Image default
History Travel

போய் வரவா : பரங்கிமலை பாதை

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்த போது மதில் தாண்டி சாலையை நிரப்பி செல்லும் வாகனங்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். சாலையின் மறுபுறம் விமான நிலையத்தை மறைத்தவாறு மலை ஒன்று வீற்றிருந்தது. அதன் அடியில் இராணுவத்திற்கு சொந்தமான மைதானம் அழகிய மரங்களை தூண்களாக அமைத்து பசும்போர்வையை தரையில் போர்த்தப்பட்டது போல காட்சியளித்தது.

மலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் விளையாடுவது போல அவ்வப்போது மலை மேகங்களுக்கு இடையே சில காகித சிறகுகள் பறந்த வண்ணம் இருந்தன. இந்த சென்னை நகர சிகரத்தை அறிந்து கொள்ள முற்பட்ட போதுதான் செயின்ட் தாமஸ் மவுண்ட் பற்றியும் அறிந்து கொண்டேன்.

சென்னை வந்து சேர்ந்த சில வருடங்களில் பலமுறை பரங்கிமலை எனப்படும் மவுண்ட் பற்றி பலமுறை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் எப்போதும் பரங்கிமலை ஏறி அங்கு என்னவிருக்கிறது என்பதை பார்க்கவேண்டும் என்று தோன்றியதில்லையே என வியந்தேன்.

Untitled by Divya S V on 500px.com

கிறிஸ்தவ-இந்து சமய பின்னணிகளை தாண்டி இந்திய வரலாற்று பதிவுகளின் அங்கமாக அமர்ந்திருக்கும் பரங்கிமலையின் தோள்களில் ஏறி அதை பற்றி பகிர வேண்டுமே என திட்டமிட்டு மறுதினமே நண்பனை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

பல்லாவரம் விமான நிலையத்தை தாண்டி கிண்டிக்கு முன்னரே இடது பக்க வளைவில் உயர்ந்து நின்றது பரங்கிமலை. அரசு வாகனங்கள் செல்வதற்கு வழியில்லை என்றதால் பைக்கிலே சென்றோம். கொஞ்ச தூரத்தில் ராணுவ பயிற்சி மையத்தை கண்டு வழிமாறி வந்துவிட்டோமோ என்று தயங்கிவிட்டோம்.

எங்கள் முன்னாள் சென்ற வாகனங்களை கண்டதும் சுதாரித்துக்கொண்டு அதை தொடர்ந்தவாறே சிறிய கொண்டை ஊசி வளைவுகளில் ஏறிச் சென்றோம். சிறிய தூரம் தான். வண்டியை நிறுத்திவிட்டு படிகளை கடந்தபோது இரு கிறிஸ்துவ சிலைகள் எங்களை போல அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.

பழமை மாறாத கிறிஸ்துவ பாணியில் அழகிய சர்ச் எங்களை வெள்ளை முகத்துடன் வரவேற்றது. இயேசுவின் புதிய கட்டளைகளை பரப்புவதற்காக தேர்ந்தெடுக்கபட்ட பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புதிய தோமையர் கிபி 52-ல் இந்தியா வருகை தந்து நற்பணிகள் செய்ததாகவும் இந்த திருத்தலத்தை எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

கேரளாவின் முசிறி பகுதியில் தரையிறங்கிய புனித தோமையர் அங்கு சில திருச்சபை தேவலாயங்கள் எழுப்பினார், அன்றைய கேரள மக்கள் பலருக்கு இயேசுவின் நற்செய்திகளை கூறி மதம் மாற்றினார். பின் சில வருடங்களில் அந்நாளில் புகழ்பெற்ற மயிலாப்பூர் வந்தடைந்தார்.

கிபி 72ல் அவர் புனித தோமையர் குன்று என இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்த போது ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார். அவரது உடல் மயிலாப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கே அவர் அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் அவரது சமாதி அங்கே வழிபடப்படுகிறது.

மயிலை சாந்தாம்(San + Thome) தேவாலயம் கூட போர்ச்சுக்கீச்சியர்களால் கட்டப்பட்டு இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இவரே இந்தியாவின் புனித பாதுகாவலராகவும் அறியப்படுகிறார். ஆனால் இந்தியாவில் இருக்கும் சில கிறித்தவர்களே இவரது இந்தியாவிற்கு வந்தாரா என்பதையே வருகையை சந்தேக கண்ணோடு பார்க்கின்றனர். சரி அது வேறு மாயகதை.

