“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.”
– சண்
அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பும் போது இராவணனால் சிறைபிடிக்கப் படுகிறார். அனுமனின் செயலாலும் ராம புகழ்பாடும் பேச்சாலும் வானரத்தின் வாலில் தீ வையுங்கள் என ஆணையிடப்பட்டதும் அதனால் இலங்கையே தீக்கிரையானதும் நாம் அறிந்த இதிகாசமே.,
மகர்
வாலில் பற்றிய நெருப்பால் உடலில் ஏற்பட்ட வெட்க்கையை குறைக்க வரும் வழியில் ஒரு ஆற்றில் இறங்கி தம்மை குளிர்வித்தார் அனுமன்.
அப்போது அவர் உடல் சூட்டினால் வெளியேறிய உயிரணு அங்கு நீந்திக் கொண்டிருந்த மகர் என பெயருடைய மீன் போன்று உருவத்தில் இருந்த ஒர் ஊர்வனத்தின் உடலில் சென்றுவிட்டது, அதனால் அது கருவுற்றது. நடந்ததை அறியாமல் அனுமன் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
சில பதிப்புகளில் சற்று வித்தியாசமாக நதியில் கலந்த விந்தணு ஒரு கடல் கன்னியை சென்றடைகிறது.
அறிவியல் ரீதியில் சில மீன்களின் இனப்பெருக்க முறையில் பொதுவாக பெண்ணும் ஆணும் நீந்தி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும். பின்னர் பெண் மீன் தனது முட்டைகளை நீரில் வெளியிடும், உடனே ஆண் மீன் அந்த முட்டைகளின் மேல் தன் விந்தணுவை வெளியிட்டு முட்டைகளை கருவுறச் செய்யும் (Ovuliparity)
பின்னொரு தினம் இராவணின் சகோதர்களான அகிராவணனும்(மயில் ராவணன்) மகிராவணனும் அவ்விடம் மீன் பிடிக்க சென்றனர். வலையில் சிக்கியதை யெல்லாம் கொண்டு சென்றனர், அதில் மகரும் இருந்தது.
உணவுக்காக மகர் உடலை வெட்டிய போது அதன் வயிற்றில் பாதி குரங்கு பாதி ஊர்வன வடிவில் ஒரு உயிரினம் இருந்தது. அதுவே வளர்ந்து பின்னர் பாதாள பாதுகாவலானாய் மாறியது.
சுவன்னமச்சா
ஆனால் வால்மீகியின் இராமாயணம் போலல்லாது தாய்லாந்து மற்றும் ஏனைய தென்கிழக்காசியா இராமாயணங்களில் அனுமனின் கதை வேறு வகையில் சொல்லப்படுகிறது.
அக்கதையில் வானரபடைகள் இலங்கைக்கு பாலம் கட்டுவதை தடுப்பதற்காக இராவணன் தன் கடல் கன்னி மகளான சுவன்னமச்சாவை அவள் தோழிகளோடு அனுப்புகிறார். சுவன்ன(தங்க) மச்சா(மீன்).
வானரபடைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் மாயமாவதை உணர்ந்து யாரோ குறுக்கிடுகிறார்கள் என்பதை உணர்கின்றனர். சிலரை தொடர்ந்து பாறைகளை வீச சொல்லிவிட்டு அனுமன் வானர வீரர்களோடு கடலுக்குள் பாய்கிறார். அச்சமயமே ஒரு கடல் கன்னி பாறையை தூக்கி செல்ல பின்தொடந்தவர்கள் ஒரு கடல் கன்னிகளின் கூட்டத்தை காண்கின்றனர். அனுமன் அவர்களின் தலைவியை தேடினார்.
அலையின் அழகாய் ஒரு கடல்கன்னி அவர்கள் வருகையை கண்காணித்தது. அனுமன் அவளை நோக்கி சென்றார். எவ்வளவு திறமையாக நீந்தி சென்றும் அவள் தப்பிக் கொண்டே இருந்தாள். அனுமன் தாக்க தயாரானர், ஆனால் கடல்கன்னி மீது ஏற்பட்ட இனம்புரிய அன்பு அவரை தடுத்தது.
அவர் தன் வழிமுறைகளை மாற்றி மெல்ல கெஞ்சல் மொழியில் அவளை அழைத்தார். அவளும் பதிலளிக்க இருவரும் ஆழ்கடல் சென்றனர்.
சுவன்னமச்சை அவர் முகத்தை காணாது திரும்பி நின்றாள்.ஏன் நீங்கள் பாலம் கட்டுகிறீர்கள் என கேட்டாள். சீதை கடத்தப்பட்டதையும் ராமனுக்கும் அவள் தந்தைக்குமான போர் பற்றியும், ஏழு நாட்களுக்குள் இந்த பாலம் கட்ட தன் உயிர் மீது சபதம் வைத்துள்ளதையும் விளக்குகிறார்.
