உணவியல் : திடமான உடலுக்கு தினை

உணவியல் : திடமான உடலுக்கு தினை

“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால்
பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு”

–நாலடியார். 344தானியங்கள் உண்பது உடலுக்கு ஏற்றது, நன்மை பயக்கும் என்றறிந்தும் நம்மால் அதனைச் சரிவிகித உணவாக உண்ண முடியவில்லை. தானியங்கள் என்றாலே வயதானவர்கள் நோயுற்றவர்கள்தான் சாப்பிடுவது என ஒரு தவறுதலான மனப்போக்கு இந்தக் கால இளைஞர்களிடம் நிறைந்து உள்ளது.

சென்ற தலைமுறை வரை கம்பு, கேழ்வரகு எல்லாம் விரும்பிச் சாப்பிடும் சராசரி உணவுப்பட்டியலில் இருந்து வந்தது. அவர்கள் அதற்கேற்ற உடல் உறுதியோடு வலிமையாக வாழ்ந்து சென்றனர். இன்று நம் காலத்தில் தினை என்ற தானியப் பெயரையே மறந்து விட்டோம்.

பொதுவாக நெல், கோதுமை, சோளம், கம்பு(millet), கேழ்வரகு(ragi), உளுந்து, எள் போன்றவற்றை தானியமாகவும் தினை, சம்பா, கடலை, கொள்ளு ஆகியன சிறுதானியப் பயிராகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் தினை உலகளவில் அதிகமாக விளைச்சல் செய்யப்படும் அத்தியாவசியப்  பயிர்களில் ஒன்றாகச் சந்தையை ஆக்கிரமித்து இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

தினை சர்வதேச அளவில் ஒரு முக்கிய டயட் உணவு. உடல் எடையை குறைக்கவும், இனிப்புத் தன்மை இருப்பினும் சர்க்கரை நோயாளிகளுக்கு நண்பனாகவும் இருக்கிறது. மேலும் தினை மாவில்  வைட்டமின் பி1 இருப்பதால் இருதயம், தசை ஆகியவற்றின் வலிமைக்கும், புரதச்சத்து இருப்பதால் மறதிக்கும், காய்ச்சல், வலிப்பு ஆகியவற்றிற்கு  மருந்தாகவும் விளங்குகிறது.

-siruthaaniyam-millet

தினை எல்லா காலத்திலும் பயிரிட வல்லது. இதனால் வறட்சி சமயங்களில் பயிரிடத்  தகுந்த தாவரமாக முக்கியத்துவம் பெறுகிறது.  பூச்சிகள் இந்தப் பயிரினத்தை தாக்காது என்பதாலும் விளைச்சல் அதிகம் தருவதால் இது பெரும் வளர்ச்சி அடைந்த பயிர்விப்பாக இருக்கிறது.

இதன் தோற்றம் ஐரோப்பாவில் இருந்து வந்ததாகக்  கருதப்பட்டாலும் சீனாவில் இருந்துதான் உலக நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. கிமு 6000 காலகட்டத்திலே சீனர்கள் இதைப்  பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் பயணர்கள் வழியாக உலகம் முழுதும் படர்ந்துள்ளது. சீனாதான் தற்போது தினை விளைப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா இதிலும் இரண்டாவது இடத்தில்தான்  இருக்கிறது.

தொன்மையான காலத்திலிருந்து தமிழ்நாட்டில் தினை பயன்படுத்தியதை சங்க இலக்கியங்களில் காணப்பட்டதை  ஏராளமான குறிப்புகள் வழி அறியலாம். பத்தியம் அல்லது திட்டமான உணவு முறைகளில் பிரதானமாக தினை தமிழகத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

“தினைக் காலுள் யாய்விட்டகன்று மேய்க்கிற்பதோ”                                                                          –கலித்தொகை .108, 33

தினையால் செய்த கஞ்சி சங்ககால மக்களின் அடிப்படை உணவாக இருந்துள்ளது. தினைக் கூழ் அல்லது களியும் தயார் செய்வார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தினை கூழ் கொடுப்பார்களாம். பெண்கள் தினையை காவல் காத்ததாக சங்க தமிழ் பாடல்கள் உள்ளன.

“தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
–திருக்குறள்.104

தினை கிளிகளுக்குப்  பிடித்தமானவை என்பதாலும் யானைகள் தின்றுவிடுவதாலும் உயரத்தில் பரண் அமைத்துத் தட்டை, கவண், சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். பறை ஒலியும் உபயோகப்படும். தினை அறுவடையின் போது பெண்கள் பாடல் பாடுவது இன்றும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

மலைவாழ் மக்களுக்குத்  தினை எப்போதும் ஒரு துரித உணவுப்  பொருள். தானிய வகைகளில் அதுவே சத்து நிறைந்தும் சுவை மிகுந்தும் இருக்கிறது. தினையுடன் தேன் சேர்த்து விருந்தினர்களுக்கு கொடுப்பது பழங்குடியினர்  பண்பாடு. இந்திய வடபகுதிகளில் சில இனங்கள் இதனை இன்றும் தொடர்கின்றனர்.

இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர் கொண்ட தினையைச் சங்கப்   புலவர்கள் பறவைகள், யானை துதிக்கையுடன் ஒப்பிட்டுப்  பாடல் தந்தனர். வளர்ந்த தினைக்கதிர்கள் பார்ப்பதற்கு நரியின் வால் போல காணப்படுவதால் இதனை ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டைல் மில்லட்‘ என அழைக்கின்றனர். ‘இட்டாலியன் மில்லட்‘ எனவும் சொல்லப்படுகிறது.

அரிசியை விட மிக அதிகப்  புரதச்சத்து நிறைந்தது தினை. தினை அரிசி, தினை சேமியா, தினை தோசை, தினை லட்டு என தினையை எவ்வாறு வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். தினையை நீங்கள் பார்த்ததில்லை என்றால் குருவிகள் வளர்க்கும் உங்கள் நண்பரின் பறவைக் கூண்டைச்  சென்று பாருங்ககள். லவ் பேர்ட்ஸ்-க்கு தினைதான் முக்கியத்  தீவனமாக கொடுப்பார்கள்.

சீனாவின் வடக்குப்  பகுதிகளில் ஏழை மக்கள் அதிகமானோர் தினையைத்தான் அன்றாடம் உண்கிறார்கள். ஒரு காலத்தில் பண்டிகை சமயத்தில் மட்டுமே சாப்பிடும் உணவான நெல் அரிசி பிரதான சமையல் உணவாக மாறியதன் விளைவு இன்று தானியங்களின் அழிவுக்கு மறைமுகமாக வழிவகுத்துவிட்டது.

தினையை ஏழைகளின் உணவாக உருவகப்படுத்திய சர்வதேச உணவுச் சந்தைதான் இதன் வணிக ரீதியான பயன்பாட்டை மாற்றியது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பணக்காரப் பயிர்களின் சந்தைப்  பொருளாதாரம் சத்து மிகுந்த தாவரங்களின் இழப்புக்கு அடித்தளமிடுகிறது. சத்தின்மையால் உண்டாகும் நோய்கள் ஒரு மருத்துவ சந்தையை உருவாக்கி விட்டதும் இதற்குக்  காரணம்.

இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டில் உண்டான பசுமைப்  புரட்சி தானியங்களின் விளைச்சலை அதிகப்படுத்தியது. அரிசி, கோதுமை போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் இருப்பு அதிகரிக்கத்  துவங்கியது. அதோடு மற்ற தானியங்களும் தனக்கான இடத்தைப்  பிடித்துக் கொண்டது.

பொதுவாகவே சில தானிய வகைகளில் லைசின் போன்ற சத்துக்கள் குறைந்து இருக்கும். எனவே சீரான சரிவிகித உணவைத்  திட்டமிட்டுச்  சாப்பிடுவது அத்தியாவசியமாகிறது. வெறும் ஓட்ஸ் மட்டும் சிலர் சிற்றுணவாக மேற்கொள்கிறார்கள். அது தவறு. மற்ற தானியமும் சேர்க்க வேண்டும். ஒப்பிடுகையில் ஓட்ஸ் தினை இரண்டுமே ஒத்த வகையிலான சத்துகளைக்  கொண்டுள்ளன. ஆனால் அதிகமாக வியாபார மயமாக்கி விளம்பரம் செய்வதால் ஓட்ஸ் மட்டும் பலரை அறிய வைக்கிறது.

இயற்கையான தானியமானது அதிகளவு உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள், கார்பொவைதரேட்டுகள், கொழுப்பு, எண்ணெய் மற்றும் புரதம் நிறைந்திருக்கிறது. ஆனால் இயந்திரங்கள் கொண்டு உமி நீக்கப்படும் போது மேற்கண்ட அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்பட்டு மீதமிருக்கும் முளை சூழ்தசையில்(Endosperm) கார்போஹைட்ரேட் மட்டுமே எஞ்சியிருக்கும்.

இதனால் இவற்றில் ஊட்டச்சத்து மிகக் குறைவாக காணப்பட்டது. இதற்கு மாற்றான தினை, சம்பா, ராகி போன்ற சிறுதானியங்களைப்  பயிரிட போதுமான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தத்  தவறியது. இதனால் தானிய உற்பத்தி குறைந்தும் நெல், கோதுமை பயிரிடாத சமயங்களில் விளைவிக்கப்படும் ஊடு பயிராக உருமாறியுள்ளது.

