சூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை

பிரபல சாதனையாளர்களையும் பெயர் மறந்த இந்தியர்களையும் வைத்து படம் உருவாக்குவது சினிமா வரலாற்றில் அவ்வப்போது அரங்கேறும் சிறப்பு வாடிக்கை தான். அந்த வகையில் தற்போது சூர்யா மிரட்டியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் தரவு வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தி அளவிற்கு வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் தமிழில் அரிது தான். பாலிவுட் திரையுலகம் தோனி, நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் என மோடி, சில்க் ஸ்மிதா வரை பல வெற்றி படங்களை தந்திருக்கிறது. மணிரத்னத்தின் இருவர், சமீபத்திய கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி என சிலவற்றை தவிர்த்து வேறு குறிபிட்ட வெற்றி படங்கள் இல்லாலது கோலிவுட்டின் குறையே.

டீசரில் சூர்யாவின் ஆவேசத்தையும் நடிப்பு வெறியையும் பார்க்கும் போது அந்த குறை தீரும் என ஆறுதல் கிடைக்கிறது. இறுதி சுற்று படத்தை தந்த சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரும் இந்த திரைப்படம் ஏர்டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது.

vikatan_2020-01_0c135c04-6d86-457e-9376-75de60110ee5_soorai.png

நெடுமாறன் ராஜாங்கம் என்ற பெயரோடு வாரணம் ஆயிரம் சாயலில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் கோபிநாத் வரலாற்றோடு மிக ஒன்றியே எடுக்கப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் துவக்கத்தில் இராணுவ விமான கேப்டனாக பணியாற்றிவர். 1978 பங்களாதேஷ் பிரிவினை போது போர் விமானங்களை இயக்கியிருக்கிறார். அதன் பின் தனது 28 வயதிலேயே ராணுவ ஓய்வை வாங்கிக்கொண்டு தன் ஊரான கர்நாடகா வந்து சேர்ந்துவிட்டார்.

சில தொழில்கள் செய்த பின் அவர் துணிந்து இறங்கிய சவால் தான் குறைந்த செலவில் விமான பயணத்தை தரும் திட்டம். அதற்கு முதலில் விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமல்லவா. அங்கேயே ‘கையில் 6 ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு ஒரு ஏரோ ப்ளைன் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறேன்னு சொன்னப்ப, எவண்டா இந்த லூசு என பார்த்தது’ என்ற சூர்யாவின் வசனமுடன் ‘பருந்தாகிறது ஊர்குருவி’ என ஜீவிபிரகாஷ் பாடல் தொடங்குகிறது டீசர்.

டீசரின் ஒரு காட்சியில், டெக்கான் ஏர் என்ற விமானம் பின்புலமாக வருவதை நீங்கள் கவனிக்க தவறியிருக்கலாம். தனி விமான நிறுவனம் பேச்சைத் தொடங்கிய இடத்திலிருந்தே கோபிநாத்துக்கு பல தோல்விகள், அவமானங்கள் என அடிமேல் அடி விழுந்தது. பல வருட போராட்டத்திற்குப் பிறகு, அத்தனை அனுமதியையும் பெற்று, 2003-ம் ஆண்டு ஏர் டெக்கான் (Air Deccan) விமான நிறுவனத்தைத் தொடங்கினார்.

18 இருக்கைகள் கொண்ட விமாங்களை குறைந்த செலவில் அவர் இயக்கி வந்தார். அதிக விமான போக்குவரத்து இல்லாத குஜராத் போன்ற பகுதிகளால் இந்த விமானங்கள் இயக்கப்பட்டது. எனவேதான் இந்தியா முழுவதும் இதற்கான அறிமுகம் குறைவாக இருக்கிறது.

மிகப்பெரும் தொழில் ஜாம்வாங்களாக இருந்த டாட்டா போன்றவர்களால் கூட அப்போது விமான நிறுவனம் சாத்தியமில்லாமல் இருந்தது. ‘நான் ரத்தன் டாட்டா இல்லடா’ என்ற வசனமாகவும் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். 2006 ல் கோபிநாத் அவரளுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Chevalier de la Legion d’Honneur அளித்து கௌரவிக்கப்பட்டது.

500 பைலட் 45 விமானம் என இருந்தாலும் வியாபார ரீதியாக பல சிக்கல்கள் வந்தது. காலப்போக்கில் வணிக பிரச்சனைகளால் 2007 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் மல்லையாவின் கிங் பிஷ்ஷர் உடன் இணைக்கப்படுகிறது. மெல்ல மெல்ல இவரின் பங்குகள் குறைந்து தனது அங்கீகாரத்தை இழக்க துவங்கினார்.

மீண்டும் எழுதப்படாத காகிதமாய் வாழ்க்கை நின்றது. ஆனால் காலம் வேறு கணக்குகளை வைத்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் கிடைத்த பணத்தில் சரக்கு விமானம், தனிபட்ட விமானம் முயற்சிகள் மேற்கொண்டார்.

Suriya-770x433.jpeg

பின்னாளில் மல்லையாவின் கையிலிருந்த பங்குகள் முழுவதையும் தனதாக்கி அதே டெக்கான் பெயரில் அரசின் உடான் திட்டத்தின் அடிப்படையில், இன்று 34 க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கம் தனி ஆளுமையாக எப்படி போராடி உயர்ந்தார் என்பது படத்தின் சுவாராசிய கதையாக அமையும்.

இந்த விமானங்கள் தற்போது பெரும்பாலும் வட மாநிலங்களிலேயே இயங்கி வருகிறது. அரசு ஒப்புதலோடு அதிகபட்ச நிர்ணய விலையாக 2500 மட்டுமே வைத்து இவை இயங்கி வருகின்றன. 2017 ஆம் மும்பை மற்றும் நாசிக் இடையே ஏர் டெக்கான் இயக்கப்பட்டது. எதிர்காலத்தில் முக்கிய இந்திய பகுதிகளிலும் வர திட்டமிருக்கிறது.

தடுக்க இயலாத சக்தியாக தன்னை தகவமைத்து கொண்ட இவர், கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருது, Personality of the Decade Award என பல விருதுகள் கௌரவிக்க தன்னைத்தானே செம்மைப்படுத்தி கொண்டார். மனதில் உறுதிகொண்டு கனவு சிறகுகளோடு பயணிக்கும் போது எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு கோபிநாத் ஒரு சான்று, அது சூர்யா விற்கும் பொருந்தும் என்பதில் ஆச்சர்யமில்லை. சூரரைப் போற்று தமிழ் சினிமா போற்றும் உயரத்திற்கு பறக்க வாழ்த்துக்களுடன்..

சினிமா விகடன் இணைய பக்கத்தில் இடம்பெற்ற கட்டுரை

Add comment