உணர்தலோடு சுவன்னா அனுமனை நோக்கி திரும்பினாள், அவள் கண்கள் காதலால் தழும்பியிருந்தது. இனியும் நான் உங்கள் பணிக்கு தடையாக இருக்க மாட்டேன். என்னுடைய கடல்கன்னியர்களிடம் எல்லா பாறைகளையும் திருப்பி வைக்க ஆணையிடுகிறேன்.
பாறைகளை பட்டு தெறிக்கும் கடல் அலைகளில் இவர்கள் அன்பு பகிரப்பட்டது. அன்பின் ஆழத்தில் அவர்கள் காதலர்களாக பிரிந்தனர். பிரியும் தருவாயில் அனுமன் சுவன்னமச்சைக்கு ஒரு விதை தந்தாக சொல்லப்படுகிறது.
இந்த சேரா காதலுக்கு பிறந்தவனே மச்சானு (மகரத்வாஜன் பெயர் இந்த கதைகளில்) பாதி குரங்கு வடிவும் மீதி கடல் கன்னியின் உடல் தோற்றமாக இருக்கிறார்.
அகிராவணன்
மீண்டும் மைய கதைக்கு வருவோம்.
இராவணின் சகோதரனான அகிராவணன் மகர்த்வாஜன்(தமிழில் மச்சவல்லபன்) என பெயரிட்டு தான் கண்ட மீன் போன்றவனை வளர்த்தான்.அனுமனுக்கு பிறந்தவன் இல்லையா..சிறு வயது முதலே போர்க்கலைகளில் சிறந்தவனாக அவன் வளர்ந்தான். அவனது வீரமும் விசுவாசமும் அகிராவணனை பெரிதும் கவர்ந்ததால் மகர்த்வாஜனை தனது பாதாள உலகின் காவலாளியாய் நியமித்தான்.
உலகின் அதிசிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவணன் அகிராவணிடம் இதை பற்றி கூறினான்.தான் நிச்சயம் இராமனையும் இலக்குவனையும் கடத்தி சென்று பாதாள உலகத்தில் சண்டிதேவிக்கு பலியிடுவேன் என்று சகோதரனுக்கு வாக்களித்தான் அகி.
இதனை அறிந்த விபிசன் உடனே அனுமனிடம் இதை பற்றி சொல்கிறார். மேலும் அகிராவணன் மந்திர தந்திரங்களில் வல்லவன், எனவே கவனமா இருக்க சொல்லி எச்சரிக்கிறார்.அகிராவணன் எறும்பு போலவும் காற்றாய் மாறியும் கூட அனுமனை தாண்டி உறங்கும் இராமனை நெருங்க முடியவில்லை.
இறுதியாக விபிசன் உருவத்திற்கு மாறி உள்ளே நுழைந்து விட்டார்.இராம லக்குமனையும் மயக்கத்தில் ஆழ்த்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார் அகிராவணன்.சற்று தாமதமாக விவரமறிந்த அனுமன் தான் ஏமாற்ற பட்டதுமன்றி இராமனை கடத்தி சென்றதில் கடும் கோபமடைந்தவர், அகிராவணை கொன்று ராமனை மீட்பேன் என பாதாளம் நோக்கி புறப்படுகிறார்.
மகரத்வாசன்
பாதாள உலகின் வாயிலுக்கு சென்ற வானர படை அங்கு விந்தையான உருவத்தில் உள்ள காவலாளியை சந்தித்தது. குறை மதிப்பிடு அவனோடு போரிட படைகள் சிதைந்தன. அனுமனே நேரடியாக மகத்வாசனோடு போரிட துவந்தம் பலமாக இருந்தது.
அதீதமாக யுத்தமிடும் இவன் திறன் கண்டு, இவ்வளவு சிறப்பாக சண்டையிடும் நீர் யார் என அனுமன் கேட்டார்,
நான் மகரத்வாசன். பாதாள உலகின் காவலாளி, அகிராவணின் விசுவாசமான போராளி,வீரத்தில் சிறந்த பலவான் அனுமனின் மகன் நான்.
நானே அனுமன், இவன் என் மகனா, குழப்பமானவர் தன் தியான சக்தியால் நடந்தவற்றை சிந்தித்து பின் புரிந்துக் கொள்கிறார். நடந்தவற்றை விளக்கி தான் ராமரை விரைவாக காக்க வேண்டும்,பாதாள உலகின் அரண்மனைக்கு என்னை இட்டுச் செல் என பணிக்கிறார்.
முதலில் அனுமனை தாழ்பணிந்து வணங்கிய மகரத், நான் அகிராவணின் சேவகன். நீங்கள் என் தந்தையானாலும் என்னால் உங்களை அனுமதிக்க முடியாது.ஒன்று என்னுடன் போர் செய்யுங்கள் அல்லது திரும்பி செல்லுங்கள் என்றான்! வேறு வழியின்றி தந்தையும் மகனும் போரிட்டினர்.