தேவாலயத்தின் பின் திசையில், சிலுவையில் அறைந்த இயேசு சிலை மிக நேர்த்தியாக வடிவமைந்து இருந்தது. இன்னொரு பக்கம் இங்கு வருகை தந்த போப் ஒருவரின் சிலையும் அன்னை தெரசா அழகிய உருவமும் நின்றிந்தது.

மலையிலிருந்து வசிகரிக்கும் தோற்றத்தில் சென்னை தெரிந்தது. கூச்சல் இல்லை, மூச்சை அடக்கும் புழுதி இல்லை. மறுகரையில் இருந்து பார்த்த மைதானம் இப்போது இன்னும் பசுமையாக காட்சியளித்தது. மழைக்காலங்களில் குளிரோடு இந்த இடம் ரம்மியமாக இருக்கும் என பேசிக்கொண்டோம்.

அப்படியே இயேசு உறங்கிய மரம், சிலுவை பாதை உருவங்களை கடந்து தேவாலயத்திற்குள் சென்றோம். குழந்தை இயேசுவையும் அன்னை மேரியையும் ஒருதர ரசித்துவிட்டு இறை ஆலயத்தின் முன்னர் அமர்ந்து அமைதி காத்தோம். அமைதி பல சிந்தனைகளை தரவல்லது.

Cloud from hell by Bharath Rengaraj on 500px.com

அப்படியானால் பரங்கிமலை என்ற மற்றொரு பெயரோடு இந்த இடம் வழங்கபடுவது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. அதன் விளக்கம் இந்து புராண கதைகளில் இருப்பது மேலும் ஆச்சர்யத்தை தந்தது. அதாவது பிருங்கி முனிவர் என்கிற பயங்கர சிவபக்தர் இருந்தாராம்.

அப்படியொரு பக்தி என்றால் சிவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார். பார்வதி கோபம் கொண்டு அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் நின்ற போதும் வண்டாக உருமாறி சிவனை மட்டும் வலம் வந்தாராம். கோபமடைந்த தேவி முனிவர் உடல் வலிமையை இழக்க செய்துவிட்டார்.

இரக்கம்கொண்டு சிவபெருமான் நடக்க இயலாமல் போன முனிவருக்கு மூன்றாவது காலை அருளினார். மூன்று கை மூன்று கால் முனிவர்! பின்னர் சிவனின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த குன்றில் தவம் செய்ததாகவும் அதனாலே பிருங்கி மலை என பெயரானதாகவும் ஐதிகம்.

பெயர் மருவி தற்போது பரங்கி மலை என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சாட்சியாக பரங்கிமலை இரயிலடியில் நந்தீசுவரர் கோயில் அமைந்திருக்கிறது, சிவபெருமான் இங்கே நந்தி வடிவில் காட்சிதருகிறார்.

இதுபோதாதா தற்போதைய அரசியல் சூழலுக்கு, கடந்த சில வருடங்களாக கார்த்திகை தீபத்தன்று விளக்குகளை ஏற்றிக் கொண்டு மலையை சுற்றி காவல் துறை கண்காணிப்பில் கிரிவலம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்து புராணம் கதை ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய கண்டத்து அயலார்கள் தான் பரங்கிமலையை ஆயிரமாண்டுகளாக பராமரித்து வருகின்றனர். போர்ச்சுக்கீசியர்கள், அர்மேனியர்கள் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வரை இங்கிருக்கும் தேவாலயத்திற்கு அருஞ்ச்சேவை பணியாற்றியுள்ளனர்.

