காதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்

காதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்

புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா?

ஏன் வாலண்டைன் அட்டை அளிக்கிறோம், ரோஜாக்கள், சாக்லெட் பழக்கம் யார் துவங்கியது, மற்ற உலக நாடுகள் எவ்வாறு கொண்டாடுகிறது, சிங்கில்ஸ் இதனை வேறு பெயரில் எவ்வாறு கொண்டாடி மகிழ்கிறார்கள் மேலும் இந்து மத அரசியல் எவ்வாறான சர்ச்சைகளை தருவிக்கிறது என்பதை பற்றியே இந்த பதிவு.

பண்டைய ரோம் நாட்டில் லூப்பர்காலியா(Lupercalia) என்ற பேகன் பண்டிகை முறை வழக்கத்தில் இருந்தது. நகரில் உள்ள ஆண்கள் கூடி விலங்குகளை பலியிட்டு அதன் ரோமத்தால் திருமணமாகாத பெண்களை அடிப்பார்கள்(கல்லால் அடித்தார்கள் எனவும் சொல்லப்படுகிறது).

கருவுறுதலை வளப்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுடிருந்த காரணத்தால் பெண்களும் அதை மனமாற ஏற்றுக் கொண்டு அடி வாங்கினர். பின்னர் ஒரு குவளையில் இருக்கும் பெண் பெயரை தேர்ந்தெடுத்து அந்த பண்டிகை முடியும் வரை உறவு வைத்துக் கொள்வர்.

தேர்ந்தெடுக்கும் இணையின் பெயரை தங்கள் ஆடையில் பொருத்தி ஒரு வார காலம் அணிவர், இதன் வழி தங்கள் துணையை மற்றவர்களுக்கு அறிய படுத்தினர். to wear your heart on your sleeve என்ற கூற்று இதிலிருந்தே உருவானதாக சொல்கிறார்கள். சில சமயம் இந்த உறவு திருமணமாக உருமாறும்.

ரோம் கிறிஸ்த்துவ மத கட்டுப்பாட்டின் கீழ் வந்தபோது அவர்கள் பேகன் பண்டிகையை அறவே நிறுத்தி மாற்றாக ஒரு தினத்தை பிரகனபடுத்த விரும்பினர். இந்த காலகட்டத்தில் தான் வாலண்டைன் உலகிற்கு அறிமுகமானார்.

3ம் நூற்றாண்டு காலத்தில் இளைஞர்கள் திருமண உறவால் குடும்பத்தை விட்டு பிரிய மறுப்பதால் போர் படையில் இணையும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் கிளாடிஸ் மிமி என்ற அரசர் ரோமானியர்கள் திருமணம் செய்ய கூடாது என்ற விந்தையான தடை உத்தரவை பிறப்பித்தார்.

மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்.

பாதிரியாராக இருந்த வாலண்டைன் காதலர்களுக்கு ரகசியமாக கந்தர்வ முறையில் திருமணம் செய்து வைத்தார். இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். பின்னர் இவருக்கு சிறையிலேயே 270 ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறைக் காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசு மேல் அன்பு வைத்திருந்த வாலண்டைன் இறக்கும் முன் காவலையும் மீறி அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார். அதில் Your Valentine என குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் பரவி பாதிரியார் பெயர் புகழ்பெற்றது.

பல நுற்றாண்டுகள் வாலண்டைன் ஒரு பிரபல கதை மாந்தராக இருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பிய வசம் வந்த காலத்தில் போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி(Pope Gelasius 1) வாலண்டைனை புனிதராக அறிவித்தார்.
உண்மையில் பார்த்தால் அவ்வையார் போல பலர் வாலண்டைன் என்ற பெயரில் இருந்துள்ளனர். 1969 போப் சபை சரியான தரவுகள் இல்லாததால் அவர் பெயரை நீக்கி பின்னர் சேர்த்துக் கொண்டது.

ஐரோப்பிய முழுதும் பிப்ரவரி 14 வாலண்டைன் தினம் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. கவிஞர்கள் அதை பாடினார். ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜூலியட்டை எழுதினார். சுவரசியமாக ஆண்டுதோறும் வாலண்டைன் தினத்தில் 1000 க்கும் மேற்பட்ட காதல் கடிதங்கள் ஜூலியட் பெயருக்கு வந்து சேர்கிறது.

1537 ல் இங்கிலாந்து அரசர் ஹென்றி(Henry VII) பிப்ரவரி 14 அதிகாரப்பூர்வ வாலண்டைன் தினமாக அறிவித்தார். விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்த்து அட்டைகளில் கையெழுத்து ஈடுவது கெட்ட சகுனமாக கருதப்பட்டதால் அவர்கள் x என்று எழுதினர். இதையே தற்போது Xoxo என்று சொல்வதின் தோற்றம்.(Xoxo என்றால் கட்டி அனைத்து ஒரு உம்மா தரும் என பொருள்)

மேலும் காதல் வாழ்த்துடன் சிவப்பு ரோஜாவை வைப்பதும் இந்த காலத்தில் தான் உருவானது. சிவப்பு ரோஜா ரோம் காதல் கடவுளின் விருப்பமான மலர்.
வாலண்டைன் தினத்தில் பல டன் ரோஜா மலர்கள் உலகம் முழுதும் பகிரப்பட்டுகிறது. இதில் 73 சதவீதம் மலர்கள் ஆண்களாலே வாங்கப்பட்டு காதலிக்கு கொடுக்கப்படுகிறது. பெண்கள் 27 % தான்.

