உலகம் வெகுவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் நகரங்களோடு தொடர்பில்லாத இடங்களே புவியில் இல்லை எனதான் கூற வேண்டும். ஆனால் கிட்டதட்ட 60,000 ஆண்டுகள் பழமையான தீவின் பழங்குடியினர் வெளியுலக வாசிகளின் தொடர்பு சற்றுமல்லாமல் வாழ்கின்றனர், அதுவும் மனித இனம் தொடங்கியதிலிருந்தே!
வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது ஓர் சிறிய தீவு. இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லாத இத்தீவின் பெரும்பாலான பகுதி காடுகளையே கொண்டுள்ளது.
இத்தீவினை சுற்றிய 3 மைல் பகுதிக்குள் யாரெனும் உள் நுழைவது இந்திய அரசின் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும்.
இந்த காவல் வளையம் தீவில் உள்ளோர்களின் பாதுகாப்பிற்காக அல்ல. தீவைப் பற்றி தெரியாமல் அங்கு சென்று விடுபவர்களுக்காகத் தான்(!?).
இது வடக்கு சென்டினல் தீவு. உலகின் கடைசி பழங்குடி நாகரிக மக்களான இவர்கள் வெளி இன மனிதர்களை அவர்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. மீறி வந்தவர்களை ஈட்டி, வில் அம்புக்கு இரையாக்கி கடலில் வீசுகின்றனர்.
இந்த தீவு காவலாளிகள் பேச்சுவார்த்தை செய்வதில்லை, அயலார் நட்பை ஏற்பதில்லை, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில்லை, உயிரை பணயம் வைத்து தங்கள் தீவை பேழை போல பாதுகாக்கின்றனர்.
கூகிள் மேப், செயற்கைகோள்கள் ட்ரோன்கள் என தொழிற்நுட்ப யுகத்தில் வாழும் நம்மிடம் இருக்கும் சென்டினல் தீவு மக்களின் புகைப்படங்கள் கப்பலிலிருந்தோ விமானத்திலிருந்தோ எடுக்கப்பட்ட தெளிவற்ற காட்சிகள் தான்.
அந்த தீவில் நடந்த கன்னித்தீவு கதைகளை சொல்ல, அங்கு இதுவரை காலடி வைத்தவர்களில் யாரும் தற்போது உயிரோடு இல்லை. இவர்கள் பேசும் மொழி பக்கத்து தீவில் உள்ள மக்களுக்கே புரியவதில்லையாம். ஆப்பிரிக்க வழிதோன்றல் போன்ற மேனிநிறம் கொண்ட இவர்களின் உண்மையான மரபு எங்கிருந்து வந்தது என யாருக்கும் தெரியாது.இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை.
நமக்கு தெரிந்ததெல்லாம் மிகக் கடின குணம் கொண்ட இந்த கற்கால மனிதர்கள், தீவில் வேட்டையாடி மட்டுமே வாழ்கின்றனர். இவர்களிடம் விவசாயம் மற்றும் சமூக வாழ்வியல் இன்னும் மேம்படவில்லை.
வெளி இனத்தவர் அனைவரையும் அச்சுறுத்தலாகவே கருதும் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்த சென்றாலும் 8 அடி நீளமுள்ள ஈட்டிகளை கொண்டு தாக்குகின்றனர்.அதுவும் இலக்கு தவறாமல்.ஒலிம்பிக்கில் சேர்த்தால் இந்தியாவிற்கு ஒரு தங்கமாவது கிடைக்கும்.
இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை. 1930களில் 30 பேர் வரை இங்கு இருந்ததாக கூறப்பட்டது. தற்போது 400-500 பேர் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத இடங்களில் இதுவும் ஒன்று என வரலாற்றார்கள் சிலர் கருதுகின்றனர்.
கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வானியலாளர் தாலமி குறிப்பிட்டுள்ள வங்காள விரிகுடாவில் வாழ்ந்த நரமாமிச தீவுவாசிகள்(“island of cannibals“) இவர்களாகவே இருக்கக்கூடும்.அவரின் கூற்றுப்படி அந்த தீவுக்குள் பிரவேசித்தவர்களை கொடூரமாக கொலை செய்து அவர்களின் உடலை வெட்டி திண்பர், ஏனெனில் அவர்கள் மீண்டும் ஜாம்பிகள்(Zombies or White walkers) போல உயிர்தெழுந்து வந்துவிடுவர் என்ற அச்சம் இவர்களிடம் இருந்தது.
