Image default
Featured Tradition

யாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார், அகம். 252 : 1-4

அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆன்மீகம் :

ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்.

யாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர்.சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார்.

இதற்கான பிண்ணனி கதை கதாநாயகன் சந்திரனின் காதலில் தொடங்குகிறது.இரவின் நாயகனான நிலவன் தாரா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு அவளை தன்னுடன் அழைத்தும் வந்துவிட்டார்.ஆனால் தாராவோ தேவர்களின் குருவான பிரகாஸ்பதியின் மனைவி(!?).

குரு பிரகாஸ்பதி கடும் சினம் கொண்டு போர் புரிய தேவர்கள் கூடி தாராவை தன் கணவனோடு மீண்டும் இணைய சொல்கிறார்கள்.அதே சமயம் தாரா தான் கருவுற்றிருப்பதை அறிகிறாள்.(அப்பவே தாராவால பிரச்சினை -o-).

Goddess tara

காதலனும் கணவனும் அது தன் குழந்தைதான் என வாதாட தேவர்கள் தாராவிடம் உண்மையை உரைக்குமாறு வினவியும் அவள் கூற மறுத்து விடுகிறாள்.ஒரு கட்டத்தில் கருவிலிருக்கும் குழந்தையே தாயிடம் யார் காரணம் என கேட்க வேறு வழியின்றி சந்திரன் என்ற உண்மையை சொல்லி விடுகிறாள்.

முன்னரே கோபத்தில் இருந்த குரு பிரகாஸ்பதி இதை கேட்டத்தும் சினம் பொறுக்காமால் சாபம் விட துவங்கினார்.சந்திரனால் உனக்கு பிறக்கும் குழந்தை ஆணாகவும் இருக்காது, பெண்ணகாவும் இருக்காது. தேவலோகத்தில் அமைதியை நிலைநாட்ட இந்திரன் அந்த குழந்தையை உலகம் பிரகாஸ்பதியின் மகனாகே அங்கிகரிக்கும் என அறிவித்தார்.

புதன் ஆண் கடவுளாகவே உலத்தால் அறியப்படுகிறார்.அவர் மனைவி பெயர் இளா. இவளும் அவரை போன்றவரே அதாவது ஆறு மாதம் புதனின் மனைவியாகவும் ஆறு மாதம் அரசாளும் ஆணாகவும் இருப்பார்.

தமிழில் இளை என்றால் இளையர்/மக்கள் என பொருள்படும்.ரிக் வேதத்தில் சரஸ்வதி போன்ற நதிகளுடன் குறிப்பிடப்படும் இளா நதி(தற்போது இளி)

சீனாவிற்கு அருகாமை நாடான கஜகஸ்தானில் உள்ளது.ஒருவேளை பாரதம் அதுவரை பரந்திருக்குமோ.

கிழமைகளில் கூட புதன் ஆறு கிழமைகளுக்கு மத்தியிலே வரும்.சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் பகலில் 420 செல்சியஸ் அளவிற்கு வெப்பமாகவும் இரவில் -170 செல்சியஸ் குளிராகவும் இருக்கும்.புதன் கிரகத்தின் ஆங்கில பெயர் Mercury(பாதரசம்).தனிம அட்டவணையில் காணப்படும் ஒரே திரவம் போன்ற தனிமம் பாதரசம்.இது திரவமா அல்லது திடப்பொருளா என்று குழப்பம்   வரும் தனிப்பட்ட குணமுடையது.

இந்து புராண கடவுள்கள் எல்லோருக்கும் ஒரு வாகனம் இருக்கும். இருபாலினமான புதனின் வாகனமும் அப்படித்தானே இருக்க வேண்டும்.ஆண்மையின் கம்பீரமாக சிங்கத்தின் உடல், பெண்மையின் கர்வமாக யானையின் தலை.

பண்டைய தமிழர்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம்.மனித இனத்தை ஒன்றுபடுத்தவும் மக்கள் அச்சமின்றி நெறிகளை பின்பற்றி வாழவும் அவர்கள் கடவுள்களையும் கோவில்களையும் உருவாக்கினர்.கடவுள் நம்பிக்கை நன்மையை காத்தன, தீயவற்றை அழித்தன.

