தமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954

தமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954

தமிழ் சினிமா என்றாலே காதல். அம்மா சென்டிமென்ட், சண்டை காட்சிகள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. புதிய கதைகளம், தொழில்நுட்ப யுக்தி என இன்றைய தமிழ் படங்கள் உலக அரங்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இத்தகைய மாற்றங்கள் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. கருப்பு வெள்ளை காலத்திலேயே எத்துனையோ அரிய திரைக்கதை கொண்ட படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. சிலவை வெற்றிப்படங்கள், பலவும் சோதனை முயற்சிகளாக பேழையில் வைக்கப்பட்ட மறந்த முத்துகளாகவே இருந்துவிட்டன. அவற்றை பட்டை தீட்டி பார்க்கலாம் வாருங்கள்.

1954 ஆம் ஆண்டு வெளிவந்து தேசிய விருது வாங்கிய படம் அந்த நாள். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நாயகனாக தோன்றிய இந்த படம் தான் தமிழ் சினிமாவின் முதல் noir வகை திரைப்படம் அதிலும் குறிப்பாக Locked Room Mystery வகையை சார்ந்தது. அதாவது ஒரு குற்றம் நிகழ்வதையும், அதனை கதையில் வரும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் பார்வையில் விவரிப்பார். இறுதியில் யார் குற்றம் புரிந்தனர் என துப்பறியும் வகையில் எழுதப்படும் கதை.

ஆரம்ப கால தமிழ் சினிமாவில் குறைந்தது எட்டு பாடல்களாவது இருக்கும். ஆனால் திரைக்கதைக்கு முக்கித்துவம் அளித்த அந்த நாள் படத்தில் பாடல்களே இல்லை. 50 களில் புராண இதிகாசங்களை மையபடுத்தியே பெரும்படங்கள் வெளிவந்தன. அந்த விதியை மாற்றி மேற்குலக கலைபாணியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்த படம். பாடல்கள், நடனம், சண்டை காட்சிகள் இல்லாத முதல் தமிழ் படமும் இதுதான்.

நாயகனை மட்டுமே மையபடுத்தி கதைகள் உண்டான சமயத்தில் நாயக்கிக்கும்(பண்டரிபாய்) சரிபங்கு அளித்ததோடு நிறுத்தமால் அவரை வைத்து உலக போரின் ஐரோப்பிய அரசியலை பேசியுள்ளனர். பெண் விடுதலை என்று போராடி கொண்டிருந்த சமயத்தில் கொலையும் செய்வாள் பத்தினி என அரிய ஒன்லைன் கதையை எடுப்பதெல்லாம் ஏக துணிச்சல்.

படத்தின் சுவாரசிய பகுதியே அவர்கள் எடுத்துக் கொண்ட கதைகளம் தான். 1943 அக்டோபர் 11 இரவு அன்று இரண்டாம் உலகபோரின் ஒரு பகுதியாக ஜப்பான் விமானங்கள் சென்னை மாநகரத்தின் மீது குண்டு வீசியது. அதற்கு மறுநாள் காலை, ரேடியோ இன்ஜினியரான ராஜன்(சிவாஜி கணேசன்) சுட்டு கொல்லப்பட்டு இறந்து போகிறார். போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை அன்று மயான அமைதி பூண்டிருந்தது. மக்கள் மறுபடியும் குண்டு வெடிக்குமோ என்ற அச்சத்தில் ஊரை விட்டு வெளியேறி கொண்டிருக்கும் சமயத்தில் போலீஸ் வாகனம் ராஜன் வீட்டிற்கு விரைகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் நாயுடு உடன் C.I.D சத்தியானந்தம் இணைகிறார். ஷெர்லோக் ஹோம்ஸ் போல ஒரு தொப்பி, ஆங்கிலேய ஆடை பாணி, விசாரணையில் ஒரு புன்னகை நெடி, எதனையும் சிந்தித்து முடிவெடுக்கும் கில்லாடியாக வருகிறார் ஜவகர் சீதாராமன். இவர்தான் படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார்.

ராஜன் இறந்த இடத்தில் அருகில் பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் கிடக்கிறது. எனவே திருடன் கொலை செய்திருக்கலாம் என முதலில் சந்தேகம் வருகிறது. துப்பறிவாளர் அதை மறுக்க, பணத்தை விட்டு சென்றிருப்பதால் இங்கே வேறு ஏதோ மர்மம் நிகழ்ந்திருக்கிறது என பல்வேறு கோணத்தில் ஆய்வை துவங்குகிறார்.