உலகின் மற்ற நாகரீகங்கள் கற்களை உடைத்துக் கொண்டிருந்த காலத்தில் இவர்கள் ஜாம்பிகளுக்கு எதிராக போரிட்டது அசாத்திய எதிர்கால சிந்தனைதான்(-0-).
அதன் பின்னர் இவர்களை பற்றி அடுத்த 1100 வருடங்களுக்கு பின்னர்(!) மார்க்கோ போலோ கொடூர வேட்டையாளிகள் என குறிப்பிட்டுள்ளார்(ஏம்மா இப்பிடி). 500 ஆண்டுகளுக்கு பின் 1771-ல் பிரிட்டிஷ் கம்பேனி இத்தீவிற்கு வடக்கு சென்டினல் (North Sentinel) என பெயரிட்டது.
செண்டினல் என்றால் காவலாளி என்று அர்த்தம். ஆனால் உண்மையான தீவின் பெயர் யாருக்கும் தெரியாது, கேக்க போனாதான் அம்பு விடுரானுங்களே. அதுமில்லாமல் அவர்கள் தத்தமக்கே பெயர் வைத்திருக்கிறார்களா என்பதே சந்தேகமே.
அதன்பின் 1867 வரை யாரும் அங்கு செல்லவில்லை, அந்த ஆண்டின் இறுதியில் “நினேவே”(Nineveh) என்ற இந்திய சரக்குக் கப்பல் ஒன்று இத்தீவின் பவளப் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்து தப்பிய 106 பேர் தீவு மக்களினால் தாக்கப்படனர். பலர் கொலை செய்யப்பட்டனர், கப்பலில் மிஞ்சிய கத்தி துப்பாகிகள் கொண்டு மீதமுள்ளவர்கள் தங்களை தற்காத்தனர். பின்னர் எப்படியோ அரசு கடற்படை வந்து அவர்களை மீட்டது.
ஆனால் இதுபோல சம்பவங்கள் அதோடு நிற்கவில்லை. 1896ம் ஆண்டு வெள்ளையர் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, அங்கிருந்து தப்பி இந்தத் தீவுக்குப் போயுள்ளார்(செத்தாண்டா). ஆனால் அவரது கெட்ட நேரம் இந்தத் தீவு வாசிகளிடம் சிக்கி உயிரிழந்தார். அடுத்த நாள் இவரது உடல் அம்புகள் தாக்கியும், கழுத்து அறுபட்டும் பிணமாகக் கிடந்தது.
சிறைச்சாலை படத்திலும் அப்படி ஒரு காட்சி படமாக்க பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.
ஓர் நேஷனல் கியாக்ராபிக் (national geographic) இயக்குனர் இவர்களை மர்மமான வாழ்வை படம்பிடிக்க 1974-ல் தன் குழுவோடு சென்றார். நேராக கரைக்கே சென்று ஏதோ சுற்றுலா வந்தது போல தரையிரங்கினர். தேங்காய்கள், ஒரு பொம்மை, உயிருள்ள பன்றி என சில பரிசுகளையும் கொண்டு சென்றனர்.(-o-)
சென்டினலீசுகள் வந்தனர்- முழு ஆயுதங்களோடு(ஊஊ).
முதலில் அந்த இயக்குனர் காலில் வந்து இறங்கிய அம்பு , இதனை அவரது கடைசி பயணமாக்கியது(கால்’லயே போட்டானுங்களா).அங்கிருந்து எப்படியோ தப்பி சென்ற குழு திரும்பி பார்க்கையில் அவர்கள் அளித்த பரிசுகளை சிதைந்து எரித்துக்கொண்டிந்தன, அந்த பன்றியையும் தான்.
1981ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிரிம்ரோஸ் என்ற கப்பல் இந்தத் தீவை ஒட்டியுள்ள பவளப் பாறையில் கரை தட்டி நின்று விட்டது. கப்பலில் நிறைய மாலுமிகள் ஊழியர்கள் இருந்தனர். கப்பலைப் பார்த்த தீவுவாசிகள் வில் அம்புடன் படை திரட்டி கப்பலைத் தாக்க கிளம்பி வந்தனர். கடற்கரையில் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கேப்டன், உதவி கோரி ரேடியோ மூலம் தகவல் அனுப்பியும் கிடைக்கவில்லை.
