செங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்

செங்காந்தள் மலரை பற்றி ஏற்கனவே பலவேறு பட்ட பதிவுகள் ஒன்றை போலவே வார்த்தை மாறமல் எழுதப்பட்டுள்ளன. அதில் சில குறிப்பிட்டதக்க தகவலை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நம் இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த மலர் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப்பூ என்றொரு பெயரும் கொண்டுள்ளது. தமிழகத்தின் மாநில மலராகவும் ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் இதுவே உள்ளது.

நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள் வார்குலை அவிழ்ந்த வள்இதழ் கிரை தொறும் விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி பவழத் தன்ன செம்பூத் தாஅய்
– நப்பண்ணனார்

விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வண்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் திசையெங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை தமிழீழ புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர்.

தமிழகத்தின் மாநில மலராக அறியப்படுவதற்கு காரணம் முருக கடவுள் ஆகத்தான் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் தமிழ்க் கடவுள் முருகனின் விருப்பமாதலால் அதன் காலத்தில் பூக்கும் இம்மலரும் சிறப்பு பெற்றிருக்கிறது.

பண்டைய அரச காலம் முதலே இது அங்கீகார மலராக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் போது காந்தள் மலர் மாலைகளை அணிந்து கொண்டதாக சங்ககால வரலாறு கூறுகிறது.

1 (1).jpg

இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என்றும் இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும், பற்றி ஏறுவதால் பற்றியென்றும்,  வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.

மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). லில்லி இன மலர் வகையை சேர்ந்தது.

நம் ஊரில் இதன் பேர் கண்ணு நோய் பூ. நெருப்பை போன்ற இப்பூவை பார்த்தால் கண் நோய் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. உண்மையில் இதற்கும் கண் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மலரும் நேரம் நம் மாவட்டத்தில் கண் நோய் சீசன், அவ்வளவே.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.

6511067575_42b026da75_b_d600.jpg

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.

கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

இந்தப் பூ கொடுக்கும் கிழங்குதான் கண்வலி கிழங்கு. இதைக் கார்த்திகைக் கிழங்கு என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). இதன் கிழங்கும், விதையும் மிகுந்த விஷத்தன்மை உடையவை. கிழங்கு கலப்பை போலத் தோன்றுவதால் கலப்பை எனவும் அழைப்பர். கண்வலி இப்போது பிரபல பெயர்.

நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும், தோல் நோய் வரும். மொத்த செடிடின் பகமும் விஷத்தன்மை கொண்டதே. வாந்தி, மயக்கம் தொடங்கி கோமா, லுகிமியே என மரணம் கூட உண்டாக வாய்ப்புள்ளது.

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை,அரணை,ஜலமண்டல விஷக்கடிகள் குணமாகும்.

எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை,சாரைப்பாம்பு, சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை,சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

slide3.jpg

வேலிகளில் இதை கண்டால் வெட்டி வீழ்த்தும் நிலையில் தான் நாம் இருந்து வந்தோம். இதனை மருத்துவ பயன்களை மக்கள் அறிந்திருந்தும் இதன் பண மதிப்பை வெளிநாட்டினரே நமக்கு கண்டறிந்து தந்தனர்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில் கிடைக்கின்றன. கொடியைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன.

அண்மை காலத்தில் ‘கோல்சிசின்’ மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ‘கோல்ச்சிகோஸைடு’ கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் புரட்சிகரமாக பயன் படுத்தப்படுகிறது.

இது ஐரோப்பிய நாடுகளில் கௌட்(gout) எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது.

அதிக அளவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கே விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலி மிக அதிக அளவிலும் அதற்கடுத்து நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளும் இந்த விதைகளை கொள்முதல் செய்கின்றன.

தமிழ்நாடு, அந்தமான் மற்றும் இலங்கையில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவில் டெல்லி, பாம்பே, ஓசூர், ஹைதராபாத் நகரங்களில் விதை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 95 % தமிழகத்தில் தான் சாகுபடி நடக்கிறது.

தமிழகத்திலிருந்து வாங்கப்படும் விதைகள் இங்கு அரைக்கப்பட்டு, பவுடராக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது. ஆண்டுக்கு 700 முதல் 1,000 டன் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால் விதைகளுக்கு கிராக்கி இருக்கிறது.15-250x250.jpg

ஒரு செடியில் 20 முதல் 150 காய்கள் காய்க்கும். ஒரு கிலோ எடையுடைய தரமான காய்களில் இருந்து கால் கிலோ விதை கிடைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திண்டுக்கல், கரூர், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் என்று பல இடங்களில் தீவிரமாக கார்த்திகைக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.

முதல்முறையாக 1980-ம் ஆண்டுகளில் மூலனூர் பகுதியில்தான் செங்காந்தள் சாகுபடி தொடங்கியது. தற்போது திருப்பூர் மாவட்டம், மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக்கு அடுத்தபடியாக உள்ளது செங்காந்தள் சாகுபடி.

இக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும்.

பாலையை தவிர மற்ற எல்லா வகை நிலங்களில் இது வளரக்கூடியது. பொதுவாக 2500 மீ உயரத்திற்கு மேல் மிக சாதரணமாக வளர்கிரது. கூடலூர் போன்ற இடங்களில் இந்த காலனிலையில் மிகச் சாதரணமாக காணலாம். ஆனால் தற்போது பல இடங்களில் தென்படுகிறது.

இந்த பயிர் பொதுவாக வறண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான். பல ஏக்கர் கணக்கில் இதன் விளச்சல் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மகரந்த சேர்க்கை பணிக்காக தேனீக்கள் கூட வளர்க்கப்படுகின்றன.

4.jpg

ஆரம்பத்தில் ஒரு கிலோ விதை அதிக விலைக்கு விற்கப்பட்டது, அதாவது 1500 – 2000ரூ அளவிற்கு விற்கப்பட்ட காலமெல்லாம் உண்டு. இதனால் கண்வலி மூலிகை சாகுபடியில் ஈடுபட்ட பலர் அதிக மகசூலை ஈட்டினர். ஆனால் தற்போது 900 ரூ கிடைப்பதே பெரும்பாடக உள்ளது.

விலை வீழ்ச்சி, இடைதரகர்களின் ஆதிக்கம் போன்றவற்றால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது, கிழங்குகள் பயிரிடப்படுவதும் குறைந்துவிட்டது

எது எவ்வாறாயினும் மருத்துவ பயங்கள் கொண்ட இந்த சங்க கால செடிகள் அதன் சிறப்பியல்பை வெளிப்படுத்தி காலங்கடத்து நிலைத்திருப்பது கவனிக்கத்தக்கது, இந்த கார்த்திகை மாதத்தில் செங்காந்தளை காண நேர்ந்தால் இது நம் மாநில மலரெனெ உங்கள் நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

references :

http://www.vikatan.com/pasumaivikatan/2007-jul-25/yield/86579.art

http://cchepnilagiri.blogspot.in/2015/07/blog-post_75.html

http://www.vavuniyavision.com/2015/11/blog-post_819.html

http://samayal.sunyellowpage.com/index.php/ta/பொது/மருத்துவம்/1632-கார்த்திகை-பூ-செங்காந்தள்-மலர்களின்-மருத்துவ-குணம்.html

http://www.thehindu.com/features/metroplus/society/hidden-glory/article6461947.ece

1 comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.