Image default
Tradition

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்

பழமொழிகளின் உச்சரிப்பு நாம் அன்றாட பேச்சில் பெரும் தாக்கம் கொண்டது. அவற்றில் ஒரு சில முக்கிய உதாரணங்களை முந்தைய பகுதியில் பார்த்தோம் பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1.
 
உண்மையான அர்த்தத்தை விடுத்து தேவைகேற்ப அதனை மாறுதல் படுத்தி பல பேரை பாதிப்புள்ளாக்கி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  அதிலும் பழமொழிகளில் அதிகமாக உதாரணபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவை வாயில்லா ஜீவன்கள் தான். அவற்றில் தேர்ந்தவற்றை பார்ப்போம்.
 
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.
சூடு வைக்கிறது இல்லங்க,சுவடு சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக கருதுவார்கள். அதை விடுத்து ஒருவரை குத்தி காட்டுவதற்கு மட்டுமே இந்த பழமொழி இப்போ பயன்படுது.
 
ஆமை புகுந்த வீடு விளங்காது
கல்லாமை, இயலாமை, முயலாமை இல்லாதவங்க வீடு விளங்காதுனு பொதுவாக சொல்வாங்க, அதே நேரம் ஆம்பி(காளான்) பூத்த வீடும் உருப்படாதுனு சொல்வதுண்டு. ஆன ஆமை வந்தாலும் வராட்டியும் விளங்கறது தான் விளங்கும்.
 
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்
தனியா இருந்த நடுக்குவோம் சரி, நாலு பேர் இருந்தாலே போட்டு பொதைச்சிடுவொம், இதுல படை வேறயா. இது நாகாஸ்திரம் பற்றி சொல்லறது. மகாபாரத மற்றும் இராயண கதைகள் வரும் மிக சக்தி வாய்ந்த இந்த ஆயுதம் எதிரி படையை தெறிச்சு ஓட செய்யும். இராமரே ஒருமுறை இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தில் சிக்கி பின் கருடனால் காக்கப்படுவார்.
 
கல்ல கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டா கல்லை காணும்
கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
இங்க நாயகன் என்பது திருமாலை குறிக்கும், மருவி வருவதற்கும் ஒரு அளவில்லையா. நாயகன் நாயாவதா. இத சொன்னவன தான் எங்கனு காணும்.
 
சிவ பூஜையில் கரடி
முக்கியமான வேலை செய்யும் போது யாரவது குறுக்க வந்துட்ட போதும் கரடியாக்கிடுவோம். ஆனால் மன்னர் காலத்தில் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். அதான் சிவ பூசையில் கரடி. இசைக்காக சொன்னது, இப்ப தொந்தரவுக்காக பயன்படுது.
 
குரைக்கிற நாய் கடிக்காது 
குழைகிற நாய் கடிக்காது
குரைக்கிற நாய் ஏன் கடிக்காது? ஒரு தடவ நாய்க்கு அன்பா சாப்பாடு போட்டு வருடி விட்டா, அதுக்கப்புறம் குழைஞ்சி கிட்டே உங்கள சுத்தும். அன்பு காட்டறவன யாரும் அடிக்கவும் மாட்டாங்க, நாய் கடிக்கவும் செய்யாது. ʕ•́ᴥ•̀ʔっ
 
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே 
குதிர் என்றால் ஆற்றில் இருக்கும் மண் திட்டுகள், அது இருக்குதுனு நம்பி எறங்குனா ஆபத்து.
இன்னொரு பார்வை : மங்குதிரை- வானம் மங்கியிருக்கிறது என்றால் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், அதனால் ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் எனவே இறங்கக்கூடாது. மங்கு திரை என்றால் கானல் நீர் என்றும் அர்த்தம் வரும்.
 
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். ஆனை = ஆ + நெய் = பசுவின்(ஆவின்) நெய். பூனை = பூ +நெய் = பூவின் நெய் (தேன்) அதாவது சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது.
அதே நெய் வயதான காலத்தில் சாப்பிட உடல் ஒத்துக் கொள்ளாது.ஆனால் தேன் சாப்பிடலாம். ஆனாலும் ரொம்ப ஆடக்கூடாது, எல்லாருக்கும் ஒரு காலம் வரும் என்கிற அர்த்தமே நல்லருக்கிறது.
 
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
கழுதையின் தோல் கெட்டால் குட்டிச் சுவர். பொதி சுமக்கும் கழுதை தோல் அரிப்பால் அவதிப்பட்டால் தன் உடலை போய் சுவத்தில தேய்க்கும். அது தான் குட்டி சுவர், மற்றபடி இளைஞர்கள் ஓய்வு எடுக்கும் இடமல்ல(!!)
 
கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம் 
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம். கழு என்பது ஒரு வகையான கோரைப்புல். அதுல பாய் தைக்கும் போது கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப் போட்டால் பூச்சிகள் கிட்டே வராது. பாவம்டா கழுதை.
 
வர வர மாமியார் கழுதை போல் ஆனாள் 
கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறும்.அதுபோல ..உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனா பாவம்டா அந்த கழுதை,உங்களலாம் புளு கிராஸ் சும்மாவா விட்டுச்சு.
 
நாம் விலங்குகளை பற்றிய பழமொழிகளில் துவங்கி மாமியாரை வைத்து முடித்திருக்கிறோம். விலங்குகளை பாடாய்ப்படுத்திய சமூகம் பெண்களை மட்டும் சும்மாவா விட்டது. அடுத்த பாகம் முழுக்க பெண்களை பற்றிய பழமொழிகளை பாப்போம். 

Related posts

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்

Seyon

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம். மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.

Paradox

இராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்

Paradox

Leave a Comment