நான் முன்னரே சொன்னது போல நான் இங்கு வந்தது பரங்கிமலையின் வரலாற்று பிண்ணனியை அறிந்த ஆர்வத்தில் தான். ஆங்கிலேயர்கள் முழு மூச்சோடு இந்தியாவை ஆள துவங்கிய பின்னர் இங்கு தயாரிக்கபட்ட வடக்கத்திய வணிக பொருள்களை ஏற்றுமதி செய்ய அதன் நிலஅளவை அறிந்திருப்பது முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

அதற்காக இந்திய வரைபடத்தை உருவாக்க திட்டமிட்டனர். திப்பு சுல்தானை வெற்றி கொண்ட பின்னர் 1800 ல் மேஜர் வில்லியம் லாம்டன்(William Lambton) தலைமையில் பாரத தேசத்தை முழுவதுமாக அளவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிலவரையறை திட்டம் செயல்படுத்தப்பட்டு முதன்முதலாக அடித்தளமிட்டது பரங்கிமலையில் தான். பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகியவற்றை இணைத்து ஒரு கற்பனை முக்கோணம் உருவாக்கப்பட்டது.

இந்த முக்கோண அளவியல் கன்னியாகுமரியில் 78 பாகை மெரிடியனில் விரிந்து இமயமலை வரை 2575 கி.மீ. தூரம் வரை விரிவடைந்தது. அதன் பெரும் பயனாகவே இமயமலை சிகரம் கண்டிபிடிக்கப்பட்டு உலக வரைபடத்தை மாற்றியது.

அதுவரை தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர்(Andes) தான் உலகின் உச்ச நிலப்பரப்பாக கருதபட்டது. அந்த வரலாற்றை மாற்றி எவரெஸ்ட் பெயரை எழுதியது இந்த பரங்கிமலையில் பாதம் வைத்து எடுக்கப்பட்ட நில அளவையே.

லாம்டன் இந்த பயணத்தை முடிப்பதற்குள் 1823இல் காலமானார். அவரது மாணவர் இந்த பணியை தொடர்ந்து வெற்றிகரமாக முற்றுபுள்ளி வைப்பதற்குள் 50 ஆண்டு காலம் நிறைவடைந்துவிட்டது. அவர் சீடன் பெயரே ஜார்ஜ் எவரெஸ்ட். அதன் காரணமாகவே மிகப்பெரிய மலைச்சிகரத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இமயமலை மட்டுமல்லாது இந்தியாவின் மிகப்பெரும் மலைகளும் சிகரங்களும் முறையாக அளக்கப்பட்டது. பல்வேறு துறைமுகங்கள் ஏற்றுமதிக்காக உருவமைக்கப்பட்டன. கடல் மட்டத்தில் இருந்து ஒவ்வொரு நகரமும் எத்துனை உயரத்தில் இருக்கிறது என்று பதிவாக்கப்பட்டது.

இந்திய தேச வரைபடத்தின் முதற்கோடு வரையப்பட்ட வரலாற்று சிகரத்தின் மீது நான் இப்போது சர்வ சாதாரணமாக நின்று வானில் சிறகடிக்கும் அலுமினிய பறவைகளை ரசித்துக் கொண்டிருக்கும் தருணமே என்னுள் சிலிர்ப்பை தந்தது.

எண்ணச்சிதறல்கள் கடந்து சுற்றி கவனித்த போது என்னுடன் பல மனிதர்கள் ஆகாய விமானங்கள் ஒவ்வொன்றாக சிலுவையை கடந்து செல்வதை கண்டு கொண்டிருந்தனர். யவருக்கும் என்னுள் இருக்கும் சிலிர்ப்பு படர்ந்தாக தெரியவில்லை.

இங்கு வரும் பலரும் கிறித்தவர்கள், மீதமுள்ளவர்கள் இங்கிருந்து பார்த்தால் விமான நிலையத்தில் இருந்து கண்ணுக்கு தெரியாத புகையை உமிழ்ந்து செல்லும் வானுர்திகள் நன்றாக தெரியும் என அதை கவனிக்க வந்தவர்கள்.

வானை வேடிக்கை பார்க்கும் மனிதம், நாம் மண்ணின் பெருமையை என்றுமே உணர்வதில்லையோ என்று பொருமிக்கொண்டேன். வரலாற்றை விடுங்கள்.. ஒருவேளை தேவாலயம் இல்லாமல் இருந்திருந்தால் இப்படியொரு இடம் இன்னும் இருந்திருக்குமா எனும் சிந்தனை சீறிட்டது! ஆமென் சொல்லிவிட்டு பூமியில் குதித்துவிட்டேன்.

Related posts

தக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு

Seyon

செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Seyon

மனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்

Seyon

Leave a Comment