Image default
Entertainment

ஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்? ஒரு சமானியனின் பார்வையில்

கேமாராவை வைத்து திரைப்படம் உருவாக்கும் தொழிற்நுட்பம் உலகிற்கு வந்த அடுத்து இரண்டு வருடங்களிலேயே மதராஸபட்டினத்திற்கு அது அறிமுகமாகிவிட்டது.ஒற்றை நிமிட குறும்படம் தொடங்கி மௌனப்படம், சலனப்படம், பேசும்படம், முப்பரிமாண படம் என திரைத்துறையின் பரிணமிப்புக்கு ஏற்றவாறு தமிழ் திரையுலகும் தன்னை தகவமைத்து கொண்டது.

1937 ல் வெளிவந்த சிந்தாமணி படம் ஒரே திரையரங்கில் ஒரு வருடம் ஓடியது. அதன் பிறகு எத்துணையோ வெள்ளி விழா படங்களை நாம் கண்டு ரசித்து கடந்து வந்துவிட்டோம்.

அதே வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்து நின்றால் கதை இன்று வேறாக இருக்கிறது. வெள்ளி வந்துவிட்டாலே பகலவன் கதிர்கள் போல திரையரங்கை தேடி வந்த ரசிகர்களை இன்று காணவில்லை.

புராண கதைகளில் ஆரம்பித்த தமிழ் சினிமா ‘அம்பாள் என்றடா பேசினாள்’ என பகுத்தறிவும் பேசி, நெஞ்சம் மகிழும் விருது படைப்புகள், ஆச்சர்யத்தில் வியந்த சோதனை முயற்சிகள், நாயகனின் சகாசங்கள் நிறைந்த மசாலா விருந்துகள், செவி குளிரும் இசை மொட்டுகள் என அதன் தனி இயல்பால் இந்திய திரையுலகையே திகைக்க வைத்த தமிழ் சினிவா இன்று கலையிழக்கிறது.

பிரம்மாண்ட வசூல் தரும் வெற்றிப்படம் எல்லாம் வேண்டாம், போட்ட பணத்தை எடுக்குமளவு ஓடும் சராசரி படமாவது எடுங்கள் என்று தயாரிப்பாளர்கள் ரகசியமாக குமுறும் அளவிற்கு திறமைகள் இல்லமால் போகிவிட்டதா தமிழ் திரைச்சமுதாயம்?

நிச்சயம் இல்லை. திறன்கள் இங்கே குவிந்து கிடக்கின்றன. அது சென்றடைய வேண்டிய பாதை தான் தவறுதலாக இருக்கிறது. கடந்த வருடத்தில் குறைந்தது 150 படங்களாவது வெளிவந்திருக்கும்.

அதில் சிறந்த படங்களை பட்டியலிட்டால் பத்து படங்கள் தான் மிஞ்சும். முன்னணி நாயகர்களின் பல படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையாமல் வேதனையை தான் மிச்சம் தந்துள்ளன.

ரசிகர்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள் என்பதை இன்றைய திரை பிரபலங்கள் மறந்து விட்டார்களா என தெரியவில்லை.

ஆங்கிலேயர்கள் முதன்முதலில் மதராஸில் ஒரு படத்தை மக்களுக்கு போட்டு காண்பித்தனர். ஒரு ரயில் முழுவதும் ஓடி நிற்கும், அவ்வளவே படம்.

அன்று ரயில் நம் மீது வந்து மோதிவிடும் என்று பயந்து ஓடிய ரசிகர்கள் இன்று சாஹோ படத்தில் பிரபாஸ் தலைகீழாக குதிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என சுட்டிக்காட்டும் அளவிற்கு முன்னேறிவிட்டார்கள்.

தற்போது மட்டுமல்ல 1960 களின் ஆரம்பத்தில் இருந்தே அயல் நாட்டு மொழி படங்களை தழுவி வெற்றி கொடுக்கும் முறை இங்கு இருந்தது. அன்று மேற்கத்திய உலகை அறியாத ரசிகர்களுக்கு அது புதுமையானதாக இருந்தது.

அதே பாணியை இன்றைய இயக்குனரும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முறை ரசிகர்களும் அவர்களுக்கு இணையாக உலக படங்களை பார்க்கின்றனர். எனவே இந்த நகல் ஜாலங்கள் இன்று எடுபடுவதில்லை.