அன்றைய தினத்தில் இனிப்புகள் சாப்பிடுவதை பெண்கள் விரும்புகிறனர். உலகில் சாக்லேட் அதிகமாக விற்பனை ஆகும் சமயம் இதுவே. 1848 காட்பரி நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்ட் தன் காதலிக்கு இதய வடிவ பெட்டியில் சாக்லேட் கொடுத்து அசத்தினார். தற்போது 3 கோடிக்கும் மேலே இதய வடிவ பெட்டிகள் விற்பனை ஆகின்றன.

1913 ல் ஹால்மார்க் அட்டைகள் புகழடையும் வரை காதலர் தினம் ஐரோப்பாவை தாண்டி பெரிதாக பரவியிருக்க வில்லை. இவர்களின் விளம்பர யுக்தியால் வாலண்டைன்ஸ் டே அன்று ஒரு சர்வதேச சந்தையாக உருவானது. மெல்ல அமேரிக்கா, ஆசியா என உலகை ஆட்கொள்ள துவங்கியது.

முக்கியமாக வாழ்த்து அட்டைகள் விற்பனை அசர வைத்தது. சராசரியாக உலகம் முழுதும் ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகள் பகிரபடுகிறது. புவியில் இரண்டாவது பெரிய அளவிலான பகிரல் இதுவே. பெண்களுக்கு தேவையான நகைகள் முதல் உள்ளாடைகள் வரை பெரும் விற்பனை மையமாக 14 மாறியது. வைரங்கள் அதிகம் விற்பனையாவதே காதலர்களால் தான்.

ஆசியாவில் கொரியா தான் காதலர் தினத்தில் பெருமளவு களைகட்டுகிறது. அங்கு எல்லா மாதமும் 14 ஆம் தேதி காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில். குறிப்பாக ஏப்ரல் 14 சிங்கிள் ஆக இருப்பவர்களுக்கான தினம்.

சர்வதேச அளவில் தனியாக இருப்பவர்களின் விழிப்புணர்வு(Singles Awareness day – S.A.D) தினமும் பிப்ரவரி 14 தான். தேசிய ஒற்றையர் தினமாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. தனியானவர்களுக்கு மார்க்கெட்டில் பல சலுகை விலையில் பொருள்கள் கிடைக்கும் தினமது.

மேலும் காதல் என்பது எல்லோரும் மீதும் அன்பு செலுத்துவதற்க்கானது என புரிய வைக்கவும். இந்நாளில் நண்பர்களுடன் பயணங்கள் செய்வர், தன்னார்வ பணிகளில் ஈடுபடுகின்றனர். காதலர் தினத்திற்கு எதிரான தினமாகவும் இது கருதப்படுகிறது. மார்டி கிறாஸ் எனப்படும் பேரணி விழாவும் அதே நாளில் ஐரோப்பாவில் நடக்கிறது.

சீனாவில் நவம்பர் 11 அன்று சிங்கிள்ஸ் தினம், அன்றைய தினத்தில் நாட்டிலேயே பெரிய சலுகை தினமாக உள்ளது. பல கோடி கணக்கில் சலுகை விலையில் தனியோருக்கு பொருள்கள் விற்பனை ஆகின்றன. ஆண்களுக்கு தேவையானவை மட்டுமில்லாமல் உணவு விற்பனையும் அதிகம்.

நண்பன் மீது அன்பு கொண்டவர்கள் பின்லாந்து செல்லலாம். பின்லாந்தில் பிப் 14 நண்பர்கள் தினம்(Ystävänpäivä). அல்லது உங்களுக்கு நீங்களே பரிசுகள் அனுப்பி கொள்ளலாம். அமெரிக்காவில் பல பெண்கள் இதை தான் செய்கிறார்களாம்.

காதலர் தினம் என்றால் காதலிக்கு தான் பரிசளிக்கிறார்கள் என்பது தவறு. ஆசிரியர்கள் தான் அதிகளவில் வாழ்த்து அட்டைகள் பெறுகின்றனர். குழந்தைகள், அம்மா, மனைவி, கடைசியாகத் தான் காதலி வருகிறாள். 3 சதவீத மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு பரிசளிக்கிறார்கள்.

