நாகமாணிக்கம்

நாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்

நாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன.

எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை, நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர் கேள்வி பட்டதாய் சொன்ன கதையினாலோ நாம் அறிந்திருப்போம்.

இந்த கதைகளின் பொது அம்சமான வரும் நாகம் 100 வருடங்கள் தங்கள் விஷத்தை உபயோக்கிக்காது, ஏதும் யாரையும் தீண்டாமல் அது காத்து வரும் அதன் விஷம் காலப்போக்கில் நாகரத்தினமாக மாறும். சுனை அருகே வெறும் பச்சை தவளைகளை மட்டுமே உண்டு இது உயிர் வாழும்.

ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட நாகங்கள் சாதுக்கள் போல முதுமை என்பதே கிடையாது, சுமார் 110-150 ஆண்டுகள் வரை வாழக்கூடியன.

நாகமாணிக்கம்.jpg

கண்கூசும் அளவிற்கு பகலில் கூட மிக பிரகாசமாக மின்னும் அந்த ரத்தினத்தை அமாவாசை இரவில் கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் வேட்டையாடும். இது போன்ற சமயத்தில் தான் நம் கதைகளில் வரும் நபர் மாட்டின் சாணத்தையோ அல்லது பொடியையோ அந்த நாகமணியின் மீது வீசுவார்.

நாகம் சற்று குழம்பி அவ்விடத்தை விட்டு சென்றபின் மரத்தின் மேல் மறைவாக இருந்த நாயகன் நாகமணியை கைப்பற்றிக் கொள்வான்.

வராகமிகிரரின் பிருகத்சம்கித புராணத்தில் நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான் என சொல்லப்பட்டுள்ளது.

இது சிவனின் அருளாகவும் கருதப்படுகிறது. வாசுகி நாகமும் ஆதிசேஷனும் தங்கள் தலையின் மேல் நாக முத்துமணியை ஒரு ஆபரணம் போல கொண்டிருப்பார்கள். வாசுகியும் தட்சஜனுமே நாக வம்சத்தை தோற்றுவித்தவர்கள்.

அக்னி புராணத்தில் ஏழு லோகங்கள் குறிப்பிடப்பட்டு பாதாள லோகத்தில் சர்பங்கள் வாழ்வதாகவும் விஷ்ணுவே சேஷ நாக வடிவில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. சேஷ நாகம் நாம் வாழும் பூமியை தன் தலையில் சுமப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயற்கையில்,

பொதுவாக நாகங்களின் சராசரி வாழ்நாளே 20-30 வருடங்கள் தான். அது மட்டுமல்லாது இந்தியாவில் 220 வகைகளில் 50 வகை பாம்புகள் விஷம் கொண்டவை. இவை தம்மை தற்காப்பதை விட வேட்டையாடுவதற்கே அதிகமாக விஷத்தை பயன்படுத்துகின்றன. இதிகாசங்களில் வருவது போல் எந்த நாகத்தாலும் வாழ இயலாது.

நாகம்

அதற்கு முன்னர் நாகத்திற்கும்(Cobra) சர்பத்திற்கும்(Snake) உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிய வேண்டும். பாம்புகளை சர்பம் என்றே அழைப்பார்கள். சர்பங்கள் என்பவை பொதுவாக ஊர்வன இனத்தை சேரும், தரையிலோ அல்லது தண்ணீரிலோ ஊர்ந்து மட்டுமே செல்லும்.

ஆனால் நாகங்கள் தங்களது கழுத்தை நிமிரித்து பாவனை காட்டும்(Hood), அதாவது படம் எடுக்கும். தனக்கு ஆபத்து வரும் வேளையில் நாகங்கள் படம் எடுக்கின்றன, உஸ்(Hissing) என சத்தமிடுவது எச்சரிக்கையின் இன்னொரு பரிமாணம். நாகங்களுக்கு சிறந்த உதாரணம் நல்ல பாம்பு(Indian Cobra) தான்.

தங்களது கழுத்திற்கு அருகே உள்ள சதை பகுதியை கன்னம் போல விரித்து காட்டி (வெளவாலின் முன்னங்கை பகுதியை போல) பயமுறுத்துகின்றன, ஊரும் போது அது மீண்டும் உடலோடு சாதரணமாக சேர்ந்துக் கொள்ளும். பெரும்பாலன உயிரினங்கள் இதனை ஒரு அச்சுறுத்தலின் அறிகுறியாகவே கருதுகின்றன.

