Image default
Devotional Tradition

இராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்

இராமாயணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவுக்கெவ்வளவு மிகைப்படுத்திக் காட்ட முடியுமோ அவ்வளவு மிகைப்படுத்திக் கொண்டே வரும் ஒன்று.இன்று தொலைக்காட்சிகள் அதை மேலும் மெருகேற்றிவிட்டன.இதில் மிகவும் இராமாயணத்தை மிகைப்படுத்தியது கம்பர் தான்!

கம்பர் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்ப்பில் மிகைப்படுத்தி எழுத, ஒட்டக்கூத்தர் மட்டுந்தான் மிகையில்லாது உள்ளது உள்ளபடி யுத்த காண்டத்தை எழுதி முடித்து வைத்தார்.

ravana

இதன் காரணம் கொண்டு தான் மகாகவி பாரதியார் தனது குயில் பாட்டு தொகுப்பில் புராணம் என்ற தலைப்பில் இராமயணத்தைப் பற்றி கவிதை ஒன்றை வடித்தார்.

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

இராமாயணம் என்பது சைவ – வைணவ போர் அதை வைணவம் சார் கம்பர் தன் பங்கிற்கு மேலும் அழகுறு தமிழில் இரசிக்கும்படியான ஒரு கருத்தியல் போரையே திணித்து விட்டார்.

அதை எந்த சைவராலும் ஏற்க முடியாது சிவ பக்தன் வீழ்த்தப்படுகிறான். சிவன் இராவணனுக்கு வழங்கியதாக கூறப்படும் ஆயுதங்களையே வீழ்த்துகிறது.

கம்பர் சைவத்தின் மீது தொடுத்த எழுத்துப் போர்

முதற்குறிப்பு : வாலி முதற்கொண்டு இராவணன் இராவணன் உடன்பிறப்புகள், வாரிசுகள், படையினர் வரை அனைவரும் சிவ பக்தர்கள் அதாவது கதையில் வீழ்த்தப்படுவர்கள்.

கருத்தியல் போர்கள்

முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்
முற்றி,
வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த
தன்மை,
அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;
ஆழியான்மாட்டு
இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்
கொண்டாம்.

பொருள் – அனுமன் மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும் செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது என்கின்றார்.

அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி
ஆர்த்தார்;
‘இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது’
என்பார்;
குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்
கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.

பொருள் – (அங்கதனுடைய) அந்த (வீரத்) தொழிலைக் கண்ட தேவர்கள், கை கொட்டிப் பேரொலி செய்தார்கள்; இந்த வீரத் தொழிலை; இவனுக்கு அல்லால் சிவபிரானுக்கும்; இயலாது

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை (சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது. அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே.

Raavan

இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான்.

பழிப்புஅறு மேனி யாள்பால்
சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால
வெதும்பினான், ஈசன் வேலும்,
குழப்பு அரிது ஆய மார்பை,
மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக்
கிடந்தவாள் அரக்கன் கேட்டான்.

சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவே கம்பர் கூற வைக்கின்றார்.

இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று
என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும்
கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை
நோற்ககிற்பார்?

பொருள் – இந்திரனுடைய வச்சிராயுதமும்; சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று இலை வடிவத்தைக் கொண்ட மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும் திருமாலின் வளைந்த சக்கரப் படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும் வேற்றுமை மிகுதி.

இந்திரன் படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான் தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது நொந்தனன். யானல்லாத மற்றையோர் யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத் தாங்க வல்லார்.

images-26.jpeg

மேற்குறித்த பாடலில் சிவனின் சூலத்துடன், மாயோனின் சக்கரத்தையும் விட ராமனின் அம்பு வலிமையானது எனக் கூறுவதனைக் காணலாம். இவ்வாறு சில இடங்களில் ராமரின் ஆற்றலினை திருமாலின் ஆற்றலை விடக் கூடுதலாகக் காட்டுவது, திருமாலின் அவதாரமே ராமன் என்ற செய்திக்கு முரணானது (சிலவேளைகளில் தனது பாத்திரப் படைப்பான ராமனை மற்றைய எல்லாக் கடவுள்களையும் விட உயர்வாகக்காட்டுவதற்காகவோ! என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது).

இன்னொரு இடத்தில் கம்பர் ‘சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது’ என்று வேறு பாடுகின்றார்.

‘இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெருவரத் திசைகள் பேர வெங்கனல் பொங்க மென்மேல்
செருமலே கின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்
வரிசிலே இற்ற காக மற்றவன் முனிந்து மன்னோ`

கம்பர் சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனினை நேரடி மோதலிலேயே தோற்க வைக்கின்றார். மேலும் சைவத்தை தாக்கும் வரிகள்.

திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் – 2987 வது பாடல்

அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது – 3585 வது பாடல்

இந்திரசித்தனின் தோற்றமானது சிவன், முருகன், விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் – 4974 வது பாடல்

சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல் – 8123 வது பாடல்

ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் – 10006 வது பாடல்

இதை விடப் பல இடங்களில் சிவன் ‘அழிப்புக் கடவுள்’ என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் பாடுகின்றார்.

நீலநிற நிருதர், யாண்டும் நெற்பொழி வேள்வி நீக்க,
பால்வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகுஎலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.

கம்பர் காலத்தில், சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காக முழு உலகையும் உண்பவராக மேலுள்ள பாடலில் காட்டுகின்றார்.

சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (“சிவனோ? அல்லன் நான்முகன்..”) ராவணன் வதைபடலத்தில் கம்பர் பாடுகின்றார்.

எல்லாவற்றிலும் உச்சமாக சிவன், பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (“முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை (பெயர்) யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தை தாக்குகிறார்.

சைவ சமயத்தில் இராவணனை தவிர்த்து விட்டு எங்குமே செல்ல முடியாது ஆதாரங் காண் 👇

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

eeoyzflu4aepoid4957048259720478847.jpeg

குறிப்புரை :

இராவணன் மேலது – திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் தனக்கு வாய்த்த செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றையவமதிக்காமல் அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் என்னும் உண்மை எல்லா நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும் உண்மை எண்ணத்தக்கது.

பராவண்ணம் ஆவது – பராசக்தி சொரூபமானது. அதனால் உயிர்களின் பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் – தத்துவம்; மெய்ப்பொருள். அரா – பாம்பு. வணங்கும் – வளையும்; தாழும். அணங்கும் எனின் அழகுசெய்யும் என்க.

தேவார திருமறையில் இராவணனின் திருநீறு புகழை உச்சிமோர்ந்து பாடுகிறார் திருஞானசம்பந்தர். தமிழரால் மட்டுமல்ல எந்த மொழி சைவரானாலும் இராவணனை புறந்தள்ள முடியாது.

Related posts

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்

Paradox

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு?

Seyon

விஜய தசமி – Celebrate Demon-Slaying Goddess

Seyon

Leave a Comment