உண்மையான தழுவல் என்பது அசல் படத்தை விட சிறப்பாகவும் அந்தந்த மண்ணிற்கு ஏற்றாற்போல் ஒத்து இருத்தல் வேண்டும். பெயரை கூட சொல்லமால் காப்பியடிக்கும் புதிய தலைமுறையிடம் அது இல்லை.

கலகலப்பு, மான்ஸ்டர், செக்க சிவந்த வானம் என சமீபத்திய தழுவல் படங்கள் எல்லாம் அதன் அசலை விட சுமாராக தான் இருக்கிறது. ஆங்கில படங்கள் உலகம் முழுக்க ஒரே நேரத்தில் திரையிடப்படுகின்றன.

அவெஞ்சர் படம் பார்த்து விட்டு அதைவிட சுமாரான ஒரு படத்தை அதே போல தமிழில் எடுத்தால் யார் பார்ப்பார்கள். என்னதான் இருந்தால் நம்ம ஊரு படம் மாதிரி வருமா என்ற உணர்வை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தாது யார் தவறு.

பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும் என சொல்லிக் கொண்டு சிறிதும் தொடர்பில்லாத கதைகளம் நமக்கு எதற்கு. அதைதான் ஆங்கிலத்திலேயே பார்த்துக் கொள்கிறோமே. பாகுபலி ஓடியதற்கு அதன் விஷுவல் காட்சிகள் மட்டுமே காரணம் இல்லை. அதன் ராஜ கதையமைப்பு, ரசனைக்கேற்ப இயக்கிய விதமே. அது இல்லாமலே 2.0 மக்களின் வரவேற்பை பெறாமல் போனதி நிதர்சனம்.

இதைவிட மோசமான ஒரு வழக்கம் இப்போது தொற்றிக் கொண்டுள்ளது. அதுதான் உலகத் தரத்தில் ஒரு தமிழ் படம். உலகப்படம் என்றால் என்னவேன்றே இன்னும் யவருக்கும் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு படம் அந்த மொழியை தாண்டி அதன் சமூகத்தை தாண்டி எல்லாவகையான மக்களாலும் ரசிக்க படுவது தான் உலகத் திரைப்படம். அவ்வாறான படங்கள் அந்த பகுதி மக்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்திருக்குமே தவிர ஹாலிவுட் படம்போல வானில் பறந்து கொண்டு இருக்காது.

உலகப்படம் என சொன்னாலே ஈரானிய படங்களை உதாரணமாக சொல்லலாம். Childrens of heaven, Songs of sparrows, The Colors of paradise போன்ற படங்கள் அன்றைய ஈரானிய மக்களின் வாழ்கை பதிவாக மட்டுமே இருக்கிறது.

அன்றைய வீடு முதல் இன்றைய ToLet வரை தமிழில் நல்ல படங்களும் வருகை தந்துக் கொண்டுதான் இருக்கின்றன. காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றம் புரிதல் என சில நல்ல படங்களுக்கு மத்தியில் மற்ற கமர்சியல் சினிமா திரையை சூழ்ந்து கொள்வதால் பல படங்கள் திரையில் காட்சிப்படுத்த படமலேயே கடந்து விடுகின்றன. அதுவே ஒத்த செருப்பு படத்திற்கும் நிகழ்ந்துள்ளது.

மசாலா படங்கள் கட்டாயம் வேண்டும்தான், அதற்கு மாற்றுகருத்தே இல்லை. அவையே வசூல் ரீதியாக ஒரு சினிமா தளத்தை மேலுயர்த்தும்.இயக்குனருக்கும் நாயகனுக்கும் ஒரு அந்தஸ்தை கொடுக்கும். பல வித்தியாசமான படங்களை எடுக்க தைரியமளிக்கும்.

முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் மசாலா வகை தான். அதுவே பல்வேறு பட்ட ரசிகர்களை கொண்டாட்ட மடைய செய்கிறது. அதற்காக ஒன்றுமே இல்லாமல் ஒரு கதையை எடுத்துவிட்டு விளம்பரம் மூலம் ரசிகர்களிடம் திணிப்பது கேளிக்கையானது.

