்கு என்ன பெயர்.

கடைசியாக நம்மில் பெரும்பாலும் பார்வையாளர்களாக ஒதுங்கி செல்வதுதான் வழக்கம், எல்லா சமயங்களிலும்.

இணையத்தில் சென்று தேடுவது குறைந்து வாட்சப் வழியாக பகிர்ந்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. இது எவ்வகையான அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் என்று அறியாமலே அதனை ரசித்து சுய இன்பம் கொள்கிறோம்.

பிட்டு படம் எல்லோரும் தானே பார்க்கிறார்கள் என்று சர்வசாதரணமாக பகிர்ந்து செல்லும் இவ்வகையாக படங்கள் எத்துணையோ உறவை உயிரை பறித்திருக்கலாம்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணை செய்தி ஊடகங்கள் சில வாரங்கள் மட்டுமே மீண்டும் வன்புணரும். ஆனால் கோடி கண்கள் இணையத்தில் அவள் உடலை அனுதினமும் கற்பழித்துக் கொண்டிருக்கின்றன.

வாட்சப்பில் யாரோ ஒருவரின் அந்தரங்கத்தை பகிரும் போது படத்தில் வீசி எறியப்பட்ட காகிதங்கள் உங்கள் மனசாட்சியை கிழித்தெறிந்து குற்றயுணர்வுக்கு ஆளாக்கினால் அதுவே படத்தின் வெற்றி.

Add comment