​நல்லை அல்லை – காற்று வெளியிடை

​நல்லை அல்லை – காற்று வெளியிடை

மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே.

காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது.

ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை.

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாய் ஒரு நுண்ணிசையை உணர முடியும். அத்துணை நுணுக்கங்கள் அதனுள் புதைந்திருக்கும்.

அதுவும் தமிழார்வம் கொண்ட மும்மூர்த்திகள் இணையும் போது அதன் தரம் விலைமதிபற்றதாகிறது.

ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள், மணிரத்னத்தின் காட்சியமைப்பு.

இவற்றில் எது நம் மனதை கொள்ளை கொண்டது என பிரித்தரிதல் அரிது. சரி நல்லை அல்லை பாடலுக்கு வருவோம்.

இந்த பாடல் வரியின் அர்த்தம் மிக எளிது. நல்லை என்றால் நன்று. அல்லை என்றால் இல்லை என பொருள்படும்.

இச்சொல் குறுந்தொகையில் வரும் சொல்லேடு. தலைவியானவள் வெயிலில் வாடுவது நல்லை அல்லை என அதில் வரிகள் வரும்.

சங்க தமிழ் சொற்களை இயல்பாக பயன்படுத்த வைத்த பெருமை வைரமுத்துவையே சேரும். இவர்கள் இணைப்பில் உருவான நறுமுகை பாடல் ஒரு சிறந்த குறுந்தொகை உதாரணம்.

அந்த மாதம் என பொருள் கூறும் ‘அற்றை திங்கள்’ என்ற வரிகளை எளிமையை நம்மை பாட வைத்திருப்பர். பூம்பாய்வா, ஆம்பல்(அல்லி) எல்லாம் நாம் ஏற்கனவே அறிந்தது தான்.

நல்லை பாடல் ஒரு ஆண் பெண்ணிடம் உரைப்பது போன்று மெல்லிய காதலை வெளிபடுத்துவது. எப்போதும் போல இதற்கெனவே சிறந்த பாடகரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சத்ய பிரகாஷ் ராசாளி பாடலை பாடியவர். அவளும் நானுமில் எவ்வாறு வரிகளுக்கும் குரலுக்கும் வலிமை அளித்து இசையை பதிந்த உத்திதான் இங்கும் மின்னுகிறது.

வைரமுத்து வரிகளில் உள்ள சொற்களை தனித்தனி கவிதைகள் என்றே சொல்லலாம். தேடும் வேளையில் முகில் சூடி ஓடிவிட்டாய் என நிலவை உவமையாவதும் நட்சத்திர காட்டில் என்னை அலைய விட்டாய் என்பதும் நயம்.

இப்போதெல்லாம் பெண்களை மலர், பூ என்று வருணிக்கிறார்கள். சங்க தமிழில் அவள் பருவத்திற்கு ஏற்ப பூக்களின் பருவத்தை பிரித்திருப்பார்கள்.

முகை, முகிழ், மொட்டு, மலர் என மலரின் பருவங்கள் இங்கு வரிகளாய் பூத்திருக்கின்றன.

முகை, முகிழ், மொட்டான நிலைகளிலே முகந்தோட காத்திருந்தேன்.

மலர் என்ற நிலை பூத்திருந்தாள், மணம் கொள்ள காத்திருந்தேன்.

மகரந்தம் நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்.

நாறும் மலரே என்பதை தவறாக அர்த்தம் கொள்ள கூடாது. தமிழில் நாற்றம் என்றால் நறுமணம் என்றே பொருள். துர்நாற்றம் என்றால் தான் நுகர முடியாதவை.

பாடலில் நாயகனின் தேடல் அவளின் ஊடலை பற்றி நல்லை அல்லையென அளவாடுவது அற்புதம்.

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…

மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே… #நல்லைஅல்லை

நான் தேடும் போது மட்டும் நீ முகில்(மேகம்) சூடி போவதென்ன என கணைகள் தொடுக்கிறார் கவிஞர்.

நீ செய்வது நன்றில்லை நன்னிலவே, நள்ளிரவே என உருவகங்கள் உள்ளுர செய்கிறது.

பாடலின் இடையே வருல் சின்மயின் ஹம்மிங் வருடி செல்வதை உணராமல் பாடல் முடிவுறாது. நிலவின் பிரகாசத்தை போல மலர் விரியும் விடியற் போல.

ரஹ்மான்- வைரமுத்து இணையின் தமிழ் வரிகளையும் இசை வளமையும் மெச்ச யவருமில்லை. இன்னமும் மணிரத்னரத்தின் காட்சியமைப்பு மலர்வதை காண காத்திருக்கச் செய்வது நல்லை அல்லை.

Add comment