அப்பாவி தம்பி பட்டாபி, கோபக்கார தம்பி மனைவி, சந்தேகப்படும் படியான பக்கத்து வீட்டு பணக்காரர், ரகசிய காதலி, தேசபக்தி மிகுந்த மனைவி என ஒவ்வோர் இடமும் விசாரணை நடக்கிறது. அவரவர் தங்கள் பாணியில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானமாக சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கதை சொல்லும் போதெல்லாம் மட்டுமே சிவாஜி திரையில் தோன்றுகிறார்.

ஒரே காட்சி ஆனால் வெவ்வேறு கதாபாத்திரங்களோடு நடிக்க வேண்டும். தனித்தனி ஆளுமைகளுக்கு ஏற்றார்போல் தனது சாயலை மாற்றி ரசிக்க வைக்கிறார் சிவாஜி. கல்லூரி காலங்களில் மாணவனாக மிடுக்காக மேடையில் பேசுவதும். இஞ்சினியர் ஆனதும் ஏளன சைகை செய்து ஆங்கில வார்த்தைகளில் ஜாலம் செய்வதிலும் ரசிக்க வைக்கிறார் சிவாஜி.

யார் இந்த கொலையை செய்திருப்பார் என மக்களை ஆவலோடு வைப்பதோடு ஒவ்வொரு நடிகர்களும் ஸ்கோர் செய்யுமாறு காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர். ஜப்பான் குண்டுத்தாக்குதலுக்கும் ராஜன் கொலை மர்மத்திற்கும் உள்ள தொடர்பை இறுதியில் அவிழ செய்கிறார்கள். ராஜன் ஒரு ரகசிய உளவாளி. 50 களில் ஓர் Spy Thriller.

மேலும் படத்திற்கு வசனங்கள் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்துள்ளன என்பது அந்த நாள் பார்த்தால் புரியும். படத்தின் கிளைமேக்ஸ் க்கு முன்னாள் வரும் தேசத்தை பற்றிய வசனங்கள், பெண்களும் அந்த கால அரசியலில் எவ்வளவு நாட்டம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் இயக்குனர்.

நேர்த்தியான படத்தொகுப்பு, காட்சி படுத்திய விதம், தேவைப்படும்வி பொது மட்டுமே இயக்கப்படும்று விறுவிறுப்பான பின்னணி என எல்லாமே மிளிர்கிறது. படத்தின் இறுதிக் காட்சியில் குற்றவாளியாக சந்தேகப்படும் நபர்களின் கையில் ரிவால்வர் கொடுத்து கொலை நடந்த அறையில் நிற்க வைத்து துப்பறியும் காட்சி அன்றைய ஆங்கில படங்களுக்கு இணையாது என்று சொல்வதில் மிகை ஏதுமில்லை.

குண்டுவெடிப்புக்கு பின்னான சென்னை நகரம், அந்த கால காவல் ஜீப் வாகனம், ஜப்பானில் தயாரிக்கபட்ட டிரான்ஸ்மிட்டர், கைரேகையை பதிவெடுத்து பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிப்பது என அக்கால சென்னை நினைவுக்கு அழைத்து சென்ற இந்த படத்தை 100 இந்தியா சிறந்த திரைபடங்களில் ஒன்றாக கருதுகிறது CNN News18 Channel.

அந்த நாள் படம் ஒரு கலை புரட்சியாக கருதினாலும் அன்றைய தமிழ் ரசிகர்களிடம் இது மிகுந்த வரவேற்பை பெறவில்லை. பாடல்கள் இல்லாதது ஒரு காரணம் என்று சொன்னாலும் முக்கிய காரணமாக கருதப்படுவது சிவாஜியின் மரணம் தான். பராசக்தி, மனோகரன் படம் வெளியான பின்னர் சிவாஜிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிய சமயம் அது. முதல் காட்சியிலேயே நாயகன் இறந்து போவதால் ஏமாற்றம் அடைந்தார்கள் ரசிகர்கள்.

காலப்போக்கில் விருதுகள் பெற்ற படமாக இருந்தாலும் மக்களிடம் மனதில் பதிவுபெறாத படமாகவே இருந்துவிட்டது அந்த நாள். இன்று அமேசான் பிரைமில் காணக்கிடக்கிறது அந்த நாள் திரைப்படம். காலத்தை கடந்து நிலைத்து நிற்கும் இந்த திரை காவித்தை சுவராசியமாக ரசிக்க விரும்வுவோருக்கு அமேசான் பிரைமில் காணக்கிடக்கிறது அந்த நாள்(1954) திரைப்படம் . .

Add comment