சரி இந்தியா எப்போதும் வித்தியாசமான நாடு தான், ஏனெனில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் 1880 காலத்தில் பரவிய வாலண்டைன் இந்தியாவிற்கு 1990ல் தான் வந்தடைந்தார். விளம்பரங்கள் வழியாகவும் அன்றைய சமயத்தில் இந்தியாவிற்கு அறிமுகமாக தொலைக்காட்சி வழியே பிரபலம் அடைந்தது.

முக்கியமாக MTV நடத்திய நிகழ்ச்சிகள் இதை பெரிதுபடுத்தின. உலக வணிகர்கள் இந்திய சந்தையை அபகரிக்க துவங்கிய காலம் அன்றிலிருந்தே துவங்கி விட்டது. பொருளாதார தாராளமயமாக்கல் அவர்கள் பெரும் வாசலை திறந்து விட்டது. வாழ்த்து அட்டைகள் எங்கெங்கும் பரவியது, பின்னர் அது கலாச்சாரமானது.

ஆனால் இளைஞர்களை போல எல்லோரும் அதை ஏற்றக்கொள்ளவில்லை. சிவசேனா, இந்து முன்னணி, ராம சேனா, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் போன்ற அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தன. இந்திய பாரம்பரியத்திற்கு எதிரான மேற்கத்திய ஏகாதிபத்தியமாக இதை அவர்கள் சாடினார். மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி செய்து நவீன காலனித்துவ ஆதிக்கத்தை செய்வதாக போர்க்கொடி உயர்த்தினர்.

நாடெங்கும் எதிர்ப்பு பேரணிகள் நடந்தன. முக்கியமாக நடுத்தர வர்க்க மக்கள் இதை பெருமளவு ஆதரித்தனர். பெற்றோர்களால் பார்த்து செய்யப்படும் திருமணம், இந்திய கூட்டுக் குடும்ப முறைக்கு எதிரான கலாச்சார நிகழ்வாக வாலண்டைன் தினம் கருதப்பட்டது.

இத்தனைக்கும் இந்தியா மற்ற உலக நாடுகளுக்கு முன்னமே காதல் கலையை வெளிப்படையாக செய்து வந்தது. கூபிட்(Cupid) க்கும் முன்னாலே காமதேவன் இங்கு கொண்டாடப்பட்டார். கஜுராஹோவில் உள்ள சிற்றின்ப பாலுணர்வை தூண்டும் சிற்பங்களே அதற்கு சாட்சி. எல்லா இந்திய கோவில்களிலும் சிற்றின்ப சிலைகள் இருப்பதை கவனிக்க இயலும்.

மன்னர் காலத்தில் காமனுக்கு நிகழ்த்தப்படும் விழாக்கள் நிறுத்தப்பட்டன. பொதுவெளியில் காதல் மேற்கொள்ளுவது அபத்தமாக கருதப்பட்டது. அதை நம் இலக்கியங்களும் ஆதரித்தன. நவீன இந்தியாவில் காதல் திருமணங்கள் பெருமளவில் மறுக்கப்பட்டன.

சாதி மத பாகுபாடுகள் இதற்கு ஒரு காரணம். மேலும் காதல் ஜிகாத்(Love Jihad) என சொல்லப்படும் ‘இஸ்லாமிய ஆண்கள் காதல் திருமணம் செய்வதாக சொல்லி இந்து பெண்களை மதமாற்றம் செய்யும் முறை’யை வன்மையாக கண்டிப்பதாகவும் பார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக துவங்கிய இந்து கட்சிகளின் பேரணிகள் பின்னாளில் கலவரமாக மாறியது. காதலர்கள் பொது இடங்களில் வன்மையாக தாக்கப்பட்டனர்,
வலுக்கட்டாயமாக தாலி கட்ட சொல்லி வற்புறுத்தப்பட்டனர். மறுத்தால் சகோதரன் என சொல்லி ராக்கி கட்ட சொன்னார்கள்.
காதலர்கள் பொதுவிடத்தில் முத்தமிட்டாலோ கட்டி அணைத்தாலோ எங்கள் படை அவர்களை தாக்கும் என மத தலைவர்கள் பேட்டி அளிக்கப்பட்டது.

மும்பையில் பல பார்கள் நள்ளிரவில் தாக்கப்பட்டது. பல தன்னார்வ அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் இதனை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் பல பெற்றோர்களுக்கு மறைமுகமாக இது சரியென பட்டது. இந்தியாவில் பெரும்பகுதி நடுத்தர மக்கள் தான் இதனால் பாதிப்படைகின்றனர்.

ஒருவகையில் சந்தை பொருளாதார நிகழ்வாக இதை எதிர்த்தாலும் மதத்தின் பெயரில் நிகழ்த்தும் வன்முறையை ஏற்க இயலாது. எல்லா நாடுகளிலும் பிப்ரவரி 14ல் அதிக காதல் விருப்பங்கள் தெரிவிக்கப்படும் ஆனால் இந்தியாவில் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படும் தினமாக மாறியது வேதனைக்குறியதா இல்லை வேடிக்கையானதா என தெரியவில்லை.

Add comment