வெறும் கோடிக்கணக்கில் வசூல் சாதனை என மக்களை ஏமாற்றி கொண்டு தயாரிப்பாளரையும் ஏமாற்றி என்ன பயன். படம் சரியில்லை என்றால் அதை நேரடியாக சொன்னால் தான் கலைஞன் அறிவான். அடுத்தடுத்த படங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள்.

அதைவிடுத்து உப்பற்ற சினிமாவுக்கு வசூல் வெற்றி கொடுத்தால் அரைத்த மாவை தான் மறுபடியும் அரைப்பார்கள். ரசிகர்களாகிய நாமும் திருத்திக் கொள்ள வேண்டிய செயல் இது.

ஆரம்ப கால ரஜினி படங்கள் எல்லாம் மசாலா வகைதான். ஆனால் அதில் ஒரு தனித்துவம் இருந்தது, ரசனை இருந்தது. அதுவே மக்களை திரையரங்கை நோக்கி கொண்டு போனது. கடந்த இரு மாதங்களில் தமிழில் வெளியான படங்களை அலசி பார்த்தால் வெறும் சக்கையாக தான் இருக்கிறது.

மாதம் என்ன,கடந்த ஐந்து வருடத்தில் எந்த தமிழ் படத்தை மிகப்பெரிய சாதனை படமென சொல்ல முடியும். தெலுங்கு பாகுபலி, கன்னட கேஜிஎப், ஹிந்தி பிகே என மற்ற மொழி படங்களையே கொண்டாடி காலம் கழித்து விடுவதா.

எத்தனை அரிய படங்களும் பரிசோதனைகளும் இருந்தது தமிழில். திறமையான பல்வேறு வல்லமைகளை தமிழுலகம் சினிமாவிற்கு தந்துள்ளது. கமலுக்கு தான் வயதாகிவிட்டது, அவர் திசையும் மாறிவிட்டது. அதற்காக மற்றவர்கள் பயணிக்காமல் நின்றுவிடுவது என்ன நியாயம்.

நவீன இணைய வளர்ச்சி எல்லாவற்றையும் கையடக்கமாக கொண்டு வந்து விட்டது. எந்த மொழி படத்தையும் விரும்பிய வேளையில் கண்டு ரசிக்க முடியும்.

அமேசான், நெட்பிளிக்ஸ் என புதிய தொழிற்நுட்ப புரட்சி யுகத்தில் மக்களின் ரசனைக்கேற்ப திரைத்துறையும் நிறைய புரட்சி செய்ய வேண்டியுள்ளது. பழைய பஞ்சாங்க முறைகளை விடுத்து புதுமையை ஏற்படுத்த வேண்டிய நேரமிது.

என்னதான் விண்ணை பிளந்து வரும் விசுவல் காட்சிகள் இருந்தாலும் நம் மக்களின் உணர்வையும் காதலையும் சொல்ல நம் மொழி படங்களால் மட்டுமே முடியும். அதனாலே பாலசந்தரும், பாரதிராஜாவும் இன்றும் தமிழ் சினிமாவின் இணையில்லா ஆளுமைகளாக உள்ளனர்.

கதையானது மக்களிடம் இருந்து வரவேண்டும். ஆனால் உண்மை தமிழனாய் இருந்தால் ஷேர் செய் என்றவகையில் குறிப்பிட்ட சமூக கருத்தை திணிக்கும் படங்களை எல்லாவகை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுவது முட்டாள்தனம்.

சரியாக விளம்பரம் செய்யாமல்விட்ட படத்தையும் அதன் திரைமொழிக்காக வெற்றி விழா படமாக மாற்றிய கதைகள் இந்த மண்ணில் ஏராளம். மக்களுக்கு ஏற்ற கதையை தேர்ந்தெடுத்து திரையிட்டாலே போதும்.

விமர்சனம் கூட தேவையில்லை. நல்ல படம் என்றால் அதை பல்லாக்கு போல தோளில் ஏற்றிவைத்து கொண்டாடி பவனி செல்பவன் தமிழ் ரசிகன். உழைப்பை சிந்துங்கள் தங்க காசுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

 

Related posts

தமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954

Seyon

பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ

Seyon

25 Deep, Emotional and Thought-Provoking Movies, You Must See

Seyon

Leave a Comment