நமது இந்து புராண இதிகாசங்களிலும் புவியில் வாழ்பவற்றை மட்டுமே சர்பங்களாக குறிப்பிட்டிருப்பார்கள். நாகங்கள் புனிதமிக்கவை யாகவும் தேவலோகத்தை சேர்ந்ததாகவுமே சொல்லப்பட்டிருக்கிறது. வாசுகி, தட்ஜகன் போன்ற நாகங்கள் சர்பங்களுக்கு தலைவனாய் இருப்பது போலவும்,

தவசக்தி கொண்டு மனித உருவிற்கு மாறக் கூடியவையே நாகங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இச்சாதாரி நாக தேவதை கதைகளும் கோவில் சிற்பங்களுமே இதற்கு சான்று. மேல் பாதி மனித உருவிலும் இடுப்புக்கு கீழ் நாக ரூபத்திலும் இவை காட்சிதரும்.

கடவுள்

இச்சாதாரி நாகங்கள் பல கற்பனை கதைகளில் வந்துள்ளது. நீயா, நாகின் போன்ற படங்கள் உட்பட நாகராஜ் என்ற காமிக்ஸ் கதைகளில் கூட இவை உண்டு. இவை எவ்வித உருவத்திற்கும் மாற கூடியவை. நாக லோகத்தின் ஆசியை பெற்றவை.

மகாபாரத்தில் அர்சுனனின் இரண்டாவது மனைவியான, கங்கை நதியின் நாககுலத்தை சேர்ந்த உலுப்பி என்பவளின் கதையிலும் நாகமாணிக்கம் குறிப்பிடப்படும். அஸ்வமேத யாகத்தின் போது போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது மாணிக்கத்தை கொண்டு வந்து உயிர் கொடுப்பாள் உலுப்பி.

அண்டார்டிகாவை தவிர்த்து உலகின் எல்லா பாகங்களிலும் பாம்புகள் உள்ளன. புராணத்தை விடுத்து உண்மையை விளங்க பார்த்தாலும் பூமியில் இல்லாமல் மிக உயர மலைப்பிரதேசங்களில் வாழும் நாகங்களை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

இவ்வகை நாகங்களே நாகரத்தினத்தை வைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவையாக வேத சமயத்தவர் கருதியிருக்கலாம். ஆசிய/இந்திய மலைகளில் 6000 அடி உயரத்திலும் நாகங்கள் வாழ்வதை ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்தியுள்ளன.

நாகமணியை இந்தியர் அன்றி வெளிநாட்டினரும் தேடியுலவ காரணம் உள்ளது. ஆப்பிரிக்க வைர சுரங்கங்கள் கண்டுபிடிக்க படும்வரை இந்தியாவில் மட்டுமே வைரங்கள் கிடைத்தன. 

கோகினூர், மயிலாசனம் என இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பட்ட ரத்தின கற்களின் பிரகாசமே இருளில் மின்னும் நாகரத்தினத்தையும் தேட வைத்துள்ளது.

நாகமாணிக்கம், நாகரத்தினம், நாகமணி, நாகக்கல், நாஜாகல், பாம்பு கல்லு என பலவகையான மேற்கோள் பெயர்களால் அறியப்பட்டாலும் இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

தெனோவெட் என்கிற வெளிநாட்டு பயணி இந்தியா வந்த போது பாம்பு கல் என சொல்லப்படும் ஒருவகை கல்லை மனிதர்கள் உருவாக்குவதை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கல் பாம்பு,தேள் போன்ற விஷக் கடிக்களுக்கு மருந்தாக பயன்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போதும் கூட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் சில இனத்தவரிடம் மட்டும் இந்த பாம்பு கல் அரிதாக பயன்பாட்டில் உள்ளது. இது கருப்பு நிற கல்லாக இருக்கும், பாம்புக் கடி பட்ட இடத்தில் இந்த கல்லை வைத்தால் அந்த கல் மெல்ல விஷத்தை உறிஞ்சிக் கொள்ளுமாம்.

முழு விஷமும் வெளியேறிய பின் அந்த கல் தாமாக கீழே விழுந்துவிடும். அதனை எடுத்து பாலில் போட்டால் அந்த பால் விஷநீலமாக மாறிவிடும். பாலை வெகு தொலைவில் விலங்குகள் கூட அருந்திவிடாத தொலைவில் வீசி விடுவார்கள்.

இந்த கல்லுக்கும் ஒரு காலவதி தேதி உண்டு. நூறு முறை பயன்படுத்திய பின் அந்த கல் தன்னாலே சிதைந்து விடுமாம். இதே போன்ற விஷமுறிவு முறை ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. நாகூர் அருகில் உள்ள ஒரு சிவ கிராமத்தில் கூட இப்படி ஒரு கல் பயன்படுத்தபட்டதாக தகவல் உள்ளது.