மனிதனின் அசாத்திய சக்திகள் கடவுள்களின் வரமாகின.அப்படியான கடவுளின் இருப்பிட பாதுகாவலர்கள் எப்படி இருக்க வேண்டும்.யாளிகள் கோவில்களின் பாதுகாவலன், மனிதனை கடவுளின் வசிப்பிடத்திற்கு வழிநடத்துபவை.

அறிந்தவை :

dsc_03921யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன.

யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின் (மகரம்) தலைகளையும் சில நேரம் நாய், எலி போன்ற வேறு சில விலங்குகளின் உருவத்தையும் கொண்டுள்ளன.பாம்பின் வால் தோற்றத்தை முழுமை செய்கிறது.

யாளி யானையின் பலத்தையும் சிங்கத்தின் வேகம் மற்றும் ஆற்றலையும் நாகத்தின் பய காரணியையும் ஒரு சேர கொண்டது.

பழமையான கோவில்களின் மண்டப தூண்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழுஉயர, முப்பரிமாண யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் பார்த்திருப்போம். பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

யாளியானது, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும். யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம்.ஆனால் வெளியே எடுக்க முடியாது.இதனை யாளி முட்டை என்பர்.

சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது.

யாளிகள் கோவில்களை பாதுகாப்பதுமாகவும் மக்களை ஆலயத்திற்கு வழிநடத்துவதாகவும் நம்பப்பட்டது.இரு வகையான துதிக்கை வடிவங்கள் கோவில்களில் வழக்கத்தில் உள்ளன.ஒன்று பிள்ளையாரை போன்ற உருவம் கொண்ட கஜ யாளி மற்றொன்று ராஜ யாளி, கற்பகிரகத்தின் இரு வாசலையும் அலங்கரிப்பவை.

Yali mandapa

உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழுஉருவ, முப்பரிமாண சிலைகள் கிடையாது.

இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25000 ஆம் ஆண்டு காலத்திலேயே வழக்கத்தில் இருந்து பின்னர் கி.பி 800-ல் தான் மீண்டும் கோவில்களில் இடம்பெற்றன.முதலாம் ஆதித்யன் மற்றும் பராந்த சோழனால் கற்றாளி எனப்பட்ட செங்கற்களுக்கு பதிலாக கருங்கற்களை கொண்டு முதன்முதலில் கோவில்கள் கலைநயத்துடன் கட்டப்பட்டன. அதில் தொடங்கி மற்ற கோவில்களில் யாளி முக்கிய இடம் பெற்றது.அது தென்னிந்திய கோவிலின் கலை அம்சமாக விளங்கியது.

Yali 3vie

அதற்கு முந்தைய கோவில்களில் இந்த சிலைக்களுக்கான தடயம் யேதுமில்லை.மாமல்லபுரம், அஜந்தா,புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

அனுமானம் :

சில அறிக்கைகள் இப்படி ஒரு விலங்கினம் இந்திய வனப்பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் எனவும், கொடூர இந்த வேட்டை விலங்கை கண்டு மக்கள் அச்சம் கொண்டிருந்தனர் என்றும் கூறியது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கத்தினால் இவை மெல்ல அழிந்திருக்கலாம் எனவும் கருதியது. ஆனால் இந்த கோட்பாட்டிற்கு எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.

தற்போது பெரும்பாலான ஆராச்சியாளர்கள் யாளி என்பது இந்து புராணத்தில் வரும் மற்றுமொரு கற்பனை கலப்பின விலங்கு மட்டுமே என்கிறார்கள். மேலும் எந்த தடயமோ அல்லது தொல்பொருள் படிவமோ இவை விலங்கினம் என இன்றுவரை நிரூபிக்கவில்லை.

டைனோசர் என்று சொல்லப்படும் உயிரினத்தின் உடலமைப்புக்கும், யாளியின் உடலமைப்புக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதால் யாளிதான் உண்மையில் டைனோசராக இருக்கலாம் என்றொரு கோட்பாடு உள்ளது.யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்றும் ஒரு தரப்பால் நம்பப்படுகிறது.

