மாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்

மாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்

மரபு மறந்து மரபணு மாற்றம் செய்து நோயை தேடி வாழும் நாம், மரபை சிறிது மறவாது திரும்பி கொண்டு வந்தால் என்ன ஆகும். வாங்க பார்க்கலாம்…

“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்தின் போது உண்ண வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும்.

காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்

Add comment