ஒரு சில மருத்துவமனைகளில் கூட இது ரகசியமாக உபயோகத்தில் உள்ளது. அறிவியலார்கள் இதை தவறான முறை எனவும் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே சிறந்தது என குறிபிட்டாலும் இது கல் கடிபட்டவருக்கு நம்பிக்கை அளிப்பதால் ஒருசில நன்மைகளும் உள்ளது.

குறிப்பாக பாம்பு கடிப்பட்டவர்கள் பதட்டபடுவதாலே அவர்கள் உடம்பில் விஷம் வேகமாக பரவுகிறது. பயம் உண்டாவதால் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது, விஷமும் வேகமாக பரவு வாய்ப்பளிக்கிறது.

ஆனால் இந்த கல்லை வைத்தவுடம் அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்து பதட்டத்தை குறைக்கிறது, இது விஷமுறிவுக்கு தேவையான கால அவகாசத்தை தருகிறது. இருப்பினும் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். இவற்றிற்கு நாகமணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, பாம்பு கல் கருப்பு/மஞ்சள் நிறத்தில் மனிதனால் சில வேதியல் சேர்மங்களோடு உருவாகப்பட்டவை.

நாகமணி மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட ஹிந்தி சினிமாவும், நாகினி போன்ற தொலைகாட்சி தொடர்கள் ஒரு ஆர்வத்தை தந்தாலும் இணையத்தில் காணும் வீடியோக்கள் நம்மை மிரள வைக்கின்றன, அவை முற்றிலும் பொய்யாக இருப்பினும்.

அது உண்மைதான், பார் இமயமலையில் நாகம் ஜொலிக்கும் மாணிக்கத்திற்கு அருகில் உள்ளது என்கிறார்கள். சரி என பார்த்தால் அது மாணிக்கத்தை கக்குவது காட்சியாக்கப் படவில்லை, இமயமலை தான் என்பதற்கும் ஆதாரமில்லை.

ஆழ்கடலில் திமிங்கலங்கள் உறவு கொள்வதை படம் பிடித்த தொழிற் நுட்பத்தால் நாகமணியை படம் பிடிக்க முடியவில்லை என்பது விந்தையே. இதுவரை உலகின் அதிகாரப்பூர்வ நாகமணி என்று எதுவுமில்லை, மிச்சமிருப்பது மர்மம் மட்டுமே.

சரி அப்படியானல் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரமே இல்லையா என ஒரு கேள்வி வரலாம், நாகமணியை பற்றி 1890-ல் ஆராய வந்த  Prof. Hensholdt என்ற அறிவியலாரின் கட்டுரையில் இதை பற்றி ஒரு முடிவுக்கு வந்தார்(அவர் மட்டுமே).

நாகமணியை இரவில் கண்டதாய் இலங்கையில் பல செய்திகள் உலவ பல நாகங்களை பிடித்து அதனுள் நாகமணி உள்ளதா என ஆராய்ந்துள்ளனர். நாகத்தை தேட அவருடன் உதவிக்கு இருந்த உள்ளூர் தமிழர் அதனிடம் நாகமணி உள்ளதாக கூறினார்.

அவர்கள் இருளும் வரை காத்திருந்து பார்க்க வெளிரும் பச்சை நிறத்தில் ஒரு கல்லை அந்த நாகம் கக்கியுள்ளது. பின்னர் அதனையே சுற்றி வலம் வந்தது. எப்படியோ அதன் கண்ணில் மண்ணை தூவி விட்டு அந்த தமிழர் நாகமாணிக்கத்தை எடுத்து விட்டார்.

அதனை ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ந்த அது ஒரு Fluorspar எனப்படும் வேதிசேர்ம கல் என கண்டறிந்தார். குளோரோஃபேன் எனப்படும் அந்த மின்னும் கல்லானது பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நதிக்கரையோரமாக காணக்கிடைக்கிறது.

இதனை அந்த நாகப்பாம்பு விழுங்க எண்ண காரணம் என்ன ஆராய்ந்த போது, இவ்வகை பாம்புகள் பூச்சிகளை உணவாக உட்கொள்பவை. இரவில் மின்மினி பூச்சிகள் வெளிர் பச்சை நிறத்தில் ஒளியை உமிழும், பெண் மின்மினிகள் அளவில் பெரிதாய் இருப்பதால் பறக்காமல் ஒரு இடத்தில் இருந்து வெளிச்சத்தை தரும்.