மிக தீவிரமாக நடந்த சண்டையில் யார் வெல்வார் என வானர படை பயந்தது.அனுமன் தன் பலத்தை பலமடங்காக்கி இறுதியில் மகரத்வாசனை தோற்கடித்தார்.அகிராவணின் அரண்மனையை நெருங்க மாயைகளால் சூழ்ந்திருந்தது.அனுமன் தனியாக உள்ளே சென்றார்.
பஞ்சமுகன்
அகிராவணனை கண்டதும் வேகத்தில் பலவாறு தாக்க முற்பட்டார்.எவ்வளவு முயற்சித்தும் மாயைகளை உடைத்து அவனை கொள்ள முடியவில்லை. அகிராவணது சக்தியை உடைக்க ஒரே வழி ஐந்து திசைகளில் உள்ள வெவ்வேறான விளக்குகளை ஒரே நேரத்தில் அணைப்பது மட்டுமே.அச்சயமே அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக(அனுமன், நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கருடன்) உருவெடுத்து ஐந்து திசைகளில் உள்ள விளக்குகளை அணைத்தார்.
சில பதிப்புகளில் அகிராவணனின் உயிர்நிலை விஷ வண்டுகளுள்ள(தேனீக்கள்) ஐந்து பெட்டிகளை ஒரே சமயத்தில் திறக்க வேண்டும்.ஆனால் ஒரு பெட்டியை திறந்தாலே அந்த வண்டு கடித்து இறந்து விடுவர்வார்கள்.எனவே அனுமன் பஞ்சமுக ரூபமெடுத்து ஐந்து பெட்டிகளையும் திறந்து வண்டுகளை கடித்து கொன்றுவிடுவார்.
அடுத்த கணமே அகிராவணின் மாயசக்தி குறந்தது, ஒரே கத்தி வீச்சில் அவன் உயிர் பறித்தார் ஆஞ்சநேயர். இராமனையும் இலக்குவனையும் மீட்டு வெளியேறுகையில் நடந்தவற்றை அறிந்த இராமர் அனுமனிடம் அவர் மகனையே அரசனாக்குமாறு சொன்னார்.அன்று முதல் அனுமன் மகன் மகரத்வாசன் பாதாளா உலகின் அரசனானான்.
அனுமனுக்கு உஜ்ஜைனி நகரத்தின் சான்வெர் என்ற இடத்திகில் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே அனுமன் சிலை இங்கு தலை கீழாக இருப்பதுதான். இதனால் அனுமன் இவ்விடத்தில் உல்டா அனுமன் என்று வணங்கப்படுகிறார். மயில்ராவணன் இராம லட்சுமனை பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் தலைகீழாகப் பாதாள உலகத்திற்குச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்தாராம்.
இங்கிருக்கும் பாரிஜாத மரங்களில் அனுமன் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு.இங்கே இராமன், சீதை, லட்சுமணன், சிவன் ஆகியோரின் சிலைகளுடன் அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது.
கல்யாண ஆஞ்சனேயர்
ஒரு பக்கம் கதை இப்படி இருக்க நம்மூரில் அவருக்கு வேறு வகையில் அதிகாரப்பூர்வாக திருமணம் நடத்தப்படுகிறது. வியாசரின் தந்தை மகரிஷி பராசரர் எழுதிய பராசரர் ஸ்ம்கிதா என்ற அனுமனின் முழு வாழ்க்கை பதிவில், அனுமனின் குருவான சூரிய பகவான் கல்வி, இசை, கலை, வேதங்கள் என வியாகரங்களையும் கற்று தருகிறார்.ஒரு மணாளனாக(கணவனாக) இல்லாது நவவியாகரங்களை முழுவதுமாய் பயில இயலாது.
இதனால் சூரியன் தனது கிரணங்களால் சுவர்ச்சலாதேவி என்ற பெண்ணை தன் மகளாக உருவாக்கினார். அனுமனது பிரம்மசரியம் கெடாமல் அவருக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்து நவவியாகரங்களையும் பயிற்று விக்கிறார் மாமனார்.இதனால் அனுமன் “நவவியாகரண பண்டிதன்” எனப்பட்டார்.
பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், கூடுவாஞ்சேரி அருகில் தைலாவரம் என்னும் ஊரில் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய எட்டடி உயர மூலவராக காட்சியளிக்கிறார்.ஆனால் சுவர்ச்சலாதேவி உச்சவராக மட்டுமே காட்சி தருகிறார்.
நம் புராணங்களில் வரும் நாயகர்களின் கதைகள் ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்றவாறு திரிபு அடைகின்றன.ஆனால் எவையும் சுவாரசியத்தை குறைப்பதில்லை.அனுமனை பிரம்மசரியாக வணங்க வைத்த அதே புராணங்கள் அவருக்கு மகருடனான உறவு, கடற்கன்னியுடனான காதல், சூரியன் மகளுடனான திருமணம் என வெவ்வேறு பரிணாமங்களை தந்து நம்மை வியக்கவும் வைக்கிறது.
References:
http://narasimhar.blogspot.in/2011/02/blog-post.html
http://rajiyinkanavugal.blogspot.com/2015/11/blog-post_11.html
1 comment
birammachari not be hanuman