ஒவ்வொரு தேசத்திலும் அந்த நாட்டின் காலச் சூழலுக்கு ஏற்ப தானியங்கள் நடவு செய்யப்படும். சைபீரிய நாடுகளில் குளிருக்கு ஏற்ப கம்பு மற்றும் பார்லி அதிகமாகவும் நெல், கோதுமை மிதமான வெப்ப நாடுகளிலும் பயிராக இடப்படுகிறது. இவை இயற்கையாகவே மிருதுவான தனிமையோடு இருக்கும்.

தினைதான் பூமியில் அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். தற்போது பல இலட்சம் டன் கணக்கில் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலகளவிலான உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சமீப காலங்களில் அனைவரும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருவதால் தினை உண்பது மீண்டும் அதிகரித்து வருகிறது.

ஊரெங்கும் சிறுதானியங்களின் மகத்துவம் மீண்டும் உணரத் துவங்கியிருக்கும் இந்தக் காலத்தில் தினையின் விளைச்சல் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. மேலும் அரிசியை விடச் சாகுபடி செய்யக் குறைவான செலவே ஆகிறது. அதே சமயத்தில் மூட்டை 3000 முதல் விலை போகிறது.

மணற்பாங்கான பகுதிகள் தினை சாகுபடிக்கு ஏற்றது. செம்மண், இருமண் கலந்த வடிகால் பகுதி சிறந்தது. சாகுபடி காலம் மூன்று மாதங்கள். ஆடி, புரட்டாசிப் பட்டம் இந்தப் பயிருக்கு ஏற்றதாகும். கோடைக்கு பின் உழவு செய்து பயிரிட வேண்டும். புழுக்களைக் களைவதால் பூச்சிகள், பறவைகள் அதிகம் வராது. இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு அவசியம் தேவையில்லை. இருபது முதல் நாற்பது நாளில் ஜீவார்மிர்தம் வயல் முழுதும் தெளிக்க வேண்டும். அவை பயிர் வளர்ச்சிக்கு ஊக்கமாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும். வேறு எந்த உரமும் தேவையில்லை.

90 நாளில் கதிர் முற்றி அறுவடைக்குத் தயார் ஆகிவிடும். தினை தாள் கூட உணவுப் பொருள்தான். ஏறத்தாழ ஏக்கருக்கு 800 முதல் ஒரு ஹெக்டேருக்கு 1800 கிலோ தானியம், 5500 கி தட்டையும் விளைச்சல் பெறலாம்.

தினை பயிரிடுவது தமிழக பகுதிகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை சொல்கிறது. புதுச்சேரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சாகுபடி அதிகரித்துள்ளது. நல்ல இலாபம் கிடைப்பதாலும், வறட்சியில் கூட வளர்வதாலும் எதிர்பார்ப்பும் பெருகியுள்ளது.

அவல், உப்புமா, தோசை, புட்டு, முறுக்கு, பகோடா, பாயாசம், இடியாப்பம், தேன் லட்டு, சாதம், கிச்சடி என எண்ணற்ற உணவு வகைகளைத் தினை கொண்டு செய்யலாம். கிலோ ரூ.80 முதல் 90 வரை கிடைக்கும்.

மேலும்  மேய்ச்சல் நில நாடோடிகள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுக்கு தானியத்தை பிரதான் உணவாக வழங்குகிறார்கள். இதன் காரணமாக பெரும் கிடங்கில் இவை டன் கணக்கில் தேவைப்படுகின்றன. இந்திய அரசும் சிறுதானிய விளைச்சலை விவசாயிகளிடம் ஊக்குவைப்பதின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், விவசாயிகளும் இலாபம் பெறலாம்.

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் சலினா என்ற இடத்தில் அமைந்துள்ள நில நிறுவனம்(Land Institute) போன்ற அமைப்புகள் அதிக மகசூல் தரக்கூடிய தானிய ரகங்களை உருவாக்குவதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தானிய வளர்ச்சி பெருகியுள்ள நிலையில் பல்லாண்டு செழிக்கும் தானியப் பயிர்களை உருவாக்கி மண் அரிப்பை குறைத்தல், உரப்  பயன்பாட்டை தவிர்ப்பது, செலவினத்தைத் தடுப்பது எனப் பல் நோக்கில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

ஆதி சமூகத்திலிருந்து தானியங்கள் மீது மனித இனத்திற்கு இருந்த பிணைப்பு தொன்று தொட்டுத் தொடர இவ்வகையான ஆய்வுகள் முக்கியத்துவமாக அமைகின்றன.

“தேனும் தினை மாவும்
பாகும் பருப்பு –இவை
நான்கும் கலந்துனக்கு – நான் தருவேன்
கோளமுதே சங்கத்தமிழ் மூன்றும் தா!”

என்று தினை மாவைக் கொடுத்து சங்கத் தமிழ் பெற்ற இனம் இன்று லவ் பேர்ட்ஸ்களுக்கும், முருகனுக்கும் மட்டும் படைத்து உணவுக் கலாச்சார மாற்றத்தில் சிக்கித் திணறுவதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

Add comment