875px-3192M-fluorite1.jpg

இந்த கல் பகலில் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு இரவில் மிளிரக்கூடியவை. இதன் வெப்பஒளிப்பாய(Thermoluminiscence) தன்மை கையின் சூட்டாலே இதனை மிளிர வைப்பதாக சொல்கிறார்கள், வெந்நீரில் போட்டால் நல்ல பச்சை நிறத்திலும் தீப்பிழம்பில் மரகத பச்சையாகவும் காட்சியளிக்குமாம்.

அதனால் நாகம் சில நேரங்களில் இரை என நினைத்து அந்த கல்லை விழுங்கி விடுகின்றன. பாம்புகளின் சிறப்பியல்புகளில் ஒன்று எதை வேண்டுமானலும் விழுங்கி தேவையற்றதை வெளியேற்றி விடும் தன்மை கொண்டது.

உதராணமாக முட்டைகளை முழுமையாக விழுங்கி விட்டு அதன் தோலை மட்டும் வெளியேற்றும். அதே போல இந்த கல்லை கக்குவதை கண்டு அதனை நாகக்கல்(பாம்புக் கல்லு) என பலர் நம்பியிருக்கலாம், அதே நேரத்தில் அந்த நாகங்கள் இந்த கல்லை பயன்படுத்தி அதை பெண் மின்மினி என நம்பிவரும் மற்றவற்றை இரையாக உட்கொள்ள துவங்கியதாக இவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இக்கூற்று முற்றிலும் அறிவியலுக்கு முரண்பாடனாது. பாம்புகள் மனிதர்கள் போலல்லாது சிந்திக்கும் திறனற்றவை. எல்லா உயிர்களுக்கும் இருப்பதை போன்ற உயிர் வாழ தேவையான உந்துதல் முறை என இதனை கருதினால் கூட நாகங்கள் மற்ற பாம்புகளை உண்ணக்கூடிய அளவுக்கு பெரியவை.

அதற்கு இந்த பூச்சிகள் ஒரு பெரிய விருந்தினை தந்திராது. மேலும் நாகமணி பற்றி அதிகம் பேசப்படும் இந்தியாவில் இவ்வகையான கற்கள் கிடைப்பதில்லை. இது ஒரு ஆதாரமுள்ள கட்டுக்கதையே.

சில நேரங்களில் பாம்புகள் முட்டை என நினைத்து சில கற்களையும் விழுங்கிவிடுவதுண்டு. பறவைகள் கூட செரிமானத்திற்காக கற்களை விழுங்குவதை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.

அதேபோல இரையென நினைத்து எதையோ விழுங்கி பின்னர் அதை கக்குவதை கண்ட காட்டுவாசிகள் நாகமாணிக்கம் என நம்பியிருக்கலாம். அவை கக்குவதில் சில மாணிக்க மரகதமாகவும் இருந்திருந்திருக்கலாம், அதற்கென்ன தெரியும்.

இந்தியா ஏற்கனவே உலக நாடுகளின் வியாபார சந்தையாக உள்ளது. இதில் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற அதிர்ஷ்ட கற்கள் ஏமாற்றி விற்கப்படுகின்றன. இதுவரை நாகமாணிக்கம் என்பது நிருபிக்கப்படவில்லை என்பதை பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்.

கருட புராணத்தில் என்னதான் செல்வம் தந்தாலும் பேரம் பேசி வாங்கும் நாகமாணிக்கம் பயனற்றதாய் போகும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு புராதாணமான ஒரு ரத்தினம் சுலபத்தில் சந்தையில் கிட்டுமா என்ன?

சில காலம் முன்பு புதுக்கோட்டையில் 3 பேர் இணைந்து 1000 கோடி ரூபாய்க்கு நாகமணியை விற்பதற்காக விலை பேசியுள்ளனர். நாகமணி என நிரூபிக்க அதனருகில் இரு செம்பருத்தி பூவினை வைத்ததும் தானாக மலர்ந்து விடும் மாயையை நிகழ்த்தியுள்ளனர்.

விலை அதிகம் என கருதிய வாங்கும் நபரிடம் 300 கோடி அளவிற்கு பேரம் பேசியுள்ளனர், ஆனால் வாங்க வந்தவர் வேறுயாரும் இல்லை, சென்னையை சேர்ந்த குற்ற புலனாய்வு துறை நபர்கள்(!).முன்பணமாக 3 கோடி கொடுத்து அவர்கள் ஊருக்கு சென்றுள்ளனர்.

