இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித். பக்ரீத் என்றால் இஸ்லாமிய நண்பன் வருவான் ஆட்டுக்கறி கொடுப்பான் என்பதே நாம் அறிந்தது. ஆனால் மற்ற இந்திய பண்டிகைகள் போல பக்ரீத் ஏன் சிறப்பான தினமாக கொண்டாட படுகிறது என்பதை நாம் அறியவில்லை.
பக்ரீத் பண்டிகையை இறைத்தூதர் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும்.
இறைத் தூதர் இப்ராகிம் 4000 ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் வாழ்ந்தார். பல ஆண்டுகளாக இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இறுதியில் அவரது இரண்டாவது மனைவி ஃஆசரா மூலமாக ஒரு அற்புத ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டார். இந்நிலையில் இப்ராகிம்க்கு ஒரு கனவு வந்தது. அதில் இறைவன் தோன்றி இந்த உலகில் நீ பொக்கிஷமா நினைக்கும் ஒன்றை எனக்கு தியாகம் செய்(பலியிடு) என கட்டளையிட்டார். இப்ராகிம் தனது வாழ்வின் அற்புதமாக எண்ணியது தனது மகனையே.
கடவுளின் கட்டளை அவர் ஏற்றுக் கொண்டாலும் மகனிடமும் கேட்டார். இஸ்மாயில் சிறிதும் தயங்காமல் சம்மதித்தார். இதனால் தான் பெற்ற அரிய புதல்வனை அவரே பலியிட துணிந்தார். அப்போது சிஃப்ரயீல் எனும் வானவரை அனுப்பிய இறைவன் அதை தடுத்து, இஸ்மாயிலுக்கு பதிலாக இந்த ஆட்டை எனக்கு பலியிடவும் என கட்டளை பிறப்பித்தார்.
அந்த நிகழ்விலிருந்து தான் இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இந்த தியாகத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை இஸ்மாயில் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள் எனவும் நம்பப்படுகிறது. இப்ராகிம்யின் இன்னொரு மகனான ஐசக் யை யுதர்கள் தங்களின் மூதாதையராக எண்ணுகிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த புனித நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நடைபெறக்கூடிய சிறப்பு தொழுகைக்குப் பின்னர், அவர்கள் வளர்த்த ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது.
இந்த முறையே தற்காலத்தில் குர்பானி(QURBANI) என சொல்லப்படுகிறது.
பலியிடப்பட்ட இறைச்சியை மூன்று பாகங்களாக பிரித்து ஒன்றை உற்றார் உறவினர் , நண்பர்களுக்கும், இரண்டாவது பங்கை ஏழை, எளியோருக்கு கொடுக்கின்றனர். மூன்றாவது பங்கை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்த பலியிடலுக்கு பயன்படுத்தப்படும் விலங்குகள் ஆண் பெண் எதுவாயின் இருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தி அடைந்ததாக இருக்க வேண்டும், உடல் நலத்தில் எவ்வித குறை இல்லாததாகவும் இருக்க வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படக்கூடிய இந்த தியாகத் திருநாள் அரேபியா பதமான ஈத் அல்-அதா என அழைக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் ஆடு பலிடுவதை அடிப்படையாக வைத்து பக்ரித் அதாவது பக்ரித் ஈத்-அல்-தா பெருநாள் என அழைக்கப்படுகிறது.