“Wild men, estimate more than 50, carrying various homemade weapons are making two or three wooden boats… worrying they will board us at sunset. All crew members’ lives not guaranteed”.
இரு நாட்கள் துப்பாக்கிகள்,கோடரிகளை வைத்து சமாளித்தவர்களை கப்பல் மூழுதும் சிதைந்த நிலையில் பின்னர் ஹெலிகாப்டர் கொண்டு மீட்டனர். இன்னும் அதன் மீதங்கள் கூகுள் மேப்பின் தென்படுகின்றன.
கடந்த 1980-ம் ஆண்டின் இறுதி மற்றும் 1990-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயுதம் தாங்கியவர்களுக்கும் – பழங்குடியினத்தவர்களுக்கும் இடையிலான மோதலில் பல பழங்குடியினர் உயிரிழந்ததாஜ தெரிகிறது. ஆயுதம் தாங்கியவர்கள் உடைந்த கப்பல் பாகம் மற்றும் இரும்பை மீட்க சென்றவர்கள் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் யாருமே இத்தீவு மக்களை சந்திக்க வில்லை என சொல்லி விட முடியாது. இதுவரை இரண்டு வெற்றிகரமான சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.
1.மோரிசு வைடல் போர்ட்மேன் (Portman) என்ற பிரித்தானிய நிர்வாகியின் தலைமையில் சென்ற குழுவொன்று உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை அறியும் பொருட்டு 1880-ல் சென்டினல் தீவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு சிறிய, கைவிடப்பட்ட பல கிராமங்கள் இருந்தது.
பின்னர் சிலரை கண்டுபிடித்து, ஒரு வயது முதிர்ந்த ஜோடி மற்றும் சில குழந்தைகளும் வலுக்கட்டாயமாக அந்தமானின் முக்கிய நகரான போர்ட் ப்ளேயருக்கு அழைத்து வரப்பட்டனர். போர்ட்மேன் குறிப்பிடுகையில்,
அந்த மொத்தக் குழுவும் தொடர்ந்து நோய்வாய்பட்டன.வயோதிகர் இருவரும் இறந்து போயினர். ஆக எஞ்சியிருந்த குழந்தைகளை சில பரிசுப் பொருட்களுடன் அவர்களுடைய சொந்த இடத்திற்கே திருப்பிக் கொண்டு விடப்பட்டனர். அத்துடன் அந்த இருவரின் இறப்பிற்கு வருத்தததை தெரிவித்த போதும் அவர்களுடைய நடவடிக்கை மிக மோசமாக இருந்தது.
2.சென்டினலீசு மக்களுடனான முதலாவது அமைதியான தொடர்பு இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரிலோகிநாத் பண்டிட்(T.N. Pandit) மற்றும் அவரது குழுவினரால் 1991 சனவரி 4 இல் நிகழ்த்தப்பட்டது.
20 வருடங்களாக அவர்களை கண்காணித்த பண்டிட் குழு பலமுறை அங்கு பயணித்து(தப்பித்து) வந்தனர்.பின்னர் நடந்த முதல் தொடர்பில் தேங்காய்களை அவர்களே வந்து வாங்கிக் கொண்டனர்.
ஆனாலும் சிறிது நேரத்திலேயே அவர்கள் கத்தியை வெளியே எடுத்து இங்கு தங்கக் கூடாது என்பது போல சைகை செய்தனர். உடனே அந்த குழு அங்கிருந்து புறப்பட்டது. நல்லபடியாய் கப்பல் புறப்பட்டதும் அதில் ஒரு ஈட்டி வந்து சொருகியது.திரும்பி வர வேண்டாம் என அதற்கு அர்த்தம்.
தொற்றுநோய்களாலும், வன்முறைகளாலும் மக்கள்தொகை இங்கு அருகி வருகிறது. இதனால், இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு தவிர்ப்பு வலயமாக அறிவித்துள்ளது.
1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் எவரும் அங்கு செல்லவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடித்துவிட்டு தவறுதலாக இப்பகுதிக்கு சென்ற இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தீவு மக்களிடம் சிக்கி ஈட்டியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படை முயன்றது. ஆனால் வில் அம்புத் தாக்குதல் பலமாக இருந்ததால் இந்தியப் படையினரால் கரையைக் கூட நெருங்க முடியவில்லை.
கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலுக்குப் பின்னர் சென்டினல் தீவு மக்களின் கதியை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது. அப்போது இந்தத் தீவு மட்டும் பத்திரமாக பெருமளவில் பாதிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது.
அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீவும் மக்களும் தப்பினர். அவர்கள் சுனாமி வரப்போவதை எப்படியோ முன்னரே அறிந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
ராணுவம் மருத்துவ உதவி, உணவு போன்றவற்றை வீச முற்பட கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இந்திய ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டினர்.மிக நீள் அம்பினால் பைலட்டின் காலில் வேறு தாக்கினர்.
அந்தமான் நிக்கோபார் அரசு 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்டினல் மக்களின் வாழ்க்கையுடனோ அல்லது அவர்களின் வாழ்விடங்கள் மீதோ தலையிடத் தமக்கு எவ்வித எண்ணமோ அல்லது ஆர்வமோ இல்லை எனக் கூறியுள்ளது.
சர்வைவல் இன்டர்நேஷனல் இயக்குனர் ஸ்டீபன் கொர்ரி கூறுகையில், இந்தியாவின் அந்தமான் தீவில் உள்ள பழங்குடியின மக்கள், 1800-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வெளியேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட, போ பழங்குடியினத்தை சேர்ந்த கடைசி ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதேபோன்ற நிலை வடக்கு சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினருக்கும் ஏற்படக் கூடாது என்று தெரிவித்து உள்ளார்.
இந்த தீவு மட்டுமில்லாது அந்தமானின் காட்டுப் பகுதிக்குள் வசிக்கும் மற்றொரு இனமான ஜாரவா(Jarawa) பழங்குடி மக்களும் மனித நாகரிக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களே. ஜராவா என்றால் மண்ணின் மைந்தர்கள் எனப் பொருள், ஆனால் இவர்கள் மரபணு பசுபிக் பகுதியை சார்ந்ததாக உள்ளது முரணே.
சமூக வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்ந்த இம்மக்கள் தற்போது அழிந்து வரும் ஆதிவாசி பழங்குடியினர் பட்டியலில் இந்திய அரசால் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாரவா பழங்குடியினர் வாழும் பகுதிகளை கடக்கும் சுற்றுலா பயணிகள், வேட்டைக்காரர்களிடமிருந்தும்,
இம்மக்கள் வாழும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்த தொழிலாளர்களிடமிருந்தும் பரவிய தொற்று நோய்களால் ஜாரவா மக்கள் பலர் இறந்துவிட்டனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மற்றும் தொழிலாளர்களால் இப்பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர்.
இதன் காரணமாக வெளியாட்களிடம் இவர்களை காக்க ஜராவா மக்களை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்து அவர்களுடம் பேசுவது, தொடர்பு கொள்வது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்றவற்றை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது. அவர்கள் மீது குற்ற வழக்குகளும் பதிவு செய்கிறது அந்தமான் அரசு நிர்வாகம்.
சென்டினலும் சரி ஜாரவாவும் சரி, ஒரு தனிப்பட்ட இனமாக வாழ்ந்த இவர்கள் நவீன கால மக்களுடன் இணையும் போது பேரளவிலான இன்னலை சந்திக்கின்றனர். அவர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ள மனித மனம் இயல்பாக தவிக்க ஆரம்பித்துவிடும்.
மிக முக்கியமாக அவர்கள் நம்மால் விரைவில் நோய்வாய்ப்படுகின்றனர், அது அவர்களின் இன அழிப்பின் விளிம்புக்கு இட்டுச் செல்லும் அபாயம் கூட உண்டு. நம் அரசாங்கம் நினைத்திருந்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் காட்டியது(பல காட்சிகள் காட்டபடவில்லை) போல நிகழ்த்திருக்கலாம்.
ஆனால் அதுபோன்றொரு அபாய முயற்சியை எடுக்காததை நிச்சயம் பாராட்ட வேண்டியது. ஜாரவா தீவு மக்கள் போல சென்டினல் தீவுவாசி தலைமுறை மக்களும் பாதிப்படையாமல் பேணி காப்பது அரசின் கடமையாகும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை இந்திய & அந்தமான் அதிகாரிகள் உறுதிபடுத்தவேண்டும்.
https://youtu.be/OaPYwlXOTzQ