கல்லும் களவுமாக பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது அது அந்த ஊரில் உள்ள சாமியார் இதனை நாகரத்தினம் என ஊரில் உள்ளவர்களிடம் கதை விட்டுள்ளார், அதை நம்பிய இவர்கள் விற்க துணிந்து வசமாக சிக்கிக் கொண்டார்கள்.

the_snake_charmer_by_zachsmithson-d5tx6oc.jpg

இன்னும் சொல்லப்போனால் நமக்கு எல்லாம் தெரிந்த நாகமணிக்கல் பச்சை/மஞ்சள் நிறத்தில் இருக்காது. சில நேரங்களில் நீல நிறம் என சொன்னாலும் சிவப்பு வண்ண நிறத்தினதாக இது பெரும்பான்மையாக காப்பியங்களில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது.

“உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்

திருமணி விளக்கிண் பெறுகுவை”

–அகம் 92

வடமொழி நூல்கள் மட்டுமில்லாமல் சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி,  சிலப்பதிகாரமும் சிவப்பு வர்ண நாகரத்தினத்தை உவமையாக பயன்படுத்தியுள்ளன. இதற்கு பின்னால் உள்ள அறிவியல் பிண்ணனி அதன் நிறத்தை நமக்கு இன்னும் தெளிவாக உணர்த்தும்.

யாளி – கடவுளின் பாதுகாவலன்

பாம்புகளுக்கு உட்செவிகள் உள்ளன, ஆனால் வெளிப்புற செவிகள் கிடையாது. கிட்டதட்ட பாம்புகள் செவிடுகள்(மாற்று திறனாளிகள்) என்றே குறிப்பிடலாம். கண்களே செவிகளாகவும் இருக்கும், கட்செவி(கண் + செவி). அப்புறம் எப்படி பாம்பாட்டி ஊது போது நடமாடுகின்றன் என்று நீங்கள் கேட்கலாம்.

பாம்புகள் புவியின் அதிர்வை வைத்தே உணர்கின்றன. சொல்லப்போனால் பாம்பாட்டி ஊதும் போது மகுடி தன்னை தாக்க வருவதாகவே அது நினைத்து கொள்கிறது. அதனாலே அதற்கு மறு புறமாக தனது உடலை வளைத்து ஒரு நடன அசைவை உண்டாக்குகிறது. சீறுவது கூட தற்காப்புக்குத்தான்.

பாம்புகளின் கண்களும் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது, இருப்பினும் சிறப்பாக தகவமைப்பாக அதன் கண்களின் ஓரத்தில் உள்ள சிறிய வெப்பக் குழிகள்(Heat Pits)  போன்ற அமைப்பு மற்ற உயிரினங்களின் உடல் வெப்ப அளவை வெளிபடுத்தக் கூடியது. ஜாகப்சன் உறுப்பு (Jaconsons Organ) எனும் உறுப்பு மூலம் இரையின் வாசத்தையும் அறியும்.

பார்வையில்

அதாவது நாகத்தின் கண்களுக்கு நாம் சிவப்பு பச்சை கலத்து உஷ்ண வடிவாகவே காட்சியளிப்போம். சாதாரண கண்ணில் வண்ணங்களை உணர்ந்து பார்வையும் மற்றொரு பார்வையில் அகச்சிவப்பு ஒளியை பயன்படுத்தி இருமுகனாக ஒரு நாகத்தால் செயல்பட முடியும்.

சர்பங்களை போல் அல்லாது நாகங்களால் அகச்சிவப்பு கதிரொளி திறனை பயன்படுத்தி இரவிலும் வேட்டையாட முடியும் . நாகரத்தினமும்  இரவில் வேட்டையாட பயன்படும் என சொன்னது நினைவுக்கு வருகிறதா.

இதனை தற்போதை அறிவியலுக்கு முற்பட்ட காலத்திலே கண்டறிந்த அறிஞர்கள் அதனை நாக சக்தியாக கருதியிருக்கலாம். எப்படி ஆகாய சிந்தாந்தம் சிதம்பர ரகசியமாக உள்ளதோ அது போல அகச்சிவப்பு கண்ணோட்டமும் நாக ரத்தின மர்மமாக இருக்கக்கூடும்.

References:

http://globalsistersreport.org/news/ministry/sisters-central-india-are-known-curing-snake-and-scorpion-bites-42176
http://www.occulttreasures.com/cobra_pearl.html
https://en.wikipedia.org/wiki/Snake-stones
http://timesofindia.indiatimes.com/india/Men-try-to-sell-Rs-1000crore-worth-nagamani-in-Tamil-Nadu-held/articleshow/49182835.cms
http://www.sushmajee.com/reldictionary/dictionary/page-N/naag-mani.htm
http://suganesh80.blogspot.in/2014/05/blog-post_23.html
நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!!
http://www.planet9.co/gemstones-encyclopedia/nagamanickam-or-nagamani-the-mystery-of-snake-pearls-and-snake-stones/

5 comments

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.