அதன்படி குமரிக்காண்டம் ஆழிபேரலையால் அழிவுற்றபோது அங்கிருந்து கடந்து வந்த மக்கள் அறிந்த விலங்குதான் யாளி. எனவே அது டைனோசரின் வழிதோன்றலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.ஆனால் குமரிக்காண்டமே இன்னும் ஏற்றக்கொள்ளப்படவில்லை.

null

யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பை பெற்றது.யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், இதுபோல் ஏன் இதுவரை எழுதவில்லை ,ஆங்கில படங்களுக்கு நிகராக ஒரு புனைக் கதையை நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை என கேள்வி கேட்டது அந்த புத்தகம்.

அந்த புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு தொடங்குகிறது – “இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இத்தகைய விலங்குகளை பின்னணியாகக் கொண்டு உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலக மக்களை பெருமளவில் கவர்ந்தன.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. தென் இந்தியாவில் காணப்படும் இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் ஒரு பிரமாண்ட விலங்கின் உருவத்தை சிலைகளாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்து புராணத்தில் சொல்லப்படும் எந்த செய்தியும் இதுவரை ஆன்மீகமாக மட்டும் இருந்ததில்லை.விமான வடிவமைப்பு, நவகிரகங்கள் பற்றி வானியல் சாஸ்திரங்கள், முனிவர்களின் அசாத்திய சக்திகள் அனைத்தும் அறிவியலின் படி சாத்தியம் என அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

நாம் கடவுள் என நம்புவோர்கெல்லாம் ESP (Extra sensory perception) சக்தி இருந்திருக்கலாம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.முதலில் சந்தேகித்து பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட இந்திய தத்துவங்கள் எத்தனையோ உண்டு(யோகா போன்றவை).

தேவர்களின் தலைவனாக இந்திரனின் வாகனமான ஐராவதம் பற்றி நாம் அறிவோம்.வெள்ளை நிற யானை பல துதிக்கைகள் அல்லது பல தந்தங்கள் கொண்டது போல அதன் தோற்றம் இருக்கும்.ஆரம்பத்தில் மேற்கத்திய உலகம் ஐராவதத்தை ஒரு புனைவு மிருகமாக கூட ஏற்கவில்லை ஒரு முக்கிய எலும்பு படிவத்தின் கண்டுபிடிப்பு வரை.Gomphothere எனப்படும் இந்த அழிந்துவிட்ட யானை இனவிலங்கின் தலைபகுதியில் நான்கு தந்தங்கள் இருந்தன. இந்த விக்கி தளத்தை படியுங்கள்.

Airavata

Gomphothere பற்றிய முழு விக்கிபீடியா பதிப்பிலும் இந்திய புராணம் பற்றியோ ஐராவதம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை(??).ஒருவேளை யாளியின் தடயங்கள் கூட இன்னோரு கண்டத்திலோ அல்லது முறையான ஆராய்ச்சிகளின் மேற்கொண்டால் இந்தியாவிலேயோ கண்டுபிடிக்கப்படலாம்.

“The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths.
It is the only religion in which the time scales correspond to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long. Longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang.”

― Carl Sagan, Cosmos

யதார்த்தம் :

நாம் வாழும் யதார்த்த உலகிலிருந்து யோசித்தால் இப்படியேல்லாம் ஒரு மிருகம் இருக்க வாய்ப்பேயில்லை, அப்படியே இருந்தாலும் அதனால் நமக்கென்ன கிடைக்கப்போகிறது. இந்த எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு தான். அதே நேரத்தில் அப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்க வேண்டும்? அவை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற படைப்பாற்றலின் மிச்சங்கள்.

ஒரு சாதாரண மனிதனின் கனவில் வந்த கொடிய மிருகமாய் கூட இருக்கலாம்,ஆனால் அவன் தன் அச்சத்திற்கு அளித்த உருவமே யாளிகலாகிருக்கலாம்.யாளிகள் வெறும் சிலைகள் அல்ல. நம் முன்னவர்களின் எண்ணற்ற கற்பனை மற்றும் படைப்புகளை  நினைவு படுத்தும் ஸ்துபிகள்.

சிந்தித்து பாருங்கள், சுஜாதா,ஜெயமோகன் போன்றோரின் ஒரு சில புத்தகங்களையும் படங்களையும் தவிர சிறந்த அறிவியல் புனைவுகள் உங்களுக்கு நினைவுண்டா. நம்மால் ஏன் சிறந்த Sci-Fi, Fantasy கதைகளை உருவாக்க முடியவில்லை.

இன்னமும் Harry potter, Lord of the Rings, கேம் ஆப் த்ரோன்ஸ்(Game of thrones), Princess Mononoke போன்ற படைப்புகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே வேறொரு நாட்டில் யாளி படைக்கப்பட்டிருந்தால் அவை இறக்கைகள் கட்டிவிடப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கும், யாளிகளே இந்தியாவின் டிராகன்கள். நாம் தினசரி கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் அவை நம்மால் பிரம்மிப்பாய் கண்டு களித்து போற்றப்பட வேண்டியவை.


Related posts

சர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு

Seyon

நாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்

Seyon

அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

Seyon

8 comments

shivasubramani January 10, 2016 at 11:51 am

Reblogged this on shivasubramani.

Reply
krishnamoorthys March 18, 2016 at 4:07 am

அற்புதம் .வெகு பல நாட்களாக யாளி பற்றிய என் தேடல்கள் சந்தேகங்களுக்கு ஒரு ஆரம்பம் கிடைத்து இருக்கிறது .நல்ல ஆய்வு ,புதிய பார்வை ,சிறந்த கோணத்தில் முன்னிறுத்தும் சிறப்பு .அழகான இணையதள வடிவமைப்பு (முதல் முறையாக வாசிக்கிறேன் ) நல்ல படங்கள் தேர்வு .

தணிகை குமார், மணி எழுதிய நாவல் அந்த பதிப்பத்தாரிடமே கிடைக்கவில்லை உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் அலை பேசி 9003925777.

Reply
shan March 18, 2016 at 4:54 am

நன்றி தோழரே ..அறிந்தால் அறிவிக்கிறேன்..
இடம்பெறாத புதிய கருத்துகள் இருந்தால் குறிப்பிடவும்..

Reply
Arun December 28, 2016 at 1:02 pm

எனக்கு இரு சந்தேகங்கள் .

1. யாழி அல்லது யாளி ?

2. யாழி / யாளி என்பது தமிழ் விலங்கு தானே? எப்படி அது இந்திய விலங்காகும்? இது தமிழ் மன்னர்கள் ஆண்ட மண்ணில் உள்ள கோயில்கலில் மட்டுமே காணப்படுகிறது .

Reply
shan December 28, 2016 at 3:48 pm

1.யாழி எனவும் வழங்கப்படுகிறது.
2.யாளிகள் தமிழ் மண்ணின் விலங்காக இதுவரை உள்ளது. ஆனாலும் இந்திய புராணங்கள் என்ற கருத்தில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மைசூர் மற்றும் தாய்லாந்து போன்ற சில வெளிநாடுகளிலும் வியாலா, லியோகிராப் போன்ற சிலைகளும் யாளியை ஒத்தவாறே உள்ளன.

Reply
Sangavi Jayabal February 15, 2019 at 8:59 pm

this is very useful

Reply
சமணர் கழுவேற்றம் - வரலாற்று விவாதம் - மாயோன் June 5, 2019 at 5:14 pm

[…] உதாரணமாக கோவில்களில் காணப்படும் யாளி யை முழவதும் நிஜமென கருதமுடியாது. […]

Reply
பெர்முடா முக்கோண மர்மம் விலகியது - மாயோன் September 4, 2019 at 11:12 pm

[…] கதை வித்தியாசமானது. தமிழர்களுக்கு குமரிக்கண்டம் போல கிரேக்கர்களின் அழிந்த நகரம் தான் […]

Reply

Leave a Comment